பச்சை மிருகம்

கவிநயா


கண்டதும் கொண்ட காதல் போல்
சிலரைக் கண்டதும் விழித்துக் கொண்டு உறுமும் மிருகம்
அதோ அவளைக் கண்டால்
இந்தப் பச்சை மிருகம் இலேசாக அசைந்து கொடுக்கும்
இதோ இவனைக் கண்டால்
காலைத் தூக்கத்தை இழக்க விரும்பாத சுகவாசி போல்
ஒற்றைக் கண்ணை மட்டும் திறந்து பார்க்கும்
அதோ அந்தக் குடும்பத்தைக் கண்டு விட்டால்
வெண்கலக் கடையில் புகுந்த மது உண்ட யானையாய்
பிளிறி ஆட்டம் போட்டுத் துவம்சம் செய்யும்
சமயங்களில் நன்றி மறவா விசுவாசி போல்
ஒரே ஒரு வார்த்தைக்கே மதிப்புக் கொடுத்து
வாலைச் சுருட்டிக் கொண்டு படுத்து விடும்
தறி கெட்டுத் திரியும் விடலை போல்
மதி கெட்டு அலையும் தருணங்களில்
‘சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும் ‘ என்ற கதைக்கு மட்டுமே
கொஞ்சமாவது கட்டுப்படும் –
இந்தப் (பொறாமை என்னும்) பச்சை மிருகம்…

— கவிநயா

meenavr@hotmail.com

Series Navigation

This entry is part [part not set] of 31 in the series 20050707_Issue

கவிநயா

கவிநயா