ஏமாற்றங்களும்
ஏமாற்றுகிறவர்களும்
பயமும்
மரணத்தோடு
போட்டிபோட்டுக் கொண்டு
என்னை துரத்தியப்படி
ஓடுகிறேன்.
அவர்கள்
கால் வலிக்காகவாவது
திரும்பிவிடமாட்டர்களா!
என ஏங்கி
திரும்பி திரும்பி
பார்த்து ஏமாந்து ஓடுகையில்,
என் கால் வலிக்கு
ஒத்தடமானது
இந்த கவிதை.
எப்படி முடிந்தது … எப்படி?
என் செல்லமே என்றீர்கள்…
என் கண்ணே என்றீர்கள்…
என் கண்ணம்மா என்றீர்கள்…
என் உயிரே என்றீர்கள்…
என் பிரியமானவளே என்றீர்கள்…
என் பாசமிகு பைங்கிளியே என்றீர்கள்…
என் பிரியமான ஒருத்தி அம்மா நீ என்றீர்கள்…
என் இதயத்தில் நிரந்தரமாக குடியிருப்பவளே என்றீர்கள்…
என்றும் மாறா நேசத்திற்குரியவளே என்றீர்கள்…
இந்த ஜென்மத்தில் நீ தான் என் மனைவி என்றீர்கள்…
எல்லாவற்றையும் மறக்க,மறைக்க…
எப்படி முடிந்தது … எப்படி?
மறந்ததாக சொல்லி…
என்னை ஏமாற்றுகிறீர்களா?…
இல்லை…
மறைப்பதாக நினைத்து உங்களையே… ஏமாற்றிக்கொண்டிருக்கிறீர்களா?
படைப்பு…
அரங்கம் நிறைந்திருந்தது…
அனைவரும் ஆவலாய் காத்துக் கொண்டிருந்தனர்…
அருமையாக நிகழ்ச்சியை தொகுத்தேன் நான்…
அவரது முதல் குழந்தை (படைப்பு) என் கையில்…
அமோகமாக படைப்பு வெளியானது…
ஆனந்தத்தின் உச்சத்திற்கே சென்று விட்டேன் நான்…
ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன் இன்று…
அவர் அடுத்த படைப்பு வெளியீட்டுக்காக…
அழைக்க மாட்டார், என்னை நிச்சயமாய் என்று தெரிந்தும்…
உன்னோடு வாழாத…
என் முதல் திரை அனுபவம் …
நடிப்பதில் அல்ல…
படம் பார்ப்பதில்…
படம் மிகவும் பிடித்திருந்தது…
கதைக்காக அல்ல…
என் கணவருடன் பார்த்ததற்காக…
படத்தில் வந்த ஒரு பாட்டின் போது என்னவர் கூறியது…
இந்த பாட்டின் வரிகள் என்னை மனதில்…அல்ல…
என் மனதில் உன்னை வைத்து எழுதியது போன்று இருக்கிறது…
படத்தின் மற்றொரு பாடல் மிகவும் பிடித்தது…
எனக்கா அல்ல…
என்னவருக்காக… எனக்குப் பிடித்திருந்தது…
பாடல் எங்களுக்காகவே எழுதப்பட்டது போன்று இருந்தது…
இல்லையே…
படத்தில் நடித்தவர்கள் கூட இன்று இணைபிரியா ஜோடிகள்…
வாழ்க்கையில்…
நேற்றுதான் முதல் முறையாக
ஒரு அழைப்பு மணியை வாங்கி வந்தேன்
என் வீட்டில் மாட்டி வைக்க
ஒரு அழகிய கிளியும்
இரு மணிகளும்
ஒன்றுடன் ஒன்று பேசிக்கொள்ளுமாறு
அமைக்கப்பட்ட மணி அது
மிக நீண்ட நாள்
நெடுங்கனவு அது எனக்கு
ஒரு சதுர முற்றமும்
சிறிய சமையலறையும்
எனக்கு மட்டுமேயான படுக்கை அறையும்
நான்கு இலைகள் மட்டும் செடியை கொண்ட
என் வீட்டிற்கான
அழைப்பு மணி அது
எங்கு அழைப்பு சத்தம் கேட்டாலும்
தானாக திரும்பி பார்ப்பது
இயல்பாகி விட்ட
ஒரு நொடியின் முடிவில் தோன்றியது
என் வீட்டுக்கும் தேவையான
சத்தத்தின் ஒலி
குடிபோதையில் உன்னால்
தட்டியும்
உதைத்தும்
உடைக்கப்பட்டுவிட்ட கதவு
இனிமேல் என்னைப்போலவே அழாது
காயங்களை சுமந்து
இரவு எட்டைத் தாண்டிய
பரபரப்பில்
கால்கள் முளைத்த அவசரமாய்
அதுவும் கொலுசுகள் அணிந்த அவசரமாய்
அலுவலகம் விட்டு விரைவாய்
படிகளில் இறங்கி சாலை கடந்து
சந்து திரும்பி பேருந்து நிலையம் அடைவாய்
பூப்போன்ற உன்னை
தினமும் சுமந்து போகும்
அந்த பச்சை மினி பூக்கூடைக்குள்
புழுங்கிய ரோஜாவாய் ஏறி அமர்வாய்
ஜன்னலுக்கு வெளியே உன் அழகும்
ஜன்னலுக்கு உள்ளே உன் சோர்வும்
வழிகின்ற காட்சி காணாமல்
உனக்கான நிறுத்தத்திற்கு
மணிபார்த்துக்கொண்டே வருவாய்
விளிம்பில் சரியாய்க் கழுவினோமா;
மதிய வேளைச் சாப்பாட்டுப் பாத்திரம்
நினைவுகளில் பிசுபிசுக்கையில்
பூக்கூடை குலுங்கி நிற்கும்
உனக்கான நிறுத்தம்
படிகளின் இடைஞ்சலில் இறங்கி
மின்விளக்குகள் அணைந்த வீதியில்
விரைந்து நடப்பாய்
உனக்கு முன்பே
அவசரமான அவசரத்தில் கிளம்பி
உனது தெருமுனையில் வந்து
தேநீர் பருகிக்கொண்டிருக்கும்
எனது அநாகரிகத்தை அலட்சியப் படுத்தியவாறே…
நீங்கள் என் கவிதையொன்றில் இறங்கி நீந்த தொடங்கிவிட்டீர்கள் ஆக்ஸிஜன் சிலிண்டரை முதுகில் கட்டிக்கொண்டு சிரமமின்றி நீந்துகிறீர்கள் நீங்கள் எவ்வளவு ஆழமாக சென்றபோதிலும் ஆழத்தில் செல்வது போல உணராமலிருக்கிறீர்கள் ஏதோ அசாம்பாவிதம் நடக்கிறது என்று நினைக்கிறீர்கள் உண்மையில் கவிதையில் இறங்கவில்லை என்றும் கூட என் கவிதையை புரிந்து கொள்ள சிலப்பதிகாரத்தில் கூட பாய்ந்தீர்கள் எவ்வளவோ முயற்சிக்கு பின்னும் எதுவுமே அகப்படவில்லை இது கவிதையென்று எண்ணிக்கொண்டு கவிதையின் ரிஷிமூலம் தேடி எதிமுகமாய் நீந்திக்கொண்டிருக்கிறீர்கள் ஆறுபோலிருக்கும் அந்த கவிதையில் பல கிளைக் கவிதைகள் வந்து சேருவதை கண்டு கொண்டீர்கள்.அடுக்கடுக்காய் பல கவிதைகள் மிகுந்த சிரமம் கொண்டு நீந்தியபோதிலும் எதுவும் அகப்படாமல் நீங்கள் சிரமமுறுவதைக் கண்ட என்கவிதை கவிதை பற்றிய ஞாபகங்களை உங்களுக்கு நினைவுகளாக்குகிறது.கவிதையில் இறங்காமலே நீந்திக்கொண்டிருக்கிறீர்கள் கவிதைக்கு உள்ளும் புறமும் ஒரு கவிதையைப்போல.
முத்தமும் மூத்திரமும் உந்துதல் ஏற்படவேண்டும் சிறிது சிறிதாக அதிகரித்து வேறுவழியின்றி வெளிப்படலாம்; ஆரம்பத்திலேயே கூட செயலாக்கம் எந்த ஜாதிக்கும் மதத்திற்கும் உண்டு; பொருளாதார ஏற்றதாழ்வு இதற்கு இல்லை உந்துதல் முக்கியம் காலமும் நேரமும் காலையோ, மாலையோ இரண்டுமிணையும் சங்கமமோ- வேண்டும் உந்துதல்! உள் அறையோ அல்லது சிறு வெளியிலோ பரந்து விரிந்த பெரும் மைதானமோ ஆட்கள் அற்றோ நிறைந்து நின்றோ இளமை, நடுவயது ஏதென்றாலும் முதுமையிலும் தேவை உந்துதல்; முத்தத்திற்கு எதிராளியும் அவசியம் எங்கும் எப்போதும் முத்தமிடலாம், முன் சொன்னபடி உந்துதலில். மற்ற பல நாடுகளில் முத்தத்திற்குண்டு மூத்திரத்துக்கில்லை அனுமதி பொதுஇடத்தில்; இங்கோ முத்தத்திற்கில்லை மூத்திரத்திற்குண்டு அனுமதி எங்கும் என்றும், எப்போதும். —-
உயிரினில் இனித்திடவும் உருக்கிடும் துயரெலாம் கருகிடவும் யாழினை எடுத்தேனடா கண்ணா இனி நதியென பெருகட்டும் கவிதை என்றாய் என் வாழ்க்கையின் தவப்பயனே சொன்ன மந்திர வார்தைகள் மறந்தனையோ. வானுக்குள் மதிபோல அந்த மதியினுள் சுடரும் செங்கதிர்போல உன் யாழுக்குள் தேன்போல என் ஊனுக்குள் உயிரானாய் உள்ளத்துள் ஒளிர்கின்ற கவியானாய் வீணுக்குள் தள்ளுவையோ என்னை விளக்கென தூண்டி நீ அருளுவையோ
வரிசை அடையாளத்திற்கான அங்கீகாரத்தை வேண்டிக் கொண்டே நிற்கிறேன் . உறுமி அதிகார வார்த்தைகளைத் துப்பும் எவனும் பக்கமில்லை
இப்படி இருப்பது ஒழுங்குதான் அது எனக்குச் சில சமயம் பிடித்தும் சில சமயம் பிடிக்காமலும் . என்னை மிருகமாக்கிவிடமுடியாது ஒரு வரிசையின் ஒழுங்குற்குள் என்னைக் கொண்டு வருவதின் மூலம்.
வரிசை சென்றடைகிற இடத்தில் இருப்பவன் அசல் மிருகம் போலத்தான். அடைபட்ட கம்பிகளுக்குப்பின்னால் இருக்கிறான். உறுமலில் பொறி பறக்கிறது அவன் இடத்தை அடைவதற்காய் ஒவ்வொருவரும் போட்டி போடுகின்றனர்.
இது போல் பல வரிசைகள் பல கட்டிடங்களில் பல தெருக்களில்.
இந்த உருவத்துடன் வரிசைகளில் நிற்பது சிரமமாய் இருக்கிறது.
உங்கள் உருவத்துடன் யாராவது நிற்கக்கூடும். அடையாளம் கண்டும் நகர்ந்து விடுங்கள் அதுதான் சுவாரஸ்யம்.
‘அனைவரும் கவிஞர்களே ‘ -என எங்கோ படித்த ஞாபகம். நாட்டின் மக்கள் தொகையைக்காட்டிலும் கவிஞர்களின் தொகையே அதிகமென கவிஞர் வைரமுத்து ஒருமுறை சொன்னதாகவும் ஞாபகம்.
அதெப்படி அனைவரும் கவிஞர்களாக இருக்கமுடியும்! என்ற கேள்வியும் எழுகிறது.
அனைவரும் கவிஞரென்றால் நூலகங்களைக் கவிதை நூல்களே ஆக்கிரமித்திருக்கும்.
கவிதைநூல்களை வைப்பதற்கே தனி நூல்நிலையம் தேவைப்பட்டிருக்கும்.
அந்த நூல்நிலையமும் போதாது என்ற நிலை உருவாகியிருக்கும்.
கவிதை எழுதியதால்தான் ஒருவரைக் கவிஞரென்று அழைக்கிறோம்; அடையாளப்படுத்துகிறோம். இல்லையெனில் எல்லோரையும் எப்படி
கவிஞரென்று அழைக்கமுடியும் ?
யார் கவிஞர் ?
யார் கவிஞரில்லை ? என்பதை அவரவர் காட்டுகின்ற ஈடுபாட்டைவைத்து;கவிதை வெளிப்பாட்டை வைத்து முடிவுசெய்கிறோம்.
இந்த ஈடுபாடு என்பது கவிதை ஈடுபாடு அல்லது இலக்கிய ஈடுபாடு.
கவிதை ஈடுபாடு என்பதுகூட கவிதை எழுதும் ஈடுபாடாக இருக்கலாம் அல்லது கவிதையைச்சுவைக்கும் ஈடுபாடாக இருக்கலாம்.
இரண்டும் இல்லாத நிலையில் அவர்களைக் கவிஞரென்று அடையாளப்படுத்துவது கடினம்.
இந்த நிலையில் ‘ அனைவரும் கவிஞர்களே ‘ என்ற கூற்றை எப்படி ஏற்கமுடியும் ?
கவிதையை எழுதிக்காட்டாமலும் ;பாடிக்காட்டாமலும் வாழ்கிறவர்களைக் கவிஞர்கள் என்று சொல்லிவிடமுடியாது.
ஆனால்….எழுதிக்காட்டாவிட்டாலும், பாடிக்காட்டாவிட்டாலும், கவிதை உணர்வோடு;ரசனையோடு வாழ்கிறவர்கள் இருக்கிறார்கள்.
தமிழ்க்கவிதை என்ற தோற்றம் இதயம் சார்ந்ததாக இருப்பதைவிட இலக்கணம் சார்ந்ததாக அமைந்ததால் பலரும் தங்களுக்குள் நிகழும்
கவிதை உணர்வை; கவிதைக்கனத்தை;கவிதை எழுச்சியை;கவிதை உந்துதலை வெளிக்காட்டமுடியாமல் இருந்துவிட்டார்கள்;
இறந்துவிட்டார்கள்;
இருந்துவிடுகிறார்கள்.
கவிதைக்கு இலக்கணம் தடையல்ல.
உணர்வின் ஓட்டம்தான் கவிதை. மொழியும் சிந்தனையும் கைகூடி அழகாக ஒரு வடிவம் கண்டால் அதுதான் கவிதை என்ற வழிகாட்டுதல்
வந்தபிறகு எல்லாரும் கவிதை எழுத வந்தார்கள்; வருகிறார்கள்.
