காஷ்மீர் பையன்

துவாரகை தலைவன்


அமீரின் தாத்தா தாடிக்கு
வயது எழுபத்தைந்து
என்பார் அப்பா.
அண்டை வீட்டுத்
தாத்தாவின் தாடியலைகளில்
மிதப்பது பிடிக்கும்
காஷ்மீர் பையனுக்கு.
உள்ளே அழுத்தும் துயரங்களைத்
தேக்கி வைத்திருக்கும்
பள்ளத் தாக்குகளான
முகச் சுருக்கங்களுக் கிடையே
வெள்ளையருவியாய்த்
தொங்கும் தாடி.

தாத்தா தன் பேரன்
அமீருடன் விளையாடும் போது
சிரிப்பார்.
காஷ்மீர் பையனோ
பரமபத விளையாட்டில்
பாம்புகளிடையே
எப்போதும் உருண்டு கொண்டிருப்பான்.
“எனக்கும் ஒரு நாள்
தாடி வளருமா?”
“பரமபத விளையாட்டில்
காய்கள் பிழைப்பது
பகடைக் காய்கள்
விழுவதைப் பொறுத்தது”
இரண்டு நாட்களுக்கு முன்
தன் தோழன் அமீரை அழைத்து வரப்போன
காஷ்மீர் பையன்
அவன் கை ஒன்றை மட்டும்
கொண்டு வந்தான்.
தாத்தவுக்கு அந்த நாள்
முழுவதுமாய்
வெடித்துச் சிதறியது.

சுழற்றிப் போட்ட
பகடைக் காய்களில்
அன்று துப்பாக்கியுடன் வந்த இருவரின்
பழுப்பேறிய பற்கள்.
பரமபத விளையாட்டு அட்டையின்
பாம்புகள் எழுந்து
காஷ்மீர் பையனின்
கழுத்தைச் சுற்ற
வால்களெல்லாம் சேர்ந்து
தாத்தாவின் தாடியாய் நெளிந்தன.
கொடியவர்களின்
மண்டைக்குள் உருளும்
பகடைக் காய்களில்,
பலியிடப்படும் உயிர்களின் ஊசல்.

வாழ் நாள் முழுவதும்
வரி கட்டிய முதுமை
உயிர் வாழ வரி கொடுக்கும்
அடிமை தேசம்.
சிந்திக்கும் ஆற்றலின் கொலைதான்
ஜீவித்திருக்க செலுத்தும் வரி.
வெள்ளைத்தாடி ரோமங்களுக்கிடையில்
ஒளிந்திருக்கும் நிழல்களாய்
தாத்தாவின் வயது இதுவரை
உயிர்வாழ கொடுத்த வரிகள்.
சுருட்டுப் புகையை
இழுக்கும் போது
மின்னும் கங்கு – அவர்
இரு கண்களுக்குத் தாவ
ஒளிர்கிறது
இன்னும் மிச்சமிருக்கும்
உயிர் வாழும் உரிமை.

துயரை விரித்து
மூழ்கிக் கிடக்கும்
மரத்தடி யருகே
இப்போதும் தாடியை நேசிக்கும்
இரு சிறிய கண்கள்.
எழுந்தமர்ந்த மரமான
தாத்தாவின் விழிகளில்
பொங்கும் கண்ணீர்
முகத்தின் வெள்ளை விழுதுகளில்
ஒன்றைப் பற்றித் தொங்கும்
எறும்போடு ஆடும்
காஷ்மீர் பையன்.

நகராத கிளேசியராய் உறைந்த
காலத்தையும்
கண்ணீர் வெள்ளம்
கரைத்து ஓட
காணாமல் மறைந்து போகும்
விஷக் கொடுக்கு எறும்புகள்.

Series Navigation<< ஏதுமற்றுக் கரைதல்பாதைகளை விழுங்கும் குழி >>

This entry is part 79 of 43 in the series 20110529_Issue

துவாரகை தலைவன்

துவாரகை தலைவன்