எதிர்பார்ப்புகள்

சின்னப்பயல்


என் காதலியின்
எதிர்பார்ப்புகள்
அதிகம் ஒன்றுமில்லை..

எனக்கென
மட்டும் வாழ்வாயா ?
எனது
பாதுகாப்பை உறுதி செய்வாயா ?
எனக்காகப்
பரிந்து பேசுவாயா ?
என்னை
அவ்வப்போது சிரிக்க வைப்பாயா ?
என்னைப்
பிறர் முன்னில் அவமதிக்காமலிருப்பாயா ?
என்னை
உதாசீனம் செய்யாமலிருப்பாயா ?
என்னையும்
ஒரு சக உயிரென மதிப்பாயா ?
உன்னுடைய
துன்பங்களை என்னுடன் பகிர்ந்து கொள்வாயா ?
எனது
மகிழ்வுகளை ஆராதிப்பாயா ?
உனது
விருப்பத்துடன் என்னுடன் ஊடுவாயா ?
எனது
விருப்பத்துடன் என்னுடன் கூடுவாயா ?

இது போன்றவையே
அவள் என்னில் எதிர்பார்த்தவைகள்
என் கவிதைகளையல்ல….!

Series Navigation

This entry is part [part not set] of 34 in the series 20101107_Issue

சின்னப்பயல்

சின்னப்பயல்

எதிர்பார்ப்புகள்…

சேவியர்.


கேள்விகளின் முனைகள்
எப்படி வேண்டுமானாலும் வளையட்டும்
கவலையில்லை,
பதில் மட்டும் அன்பு என முடிந்தால்.

பொன்வண்டுகளோடு பாடித்திாிவதும்,
பூக்களுக்குப்
பொன்னாடை போர்த்துவதும்,
கயல் மீன்களுக்கு
கவிதை கற்றுக் கொடுப்பதும் சுகம் தான்.

அழுக்கடையாமல் துவைத்து வைத்த
உங்கள்
பட்டுக் கைக்குட்டைகள்
கனவுகளுக்கு வியர்வை துடைக்கட்டும்
தவறில்லை….

ஆனால்…
கவிதைகளோடும் புன்னகையோடும்
முடிச்சிட முடியாத
இன்னொரு பாகம் இருக்கிறது
வெளிச்சத்துக்குள் விழுந்த இருட்டாய்..

பசியின் பள்ளத்தாக்குக்குள்
பிரசவிக்கப்பட்ட
ஒரு மஹாஜனம்.

கலைகளால் கழுவப்படாத
ஓர்
வறுமை வரலாறு.

கருப்பொருளாய் மட்டும்
கடையப்படும்
ஓர் கண்ணீர்க்கடல்.

என்றேனும் ஓர் கவிதை,
என்றேனும் ஒரு நாள்,
தன்
சின்ன அலகை சட்டெனத் திறந்து
கண்ணீர் துடைக்குமென்ற நம்பிக்கையில்
தொடர்ந்து நடக்கிறது
சிறகுத் தொழிற்சாலை.

Series Navigation

This entry is part [part not set] of 18 in the series 20011007_Issue

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்