கவிதையைப்பெற்றெடுக்க எளிய வழியையும் ,சுதந்தர உணர்வையும், உரிமத்தையும் வழங்கிய பிறகும்கூட எல்லாரும் கவிதை எழுதவில்லை.
அதிகமானோர் எழுதினார்களே ஒழிய அனைவரும் எழுதவில்லை.
பார்ப்பது;படிப்பது;ரசிப்பது என்ற அளவிலேயே கவிதா உணர்வை அடக்கம் செய்துவிட்டார்கள்.
‘கவிஞர்கள் பிறப்பதில்லை உருவாகிறார்கள் ‘ என்பதும் இப்படித்தான்….
இரண்டாயிரமாம் ஆண்டில்,
கண்ணதாசன் பிறந்த நாளில்,
கம்போங்கிளாம் சமூகமன்றத்தில்,
‘கடற்கரைச்சாலைக் கவிமாலை ‘ என்று தொடங்கிய கவிஞர்களின் சந்திப்பு…சிங்கப்பூர் இலக்கிய வரலாற்றில் ஒரு தனிவரலாறு. அங்கே பிறவிக்கவிஞர்களும்,பிறந்து உருவானக் கவிஞர்களும் சந்தித்துக்கொண்டார்கள்.
சந்திப்பின் விளைவு கவிதை விளைச்சலைப்பெருக்கிவிட்டது.
கவிதை அறுவடை அமோகமாகிவிட்டது.
அதற்குப்பின் யார் பிறந்தார்கள் ?
யார் பிறந்து உருவானார்கள் ? என்ற அடையாளம் அழிந்துவிட்டது.
கவிதை….கவிதையாகிவிட்டது.
இப்போது அங்கு எல்லோரும் கவிஞர்கள்.
காரணம் அவர்கள் அடிப்படையில் சிந்திக்கிறார்கள்.
சிந்தித்ததை அப்படியே எழுதாமல் அசைபோட்டு அசைபோட்டு கவிதை மணத்துடனும்;கவிதை மனத்துடனும் எழுதினார்கள்.
எண்ணம் கவிதையானது.
கவிதை வண்ணமானது.
இப்படிக் கவிமாலை ஒரு தளமாக இருந்து கவிதைக்கு வழிவிட்டதில் கவிதையும் கவிஞர்களும் நமக்குக் கிடைத்தார்கள்.
இதன் மூலம் எழுதும் காலமும்,எழுதவைக்கும் காலமும் ா அனைவரும் கவிஞர்களே ா என்பதை நிலைநாட்டுகிறது.
கவிமாலைக்கு வந்து கவிஞர்களாக நம்மைப் பிரமிக்கவைத்தவர்களின் எண்ணிக்கைக் கூடிக்கொண்டே போகிறது.
தமிழுக்குக் கவிஞர்களின் வரவு என்பது தமிழ்மொழியின் நிலை உயர்வு என்பதைத்தான் காட்டும்.
காரணம் மொழி அழகாக இருக்குமிடம் கவிதைதான்.
அழகாக இருக்க யாருக்கு விருப்பமில்லை ?
மொழிக்கும் அந்த விருப்பம் அதிகம் இருக்குமில்லையா ?
மொழி அழகாக இருப்பதும், மொழியை அழகாக வைத்திருப்பதும் கவிதைதான்.
ாஇவர்கள்தாம் கவிஞர்கள்ா என்றிருந்த நிலைமாறி ; நிலையைமாற்றி ாஇவ்வளவுப்பேரும் கவிஞர்கள்ா என்ற நிலையை உருவாக்கியிருக்கிறோம்;உருவாகியிருக்கிறது.
அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் வேறுபடுகிறார்கள்.
அந்த ஒவ்வொருகோணமும் ஆரோகணமாக இருக்கிறது. அதாவது ஆரோக்கியமாக இருக்கிறது,புதுமையாக இருக்கிறது.
ஒருகவிதை எழுத வருகிற கவிஞர் ,ஏதோ …எதையோ… என்று எழுதாமல்…கவிதை உணர்வைச்சுமந்து தவிப்பதையே
கவிதையாக எழுதுகிறார்.
முதலில்,கவிதை எழுதவேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.
அது
அவரை எழுதச்சொல்லி உந்தித்தள்ளுகிறது.
உந்தித்தள்ளும்போதே ஒரு உத்வேகமும் பிறக்கிறது.
ஆனால், அதை அவசர கோலமாய் அள்ளித்தெளித்துவிடக்கூடாதே என்ற கரிசனமும் பிறக்கிறது.
அதன்வழி ஒரு நிதானமும் கிடைக்கிறது.
இந்த நிலையில் அது எப்படி ? எங்கே ? எப்போது ? என்ற தவிப்போடு ‘ உயிரைச் சுடுகிறது
உறக்கம் தொலைக்கிறது ‘ என்ற தத்தளிக்கும் நிலையை
கவிஞர் கலைச்செல்வி வைத்தியநாதன் அழகாக, ஓசை ஒழுங்காக எழுதிக்காட்டுகிறார்.
