கீதாஞ்சலி (25) நெஞ்சில் மலரும் நறுமணம்! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


அல்லி மலர்கள் விரிந்து பொங்கிய
அன்றைய நாளில்,
அந்தோ!
எந்தன் மனம் ஏனோ
அலைமோதிக் கொண்டி ருந்தது
எனக்குப் புரியாத
நிலையில்!
முற்றிலும் காலியாய் இருந்தது
எனது பூக்கூடை!
நறுமண மலர்கள் கிடந்தன
பறிப்பா ரின்றி!
அன்றைய தினமும்
அடுத்த நாளும் சோகம் என்னை
கவ்விக் கொண்டது!
கனவுக் காட்சியை ஆரம்பிக்க
மனத்திரை திறந்தது
எனக்கு!
தென்திசை அடிக்கும் காற்றில்
விசித்திரமான
இனிய துளிகளாய் எங்கிருந்தோ
மணம் கமகமவென எழுவதை
உணர்ந்தேன்!

எதிரில் நுகர முடியும்
புதிரான அந்த
இனிய மணம் எனது இதயத்தில்
ஏக்க வலி உண்டாக்கும்!
அரிய மணத்தை ஆர்வமாய்ப்
பரப்பி விடும்,
வேனிற் பருவம் தேடி எனது
நெஞ்சை
நிரப்புவது தெரிந்தது!
அருகிலே
உருவான மணம்
என்னைச் சார்ந்த தென
தெரியாமல் போனது
அந்நேரம்!
பூரண இனிமைக் கிளர்ச்சி
நேராக எனக்குத்
தெரியாமல் இருந்தது,
எனது
இதய ஆழத்தில் மலர்ச்சி யுற்று
உதயம் ஆனதென்று!

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (May 29, 2005)]

Series Navigation

This entry is part [part not set] of 34 in the series 20050206_Issue

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா