Press "Enter" to skip to content

நிசப்தத்தின் நிழலில்

சத்தி சக்திதாசன்


மனதில் ஒரு ராகம்
இசைப்பது
மானிடம் எனும் ஒரு கீதம்
ஏனதன் ஓசையிலெ
நிசப்தம் ?

இதயத்தின் ரேகைகள்-அதில்
இழைந்திடும்
இரக்கத்தின் வாசம்
வீசிடும் சுகந்தத்தில் மட்டும்
விளங்காத நிசப்தம்

மரத்தின் இலைகளினிடையே
மறைந்து தென்றல்
உறவாடும் ஓசை
உணரும் செவிகளில் ஏனொ
தொடரும் நிசப்தம்

மழைத்துளிகள் சருகினில்
எழுப்பிடும் பாஷை
இயற்கையையுணரா உயிர்களுக்கு
என்றுமே நிசப்தம்

வறுமையுலகம் வரைந்திடும்
வாட்டம் என்றொரு
வாழ்க்கையோவியம் – குபேரர்
என்றொரு தாளில்
என்றுமே நிசப்தம்

இல்லாமை என்றொரு கவிதை
இருப்போரின் சபையினில்
அரங்கேறும்வேளை
அலையாய் அவர் செவிகளில்
அடிப்பதும் நிசப்தம்

நிசப்தத்தின் நிழலில்
நின்றுகொண்டே
நிர்க்கதியற்றவர் நிலையை
நியாயிப்பது என்றுமே
செவிடன் காதில்
ஊதிய சங்குதான்.
—-
sathnel.sakthithasan@bt.com

Series Navigation

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue

Comments are closed.

Mission News Theme by Compete Themes.