ஜீவி கவிதைகள் இரண்டு

ஜீவி



இனியும் ஒரு ஆசை

சீராட்டும் பாலப்பருவம்
செறிந்த நல் அறிவு
உற்ற நேரம் உதவும் நட்பு
குற்றம் பாரா சொந்தம்

அழகான இளமை
அறிவுக்கேற்ற வேலை
அன்பார்ந்த மனைவி
ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று

தேவையான செல்வம்
தேசமெங்கும் பிரயாணம்
தோழமையான பேராண்டிகள்
தொய்வில்லாத நட்புகள்
நோயில்லா முதுமை
வலியில்லா மரணம்
இத்தனையும் வேண்டும் – இறைவா!
இன்னொரு பிறவி வேண்டுகிறேன்.

சிற்றின்பம்

வட துருவத்தில்
ஒரு வழக்கம்
கரடியை கறியாக்கும்
குரூர யுக்தி
வெட்ட வெளியில்
நட்டிருக்குமாம் பளபளக்கும்
கூரிய கத்தி
கத்தியைப் பார்க்கும்
கரடி அதைச்
சுற்றி சுற்றி
வருமாம் – சுற்றி
வந்த கரடி
லேசாக நாக்கால்
நக்கியும் பார்க்குமாம்
நக்கிய நாக்கில்
இரத்தம் கொஞ்சம்
சொட்டுமாம்
சொட்டிய ரத்தத்தை
தனதென்று அறியாது
ருசிக்குமாம்
ருசித்த கரடி
மீண்டும் நக்குமாம்
நக்கிய கரடி
மீண்டும் ருசிக்குமாம்
இப்படியே நக்கி
ருசித்து நக்கி
ருசித்து தனது
இரத்தத்தையே குடித்து
உயிரை விடுமாம் – பரிதாபக் கரடி.
வாழ்வை எதிர் நோக்கி

கறந்த பாலிலிருந்து
கடு மருந்து வரையிலும்
கலப்படம்
குடிக்கும் நீருக்கும்
சுவாசிக்கும் காற்றுக்கும்
காசு
கல்வி வியாபாரமாகவும்
பக்தி தொழிலாகவும்
மாறிப்போன பயங்கரம்
பிறப்பு முதல் இறப்பு
வரைக்கும் எங்கும் எதிலும்
ஊழல்
நரகாசுரர்களை தலைவர்களாக்கி
ஏற்றிப்போற்றும்
கூட்டம்
அரசியலமைப்பை சல்லடையாக்கி
ஆட்சியைப் பிடிக்கும்
அக்கிரமம்
‘நாம் ‘ என்றிருந்த சமுதாயம்
‘நான் ‘ என்றாகிப்போன
அவலம்
இது எதுவும் அறியாது
இனிய கனவில்
இன்னொரு ஜீவன்
கருப்பையில் வாழ்வை எதிர் நோக்கி

– ஜீவி

Series Navigation

This entry is part [part not set] of 45 in the series 20030302_Issue

ஜீவி

ஜீவி