போரும் அமைதியும்

நாகரத்தினம் கிருஷ்ணா


அமைதியை அறிந்ததில்லை
கேட்டதுண்டு

நம்பிக்கையும் உறவும், நட்பும் நெருக்கமும்
சந்தேகம், பகை, எதிரி, இடைவெளியென
வேற்றுமைப் பெயர்களானதில்
அமைதியை அறிந்ததில்லை
கேட்டதுண்டு

இந்தியா – பாகிஸ்தான்
இஸ்ரேல் – பாலஸ்தீன்
ஈரான் – ஈராக்
குர்திஸ்தான் – கோசோவா
ஆப்கானிஸ்தான் இலங்கையென
தொடரும் பட்டியலில்
நாடுகள் எதுவாயினும்
படுகள உயிர்கள்
அமைதியை அறிந்ததில்லை
கேட்டதுண்டு

புயலுக்குப் பின்னே ‘அமைதி ‘
போருக்குப் பின்னே ‘அமைதி ‘
படித்ததுண்டு அறிந்ததில்லை.

கொலைவாட்கள் தீட்டப்படும்
கோப விநாடிகளில்
இரு பீரங்கி முழக்கங்களின்
இடையிலான பிரசவ நிமிடங்களில்
இரு போர்களுக்கு
இடையிலான சூன்ய நாட்களில்
அமைதியைப் பார்த்ததுண்டு
அறிந்ததில்லை.

இடிபாடுகளுக்கிடையே சிக்குண்ட
எமதில்லங்களில்
குழிபெயர்ந்த கொல்லைப்புறங்களில்
டாங்கிகள் தடம் பதித்த வீதிகளில்
சமாதியுண்ட சந்தைகளில்
அமைதியைப் பார்த்ததுண்டு
அறிந்ததில்லை.

எங்கள் விடியலுக்காக
காகங்கள் கரைவதில்லை
சேவல்கள் கூவிடாது

எங்கள் தோப்புகளோடு
எரியுண்டது அழகியல் மட்டுமல்ல
குயில்களும் அவற்றின் குரல்களும்
மயில்களும் அவற்றின் பரதமும்!

வண்டுகள் மொய்த்த
சோலைகளெங்கும்
ஈக்கள் மொய்க்கும் மனிதம்
அலகு சிவந்து காத்திருக்கும்
கழுகுகள் அவற்றின் வம்சாவளிகள்!

குழல்யாழ் மழலைச்சொல்
இவற்றினும் எங்கள்
அழுகுரல் மிக்கவினி தாம்
போர்க்குறளில் படிக்கின்றார்

மயானத்தில் உயிர்கள்
காத்திருப்பது
‘அமைதி ‘ வேண்டியல்ல
கல்லறைகளுக்காக
– நாகரத்தினம் கிருஷ்ணா
Na.Krishna@wanadoo.fr

Series Navigation

This entry is part [part not set] of 27 in the series 20030413_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா