சிறை

பா வீரராகவன்


ஞாலம் எனக்கொரு பெருஞ்சிறைச் சாலை – யிதில்
நானே கைதி நானே காவல்.

பிணைப்புகளே என்னை நடத்திடும் வரையில்
பிறருக்காக நான் வாழ்ந்திடும் வரையில் – யிந்த (ஞாலம்)

நேசம் நட்பு என்பவை யெல்லாம்
நேரப் பிழைகள் நெஞ்சில் வைப்புகள்
பாசம் என்பதும் பயணச் சுமை தான்
பாதி வழிவரை பற்று வரவு தான். (ஞாலம்)

காத்துக் கிடப்பதும் வேர்த்துச் சலிப்பதும்
காலச் செலவினில் ஞாலம் புரிவதும்
நோக்கில் உயர்வதும் நொடியில் தாழ்வதும்
ஆக்க முயல்வதும் அடிசறுக் குவதும்
மாற்ற விழைவதும் மானுட வழக்கம்.
நேற்று மிதுதான் முன்பு மிதுதான்
யின்று மிதுவே யிருந்திடும் போது
எங்கே புதுமை எதிலே உயிர்ப்பு
சுரங்களின் வரிசை மாறா வரையில்
சுருதிகளின் வீக்கம் ராக மில்லை. (ஞாலம்)

ஆள நினைத்திடும் போதினில் எல்லாம்
தோளில் சுமைகள் வலித்திடும் வரையில்
வாளின் நுனியில் நடப்பது போலே
வாழ்க்கை நெறிகள் வகுபடு வரையில்
காலத்திடம் நான் தோற்றுள வரையில்
நீளத் துடிக்கும் என்னிரு கையில்
நித்திலம் ஒருநாள் அடங்கிடும் வரையில்
என்னை நானே தகர்த்துக் கொண்டு
எழும்பி யியங்கத் தொடங்கிடு வரையில் (ஞாலம்)

***

Series Navigation

This entry is part [part not set] of 31 in the series 20020217_Issue

பா வீரராகவன்

பா வீரராகவன்

You may also like...