கீதாஞ்சலி (77) என் சொத்தனைத்தும் உனக்கு!

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


என்னிறைவன் நீயே என்பதை
நான் அறிவேன்!
உன்னை நெருங்காமல் நான்
சற்று தள்ளியே தான்
நிற்கிறேன்!
என்னுடை யவனா நீ
என்பதைக் கூட அறியாமல்
உன்னை அண்டுகிறேன்!
என் தந்தையைப் போன்றவன் நீ,
நினது பாதங்களைப்
பணிந்து வணங்குவேன்!
எனது துணைவன் கைகள் போல்
உனது கரங்களை
என்னால் பற்ற முடிய வில்லை!
உனக்குரிய வனாக என்னைப்
பேணு மிடத்துக்கு நீ
கீழிறங்கி வரும் போது,
என்னிதயத்தில்
தோழனாக்கிக் கொள்வேன்
உன்னை!

நீயொரு சகோதரன் எனக்கு,
என் சகோதரர் அணியில்!
ஆயினும் என் சகோதரரை
அறவே ஒதுக்குபவன் நான்!
அவருக்குப் பங்கு அளிப்பதில்லை,
என் ஊதியச் சேமிப்பில்!
ஆகவேதான்
உனக்கு அர்ப்பணிக்க முடிகிறது,
எனது சொத்துக்கள்
அனைத்தையும்!
மனிதரின் இன்ப துன்பங்களில்
ஈடுபட்டு,
உதவி புரிவ தில்லை நான்!
அதனால் தான்
அருகில் உன்னுடன் நிற்கத்
தருணம் கிடைக்கிறது எனக்கு!
உலக வாழ்வினைத்
துறக்கவும்
தயக்க மில்லை எனக்கு!
அதனால் நான் பாய்ந்து
மூழ்க வேண்டாம்,
வாழ்வெனும்
மாபெரும் சாகரத்தில்!

*****************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (June 11, 2006)]

Series Navigation

This entry is part [part not set] of 41 in the series 20060616_Issue

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா