வழக்குரை மன்றம்

லறீனா அப்துல் ஹக்


‘கோவலன் கொலையுண்டான்’
செய்தி வந்ததும்
காற்று மௌனித்து
அஞ்சலி செலுத்தியது.

* * * * * * *

இரவுக்கு வெள்ளையடிக்க
நிலவு பொழிந்தாலும் -தேச
இருட்டுக்கு அஞ்சி
காரைபெயர்ந்த குடிலுக்குள்-அவள்
கந்தல் சாக்கிலே சுருண்டுகிடந்தாள்.
கண்முன் கணவனின் சடலமிருந்தும்
அடையாளம் காட்டி அழமுடியாது
உணர்வுகளைப் புதைத்திட்ட
நேற்றைய அவலத்தில்
நொறுங்கியிருந்தாள்.

* * * * * * *

கண்ணகி தேவிக்கு
கண்கள் சிவந்தன
கூந்தல் அவிழ்ந்து’காற்றில் அலைந்தது
முகத்தினில் ரௌத்திரம்
தாண்டவம் புரிந்தது.

* * * * * * *

எட்டு மணிக்குள்
ஊர் அடங்கிற்று
நீண்டு ஒலித்தது
நாய்களின் ஓலம்!
ஒன்பது மணிக்கு
கதவு தட்டப்பட்டது
திறக்குமுன்பே – தாழ்
தெறித்து விழுந்தது.
உதைத்த உதையில்
கதவு கழன்றது.
“திடீர் சோதனை’
தமிழ்ப் பெண்களின் மீதே
ஐயம்” என்றனர்.
வேதனை விழுங்கி
வண்டியிலேறிட – அங்கே
இன்னும் இவள் போல்
இளைய புறாக்கள்!

* * * * * * *

எரிதழல் எழுந்து
இருவிழியாகிட
முகத்தினில் செந்தீ
மேவி விளங்கிட
வீண்பழி பொறுக்காது – கண்ணகி
வீறு கொண்டெழுந்தாள்!

* * * * * * *

சேலைத் தலைப்பினை
ஒருவன் இழுத்தான்
கத்திய வாயை
மற்றவன் பொத்தினான்
கட்டிக்காத்த “எல்லாம்” – அந்த
ஓடும் வண்டியில்
உருக்குலைந்தாயிற்று!
வதை முகாம்களில்
விசாரணைப் போர்வையில் – உயரதிகாரிகள்
மீண்டும் ஒருமுறை
மிருகமானார்கள்!

* * * * * * *

கண்ணகி கொங்கையைக்
கழற்றி எறிந்தாள்
பற்றி எரிந்தது
மாநகர் மதுரை!

* * * * * * *

வழக்குரை மன்றில் வனிதை…
விசாரணை, குறுக்குக் கேள்விகள்…
வார்த்தையால் மறுபடி
வல்லுறவு நடந்தது.
ஆனால்…
அன்று போல்
எரிப்பதற்கென்ன எஞ்சியிருக்கிறது,
ஏலவே “எல்லாமே”
கருகிவிட்ட ஒரு நாட்டில்?

ஆக்கம்: லறீனா அப்துல் ஹக்
(இலங்கை)

Series Navigationஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2 >>

This entry is part [part not set] of 43 in the series 20110529_Issue

லறீனா அப்துல் ஹக்- (இலங்கை)

லறீனா அப்துல் ஹக்- (இலங்கை)