ஒரு கவிதைத்தோன்றிய கணம்;கனம் ,எழுத விழையும் அவசரம்;ஆவேசம்,தடுத்து நிறுத்தும் மனம்.. இவற்றுடன் ஒரு நல்ல கவிதைக்காகத்
தவிப்பதைக் கவிதையாக எழுதியிருக்கிறார் படியுங்கள்.
‘ உள்ளுக்குள் இருக்கிறது
ஓயாமல் உருள்கிறது
உந்தித் தள்ளிடத்தான்
உத்வேகம் பிறக்கிறது
முயற்சிச் செய்திடநான்
முழுமூச்சாய் இறங்கையிலே
ாஅடக்கு!.அடக்கு!ா..மனதில்
அசரீரி கேட்கிறது
அடக்கினாலும் அவஸ்தை
அடுத்தநாளே தொடர்கிறது
அசரவில்லை அசரீரி
ாஅவசரம்ஏன் ?ா என்கிறது
ஆவேசம் அதிலில்லை
அக்கறைதான் தெரிகிறது
ாபுடம்போட்ட பின்னாலே
பொங்கிவழிா என்கிறது
உள்ளபடிச் சொல்வதென்றால்
உறுதியாக நானறியேன்
எப்போது…எங்கே..
எப்படிஎன் கவிதை
எந்தவிதம் வெளிவருமோ
உள்ளூக்குள் இருக்கிறது
ஓயாமல் உருள்கிறது
உயிரைச் சுடுகிறது
உறக்கம் தொலைக்கிறது ‘
இங்கே ஓர் உணர்வு கவிதையாகியிருக்கிறது. சிலி நாட்டுக்கவிஞர் நோபல் பரிசுபெற்ற பாப்லோ நெரூடாவுக்கும் இதே அவஸ்தை ஏற்பட்டிருக்கிறது. அவர் முதலில் எழுதியது கட்டுரைதான்.சரியாகப் படிக்கக்கூடத்தெரியாத வயதில் ஒருநாள்
ஒரு கொந்தளிப்பான உணர்வு. சில சொற்கள் ,அறிமுகமில்லாத சொற்கள் அவருள் தோன்றின.அதற்குமுன் அனுபவித்திராத
உணர்வை அனுபவித்த நெரூடா தனக்குள் தோன்றிய சொற்களை ஒரு காகிதத்தில் எழுதிவைக்கிறார். அதுதான் அவருடைய
முதல் கவிதை பிறந்த விதம். கலைச்செல்விக்கும் நெரூடாவுக்கும் ஏற்பட்ட அனுபவம் ஒன்றுதான். அதாவது அவஸ்தை இருவருக்கும் ஒன்றுதான்.கலைச்செல்வி உணர்வை கவிதையாக்கியிருக்கிறார். நெரூடா, உணர்வுடன் தோன்றிய சொற்களை
எழுதி கவிதையாக்கியிருக்கிறார்.
இருவருக்கும் அடிப்படை உணர்வால் விளைந்த உள்ளக்கொந்தளிப்பு.
‘தனிமையின் வெறுமைகளில் ஒவ்வொன்றாய் நினைவு வரும் செய்த பாவங்களும் செய்ய தவறிய உதவிகளும்!..அன்று உள்ளுணர்ந்து மனம் கேட்கும் இது வாழ்வின் விளிம்பா! சாவின் நிழலா ? எப்போது சாவு வரும் ? பதில் தெரியாத காரணத்தால் வாழ்வை தொலைக்கின்றோம் இப்போது வரும் எனில் அந்தக்கணம் தொட்டு வாழ துடிக்கின்றோம்!..!…. மனிதா!..தொலைக்கும் வரை எதுவுமே தெரிவதில்லை…. ஒவ்வொரு மரணத்திலும் சுடலை ஞானம் பிறக்கும்!.. என்ன வாழ்க்கை இது!.. ஓ!..இதுவா வாழ்க்கை என்ற பல கேள்விகள் மனதை துளைக்கும்! மனக்கண் அன்று திறக்கும்.. அதன் பின்!..பழைய குருடி ‘ கதைதான்..!. —- vijiselvaratnam@yahoo.ca
