தேடுகிறேன் தேவதையே !

ஸ்ரீனி.


கனவுக்கோட்டைகளின் கதவுகளினின்று
வெளியே தள்ளப்பட்டு
போர்வை வாயிலில் சூரியனை எதிர்கொண்டு
முகம் சுருங்கும் சோம்பல் காலைப்பொழுதுகள்.
காலத்தின் நகர்தலை காலண்டரின் படபடப்பு சொல்லினும்,
நேற்று போல் தோன்றும் உன்னோடிருந்த நாட்கள்..

பிரிவுக்கு விடைகொடுத்து பின்னிப்பிணைந்த நாட்கள்..
பனிமூட்டக் காலைகளில் பனித்துளி தாங்கும் புதுமலராய்
ஒற்றை முடியில்
சொட்டும் ஈரத்துடன் நீ என்னை எழுப்பிய நாட்கள்..
என் சோம்பல் நேரங்களில்
உன் படபடக்கும் விழிகளும்,துடிக்கும் உதடுகளும்
கடிகாரக் கால்களும் கண்டு
நீ சொன்னதை மறந்தாலும், சோர்விழந்து நான் எழுந்த நாட்கள்..
மணநாள் மறுபடி வருமெனும் சமாதானத்தை மறுத்து,
எங்கோ வெறிக்கும் உன் குளிக்கும் விழிகளின்
கொந்தளிப்பை மறந்து, ஊடல் இன்பத்தில்
இந்த டாவின்சியின் மோனொலிசாவாய்
உன்னை ரசித்து மகிழ்ந்த நாட்கள்…
‘மலருக்குள் மலர் ‘ – என் கவிதையைக் காட்டி
வெட்கத்தின் சாயலை உன் விழிகள் முதலாய் காட்ட
குழம்பிய என்னை, சற்று அழுந்தவே குட்டி
உயிரொன்று புதிதாய் உருகொண்ட சேதியை
என் காதிற்குள் ரகசியம் சொல்லி,
என் கழுத்தைக் கட்டிக்கொண்ட நாட்கள்…
இன்று,
மஞ்சள் மாலை நேரங்களிலும்
இதமான காலை நேரங்களிலும்
தேடுகிறேன் தேவதையே உன்னை
‘உன்ன போலவே இருக்காடா உன் கொழந்த ‘
அதிலும் கூட என்னை தவிக்க விட்டு விட்டாய்,
உணர்வுள்ள என் பிரதிபலிப்பாய் நம் மகள்
உணர்வற்ற உருவப்படங்களாய் நீ..
அதிகாலை அவசரங்களிலும்,
மாலை மயக்கங்களிலும்,
மறந்து போய் உன்னிடம் உன்னைப்பற்றிச் சொல்லாதது பல..
ஒரேயொரு முறை உன் முகத்தோடென் முகம் உராய்ந்து
சொல்லாத சிலவற்றை சொல்ல நினைத்து
தேடுகிறேன் தேவதையே உன்னை.
மறுபடி எழுந்து வாயேன் !

Series Navigation

This entry is part [part not set] of 26 in the series 20020210_Issue

ஸ்ரீனி

ஸ்ரீனி

You may also like...