கைநுனி மின்மினி

க்ருஷாங்கினி


ஏதுமற்றுத்தான் நான் தெருவில் இறங்கி நடந்தேன்
என்னைச் சுற்றி ஊடும் பாவுமாக ஏதேதோ
கம்பிகள், ‘வயர் ‘கள்; தடிமனாயும், மெல்லியதாயும்,
கருப்பாயும், தட்டையாயும், ‘காஜா ‘வைச் சுற்றிய
தையல்களாய் என்னை ஊடுருவி ஊடுருவி
முன்னும் பின்னுமாய் கட்டி இறுக்கின- மூச்சு
சற்றே தடுமாற முன்கைகள் நீட்டி நீரை
விலக்கி விலக்கி மெல்ல இருளில் முன்னேறினேன்.
மின்சாரம் போனதால் சில கட்டுக்கள்- என்முன்
செயலிழந்து இறுக்கம் தளர்ந்து, வழியெங்கும்
நெளிந்து பாம்பெனச் சுருண்டு கிடந்தது.
தடைபட்ட மிசாரம்; இயங்காத தொலைக்காட்சி.
கம்பத்தில் கூடிப் பின் பிரியும் இன்னும் சில-
மேலெங்கும் திரிந்து கிடக்கும், செயலிழந்து.
நீலச்சிறு சதுரத்தில் மின்னும் கைப்பேசி
அவரவர் கைநுனி ஒளிசிந்தி
உறவைத் தொடர, பிரிய மின்னி மின்னிக்
கண்சிமிட்டி கைநுனியில்
ஒற்றைக்கை காதுபொத்த, மற்றொன்றோ
அடக்கமாய் வாய்பொத்தி
நெடுவழிப் பாதையெங்கும் இருளுடன்
உறவுகொண்டு அலைந்தன.

எந்தக் கம்பியும் இழுக்காமல் அறுகாமல்
என்னில் செருகிச் செருகி
தடையின்றி கட்டின்றி நேர் தெரியாக் கம்பமின்றி
அவரவர் கை நுனியில் பெரு நம்பிக்கை இழையோட,
எங்கெங்கோ செல்கின்றனர் நெடும் பயணம்-
ஒளிரும் மின்மினியென பறந்து பறந்து.
____
‘க்ருஷாங்கினி ‘

Series Navigation

This entry is part [part not set] of 45 in the series 20060120_Issue

க்ருஷாங்கினி

க்ருஷாங்கினி