எல்லோருக்கும் நல்லவனாக இரு என்று எல்லோரும் சொல்கிறார்கள். இருந்துதான் பார்ப்போமே. விழுந்தவனைத் தூக்கி நிறுத்தித் தூணாகத் துணை நின்றேன். அவனைத்,தள்ளிவிட்டவனுக்கு நான் தப்பானவனானேன். அடிபட்டவனை அரவணைத்து ஆறுதல் கூறி ஆற்றினேன். அவனை,அடித்தவனுக்கு நான் ஆகாதவனானேன் அழுதவனை அருகிலிருத்தி விழிநீரைத் துடைத்தெறிந்தேன். அவனை அழவைத்தவனுக்கு நான் அதிகப்பிரசங்கியானேன். ஒரே காரியத்தினால்,நான், ஒருவனுக்கு வேண்டியவனானேன் மற்றொருவனுக்கு வேண்டாதவனானேன். ‘எல்லோருக்கும் நல்லவனாக இரு ‘ எல்லோரும் சொல்கிறார்கள். ஒரு நாள்- அடித்தவன் அடிபட்டு நின்றான், படட்டும் என்று ஓடவா ? பக்கத்தில் சென்று தேற்றவா ? அழவைத்தவன் அழுது நின்றான் அழட்டும் என்று விடவா ? அள்ளி அணைத்து ஆற்றவா ? தள்ளிவிட்டவன், விழுந்து கிடந்தான் கிடக்கட்டும் என்று போகவா ? கிட்டே சென்று தூக்கவா ? இவர்களுக்கு நண்பராகவா ? அவர்களுக்குப் பகைவராகவா ? இயலாத ஒரு காரியத்தை,எல்லோரும் மிக எளிதாகச் சொல்லிவிடுகிறார்கள் ‘எல்லோருக்கும் நல்லவனாக இரு ‘ —-
எல்லோருக்கும் நல்லவனாக இரு என்று எல்லோரும் சொல்கிறார்கள். இருந்துதான் பார்ப்போமே. விழுந்தவனைத் தூக்கி நிறுத்தித் தூணாகத் துணை நின்றேன். அவனைத்,தள்ளிவிட்டவனுக்கு நான் தப்பானவனானேன். அடிபட்டவனை அரவணைத்து ஆறுதல் கூறி ஆற்றினேன். அவனை,அடித்தவனுக்கு நான் ஆகாதவனானேன் அழுதவனை அருகிலிருத்தி விழிநீரைத் துடைத்தெறிந்தேன். அவனை அழவைத்தவனுக்கு நான் அதிகப்பிரசங்கியானேன். ஒரே காரியத்தினால்,நான், ஒருவனுக்கு வேண்டியவனானேன் மற்றொருவனுக்கு வேண்டாதவனானேன். ‘எல்லோருக்கும் நல்லவனாக இரு ‘ எல்லோரும் சொல்கிறார்கள். ஒரு நாள்- அடித்தவன் அடிபட்டு நின்றான், படட்டும் என்று ஓடவா ? பக்கத்தில் சென்று தேற்றவா ? அழவைத்தவன் அழுது நின்றான் அழட்டும் என்று விடவா ? அள்ளி அணைத்து ஆற்றவா ? தள்ளிவிட்டவன், விழுந்து கிடந்தான் கிடக்கட்டும் என்று போகவா ? கிட்டே சென்று தூக்கவா ? இவர்களுக்கு நண்பராகவா ? அவர்களுக்குப் பகைவராகவா ? இயலாத ஒரு காரியத்தை,எல்லோரும் மிக எளிதாகச் சொல்லிவிடுகிறார்கள் ‘எல்லோருக்கும் நல்லவனாக இரு ‘ —-
ஒரு சமாந்தர உலகில் அவனும் அவளும் வாழ்ந்து வருகின்றார்கள். இரவு பகலும் குளர் வெயிலும் கடந்தது அவர்கள் காதல். முற்றிலும் மனிதத்துடனும் தனக்கான பெருமைகளுடனும் பெண்ணைப் புரிந்து கொண்டவன் அவன். அவளுக்காகவே தனது மார்பு முடிகளையும் சிரைத்தவன். அறையை அடைத்துக் கிடக்கும் மின்னும் குதியுயர்ந்த சப்பாத்துக்களில் நொந்து போயிருக்கும் அவள் பாதங்கள். கைகளும் கழுத்துமற்றுத் தொங்கும் தாராள உடைகளில் எப்போதுமே அவனுக்காய் வேண்டி தேவதையாவாள் அவனுள் அமிலம் சுரக்க பூனைக்கண்களும் செயற்கை நிகங்களும் அவளிற்கு பரிசாகும் முகத்துாக்கலற்ற அவன் புரிந்துணர்வில் அவளின் மோகிப்பும் விசாலப்படும் கிழித்த சிலிக்கோண் முலைகளில் மூழ்கி இறுகிய தொடைகளுள் தன்னைப் புதைத்து பெண்ணியம் பற்றிக் கவிபாடும் அவன் திறமையில் அவள் பிரமித்து முயங்குவாள்.
அக்கினிவலத்தில் ஆயிரம் வாக்குறுதிகள் உதிர்த்த உன் வாக்குறுதியை உருக்குலைத்ததோ தீ! உன் வீட்டு மேசை நாற்காலியோடு நானுமொரு ஜடமாய்த்தானே உனக்கு தெரிகிறேன் இன்ப துன்பத்தில் பங்களிப்பு உண்டென்று ஏன் அன்று சொன்னாய் ? இனி வரும்காலத்தில் உன் முககுறிப்பு உணர்ந்து என் தேவைகள் கேட்பேன் தலைகோதி இதழ் பிரித்து சிறு இடை நீ தொட சிலிர்ப்பேன்! எவரிடமேனும் என் கேள்விக்கு விடை உள்ளதா ? ‘இருபத்தொரு வயதிலேயே எனக்கு ஏன் மரணம் வந்து விட்டது ? ‘ —- sikkandarbasha@hotmail.com
ஏதோ இரசாயன பூச்சாம் முன்பு போல் அருகில் செல்ல முடியவில்லை.. எட்டாத உயரத்தில் நிலவு வெளிச்சம்.. நிற்காமல் நகர்ந்து செல்லும் வாகன வெளிச்சங்கள்.. ஒரிரவு வாழ்க்கைதனே வாழ்ந்துவிட்டு போகட்டும் என்று எண்ணாமல் விளக்கணைத்து மெழுகுவர்த்தி ஏற்றிவைக்கும் மனிதர்கள்.. அப்பப்பா! ஒரு துளி வெளிச்சத்திற்க்குதான் எவ்வளவு போராட்டங்கள் இருந்தும் விடுவதாயில்லை. விடியலில் தரையெங்கும் இரைந்து கிடந்தன விட்டில் பூச்சியின் இறகுகள் போரடி வாழ்ந்ததின் அடயாளமாய்.
2.
விடிந்தால் மரணம் நிச்சயம் இருந்தும் ஏன் இத்தனை அவசரம் விளக்கை சுற்றும் விட்டில்பூச்சிகள்.
ஒரு மனம் ஒரு உடல் ஒட்டிப்பிறந்த இரட்டையிரிலும் பார்த்ததுண்டோ ? வேறுபாடுகள் வெளிப்பட்டபோதும் அது மதிக்கப்படும்போதே நட்பு பலப்படுவதை நீர் அறியவில்லையா ?
துயரத்தில் தோள்கொடுக்கும் தூரத்தில் நானில்லையானால் நான் நண்பனில்லையா ?
என் செயலொன்றே நட்பு சொல்லுமெனில் நட்பின் இலக்கணம் வாலாட்டும் நாயொன்றே அறியுமில்லையா ?
எதிர்பார்ப்புகள் பூர்த்திசெய்யும் அமுதசுரபி எதிர்பார்த்தீரொ என்னிடம் ? எப்பொழுதும் உங்கள் உள்ளங்களை ஏந்தும் பிச்சை பாத்திரம்மட்டுமே என்னிடம் உள்ளதை உணரவில்லையோ ?
ஆகவே தோழமைகளே புறக்கணிப்பு மலம் புசிப்பதிலும் நிபந்தனை நெருப்பில் நெஞ்சம் கருகுவதிலும் உயர பறந்தாலும் உதைத்தெழும்பபட்ட கால்பந்தாய் வாழ்வதிலும் உடன்பாடில்லையெனக்கு! ஒருசில சந்தர்ப்பங்களில் உயிர்தொட்ட உங்கள் உள்ளங்களோடு போகிறேன்! —- sikkandarbasha@hotmail.com
ஐந்து அறை உண்டு- ஆளுக்கொரு கணிணி என அனைத்தும் உண்டு திரும்பிய இடமெல்லாம் இசை வழிய விரும்பி இனைத்திட்ட ஒலிபெருக்கி உண்டு ஜன்னலோரம் சிவப்பு மலர்சொரியும் டாக்வுட்டும் செர்ரி மரமும் உண்டு மஞ்சள், நீலம், ஆரஞ்சு என்று பலவண்ண மலர்பூக்கும் தோட்டம் உண்டு காலைநேரம் காலார நடந்து செல்ல பனிபடர்ந்த புல்வெளியும் உண்டு இத்தனையும் இருந்துமென்ன மனிதர் இல்லை பகல் முழுதும் இரைதேடி பறந்துசென்று இரவு வந்தடையும் குருவிபோல கடமையென பறக்கின்றோம் நாள்முழுதும் களைத்துவந்து தூங்குகின்றோம் எதைத்தேடி அலைகின்றோம் புரியவில்லை ஏனிந்த அலைச்சல் அது தெரியவில்லை எதுவென்று தெரியாமல் தேடித்தேடி தொலைத்துவிட்டோம் இளமைதன்னை. —- padma.arvind@co.middlesex.nj.us
உதிரத்தில் ஊறி உணர்வுகளில் கலந்து – என் உயிர் இஇயக்கும் உன்னைத் தேடி உன் இஇடம் வரத்தான் நினைக்கிறேன்
உன்னை கண்ணுற்றபின்னால் வெற்றுடல் சுமக்கும் வெறும் சடலமாக என்னை மாற்றிவிடுவாய்
திரும்ப திரும்ப தலை திருப்பி தாயை பார்க்கும் பள்ளிக்குழந்தையாய் உன் பாசம் பருக இஇருகை உயர்த்தி உன்னிடம் வரும் என் அன்பை தடுத்துவைக்க என்னை விட்டுவிடு உன் உணர்வுகளோடு வசிக்கும் ஒற்றை சந்தோஷமே என்னை என் இறுதிவரை இஇட்டுசெல்ல போதுமானது ———————————————-
கொழகொழத்த ஒரு கவிதையைப் பலநாளாகச் சீரமைத்து வருகிறேன் என்னோடான அதன் பகை காரணமறியாதது. என்னை மலைமேலிருந்து குப்புறத்தள்ளியும் தீமிதிப்பாதங்களில் சுத்தியல் உந்தின ஆணிப்பாய்களில் பல்லிளித்தும் என் புன்னகைகளை விலை தள்ளி விற்றுத்தீர்த்தது. நெடுநாளாக நான் நாத்திகவாதி நம்பிக்கைகளின் வித்தெல்லாம் வெந்தபின் தானே என் தோட்டங்களைச் சேர்கிறது ? என் வண்ணங்களை மொழிகளை வாசலில் இறைத்தபின் உள்ளிருக்கமுடிந்தது அல்லது தீபங்களை மணிப்பரல்களை வெளிவந்தபின்பே நிரல் படுத்த முடிந்தது.அதற்காகக் கிணறுகளைப் பாதைகளில் தோண்டி விட முடிவதில்லை. அடுப்புகளும் எரிவதில்லை வீதிகளில் மழை பெய்யக் காத்திருப்பேன் கூரையோரங்களிலாகிலும். தொனிக்கின்ற பறவைகளின் சிறகுகளால் வாழ்வேன். கிறுக்கிக் கிறுக்கிச் சில சூத்திரங்களால் செயற்கை முத்துக்களைப் பெற்றுப் பூரிப்பேன் எனினும் ஒரு கவிதை ஒற்றைக் கவிதை எனக்கென்று இல்லாமலே போனதே! அது நிச்சயம் கவிதை தான்..
கவிதை, கவிதை என்று சொல்லுகிறார்களே அதைப் பற்றி எழுத வேண்டும் என்று எனக்கு வெகு நாளாக ஆசை. இன்றைக்குத்தான் முடிந்தது.
‘பேனா எங்கேயடா ? அடே ராசா நீ யெடுத்தையா ? குரங்குகளா ஒன்றை மேஜை மேல் வைக்க விடாதீர்கள். அது பேனாவாகவா இருக்கிறது ? இருந்தாலும், இந்தக் குழந்தைகள் இருக்கிறதே, சனியன்கள். மழலையாம், குழலாம், யாழாம்! அதைவிட ஒரு ஓட்டை கிராமபோனை வைத்துக்கொண்டு காதைத் துளைத்துக் கொள்ளலாம் ‘.
குழந்தைகளால் என்ன பிரயோஜனம் ? சுத்தத் தமிழ் பேசத் தெரியுமா ? அவைகளுக்குத்தான் என்ன ஒரு கூட்டத்திலே பழகத் தெரியுமா ? இன்னும் அழாமல் இருக்கத் தெரியுமா ?
எங்கள் வீட்டு ராஜாவைப் பற்றிச் சொல்லவா ? சோற்றுக்குத் தாளம் போட்டாலும், வீட்டுக்கொரு ராஜாவிற்குக் குறைவில்லை. அதில் மட்டும், பாரதி சொன்னதிற்கு ஒரு படி மேலாகவே யிருக்கிறோம். எல்லாரும் இன்னாட்டு மன்னர்களின் தகப்பன்மார்!
எங்கள் வீட்டு ராஜா இருக்கிறானே அவன் பேச்செல்லாம் பாட்டு; பாட்டெல்லாம் அழுகை. அதுதான் கிடக்கிறது. அவனிடத்தில் என்ன அதிசயம் இருக்கிறது ? அவனுக்கு இருக்கும் அசட்டுத்தனத்திற்கு என்ன சொல்லுகிறது ? என்னுடைய கைத்தடியை எடுத்துக் கொண்டான், அதுதான் அவனுக்குக் குதிரையாம்! குதிரைக்கும் தடிக்கம்பிற்கும் வித்தியாசம் தெரியாத அசட்டைப் பார்த்து யாரால் உத்ஸாகப்பட முடியும் ? அதற்கும் ஒரு பிரகிருதி இருக்கிறது. அதுதான் அவன் தாயார். குதிரை மட்டுமா ? காராக மாறுகிறது, மோட்டார் சைக்கிள், இரட்டை மாட்டு வண்டி, இன்னும் என்ன வேண்டும் ?
அதுதான் கிடக்கிறது தமிழைத் தமிழாகப் பேசத் தெரிகிறதா ? இலக்கணம் தெரியுமா ? தொல்காப்பியம் படித்திருக்கிறதா ? இந்தக் குழந்தைகளினால் என்ன பிரயோஜனம் ? உங்களுக்குத் தெரியுமா அவைகளினால் என்ன பிரயோஜனம் ?
… ஓஹோ ? கவிதையா ? இன்னொரு தடவை பார்த்துக் கொள்ளலாம்.
(நன்றி : புதுமைப்பித்தன் கட்டுரைகள் – மீனாட்சி புத்தக நிலையம், மதுரை – பிப்ரவரி, 1954)