கீதாஞ்சலி (6)-உன்னிசைக் கீதம் (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


இன்னிசையில் கானத்தை,
என்னரும் அதிபனே!
எவ்விதம் நீ
பாடுகிறாய்
என்பதை நான் அறிந்திலேன்!
உன் கீதத்தைக்
கேட்டு
காலங் காலமாய்
மெளனத்தில் மூழ்கி
உளம் வியப்பில் ஆழ்ந்தது!
உன் கானத்தில் எழும்
ஒளிச்சுடர்
உலகெங்கும் பரவி விளக்கேற்றும்!
உன் கானம் விடுகின்ற
உயிர் மூச்சு
அண்டவெளியில்
வான் விட்டு வான் தாவும்!
புனித நீரோடை
போல
கரடு முரடான
கற்பாதைத் தடைகளைக்
கடந்து
முன்னோக்கி விரைந்தோடும்,
உன் கானம் !

பாடிவரும் உன் கானத்துடன்
ஒன்றாய்க் கலந்திட
நாடி ஏங்கும் என்னிதயம்!
வீணாய் அதற்கு
ஓரிசைக் குரலைத் தேடி
போராடும்,
என் மனது!
உரை நடையில் உன் கானத்தை
ஓதுவேன் ஆயினும்
இசை கலக்க முடியாமல்
குழம்பிக்
கூக்குர லிடுவேன்!
கால எல்லை இல்லாத
உன்னரும்
இன்னிசைக் கானத்தின்
பின்னலில்
என் இதயத்தைக் கட்டி
அந்தோ நீ!
வசப்படுத்தி வைத்துள்ளாய்
என் அதிபனே!
****

jayabarat@tnt21.com [S. Jayabarathan] [November 30, 2004]

Series Navigation

This entry is part [part not set] of 50 in the series 20041202_Issue

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா