முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் .கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com
என்றும் என் நினைவுகள்
என் மண்ணைச் சுற்றிக் கொண்டு……
பிறந்தது, வளர்ந்தது, நடந்தது எழுந்தது
அனைத்தும் எந்தன் மனக் கண்ணில்
ஆனால் ஏனோ என்னுள்ளே
ஆழ்ந்த துயரம் எழுகின்றது
வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வதற்கு
வளமையாய் வேரூர் சென்றாலும்
வளமையாய் என்றும் என்னுள்ளே
என் மண்ணின் நினைவே வருகிறது
பழகிய இடங்கள் பழகிய முகங்கள்
பழகிய வீடு பழிகிய மரங்கள்
பழகிய காடு, பழகிய குளங்கள்
படிப்பதற்காகச் சுற்றிய இடங்கள்
எல்லாம் அனைத்தும் எந்தன் உள்ளே
மறக்க முடியா மங்காத நினைவுகள்..
துயில் எழுந்தவுடன் தூய்மைக் காற்றைத்
துய்க்க முடியா துயரநிலைதான்
நகர வாழ்க்கை நரக வாழ்க்கையாய்
இயல்பாய் பழக கறுக்கும் மனிதர்கள்
இயலாமையாலே இருக்கும் மனிதர்கள்
வண்டி, வாகனம், வசதிகள் அனைத்தும் இருந்தும் எனக்கு
மனது இங்கே ஒட்டவுமில்லை ஒதுங்கவுமில்லை
மண்ணைத் தேடி மனதும் ஓட
மண்ணில் வாழ்ந்த நினைவுகள் என்னுள்
சக்கரம் போலே சடுதியில் வந்தது…
எத்தனை சுகமாய் அந்நிய மண்ணில்
எப்படியாக வாழ்ந்தாலும்……..
எந்தன் நினைவில் என்தாய் மண்தான்
என்றும் எங்கும் எதிலும்
எந்தன் நினைவுகள் தோறும்
மண்ணின் நினைவுகள்……
மறக்க முடியா இதய உறவுகள்……
மனதில் நீங்கா நினைவுகள்….
அப்போது… இன்றைக்கு மஞ்சள் தாவணியா, சிவப்புத் தாவணியா என்று மணிக் கணக்காய் யோசித்ததுண்டு கண்ணாடிக்கே கண் ஆடிச் சலிக்கும் வரை ஆயிரம் கோணங்களில் அழகு பார்த்துக் கொண்டதுண்டு ஆறடிக் கூந்தலை அழகாய்ப் பின்னி செவ்வந்திப் பூக்களைச் செம்மையாய்த் தைத்து முன்னும் பின்னும் தெரியும்படி ‘போட்டோ ‘ படம் பிடித்ததுண்டு தப்பித் தவறி அம்மா சொல்லி விட்ட ஒரே ஒரு வார்த்தைக்காக அழுது அடம் பிடித்து ஆர்ப்பாட்டம் செய்ததுண்டு
இப்போது… சிவப்பா, மஞ்சளா என்று சிந்திக்கப் பொழுதில்லை உடை என்று ஒன்று உடம்பில் இருந்தாலே போதுமென்று இருக்கிறது அழகு பார்க்கத் தாமதித்தால் ‘எங்கேயோ பார்த்த ஞாபகம் ‘ என்று கிண்டலடிக்கிறது கண்ணாடி செவ்வந்திப் பூக்கள் செடி நிறையப் பூத்தாலும் அள்ளி முடிந்து கொள்ள அரை அடிக் கூந்தலும் இல்லாத அவலம் துன்பங்கள் துரத்துகின்ற துயரமான வேளையிலும் கண்ணீரை உள்வாங்கி, களிப்புடனே புன்சிரித்து பெற்றோரை உற்றோரை மகிழ வைக்கும் பண்பரசியாய் பரிணாம வளர்ச்சி அடைந்தாயிற்று
உணர்வுகள் மரக்கின்ற, மறக்கின்ற பொழுதினிலும், நிஜங்கள் மெல்ல மெல்ல நிழலாகும் பொழுதினிலும் உணர்வுகளின் சுகங்களும், நிஜங்களின் நினைவுகளும் மட்டும் இன்னும் பசுமையாக… எரிந்து முடிந்த பின்னும் மணம் பரப்பி மகிழச் செய்யும் சாம்பிராணி வாசனை போல்…
நிலையாய் இல்லை தலை கீழாயும் மாறி மாறியும் குறுக்கும் நெடுக்குமாய் நடக்கிறேன். சிலசமயம் அந்தரத்தில் தொங்கும் வெளவாலாய். இன்று வெள்ளிக் கிழமை வீட்டில் பூக்களின் நறுமணம் ஊதுபத்தியின் வாசம் நிதானமாய் எாியும் சுடர் விளக்கு தாளித்த சமையல் எதுவும் என் நுகர்வில் இல்லை. நீயும், நானும் அவரவராய் இருந்து பேசிய அந்த ஆலமர வயல்வெளி நினைவுகள் ஊமைப்பட ஒளிப்பதிவு போல் உயிரைச் சுட நிதானமாய் எாியும் சுடர் விளக்கை வயல்வெளிக்காற்று வந்து அலைக்களிக்கிறது. இன்றும் உன் கடிதம் வராததால் உதிர்ந்த பூவாய் எாிந்து முடிந்த ஊதுபத்தியாய் காற்றில் அணைந்த விளக்காய் பசியின்றி உணவை வாங்கும் இரைப்பையாய் நான். கண்ணாடி பார்க்கிறேன். நெற்றியில் மட்டும் திருநீற்றுக் கீறு மிளிர்கிறது. உன் கடிதம் நாளை வரும் என்ற நம்பிக்கையில் என் கண்களை கடிதப் பெட்டிக்குள் அடகு வைக்கிறேன்.
மறந்து மறந்து எழுதிக் கொண்டிருக்கிறேன் விட்டுப் போன என் நினைவுகளை! இழையிழையாய் பிரிந்து போனது பற்றியும் சிக்கிச் சுழன்று மகிழ்ச்சியில் திளைத்தது பற்றியும் மொட்டைமாடியில் நட்சத்திரங்களுக்கு மத்தியில் அம்மா சொன்ன ‘ அவள் நினைவுகள் ‘ பற்றியும் எழுதும் போது, என்னுளிருந்த தூக்கம் நழுவி என் கை தானாகவே எழுதியது நேற்றைக்கும், நாளைக்கும் இடையில் ‘நடந்தாலும் நடக்கலாம் ‘ என்றிருக்கும் மரணத்தைப் பற்றிய என் யோசனையையும்…..
(காலஞ்சென்ற சி சுப்பிரமணியம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முறையில் இந்தக் கட்டுரை வெளியிடப் படுகிறது)
நான் அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக டில்லியில் இருந்து பணி புரிந்து கொண்டிருந்த போது, கோயம்புத்தூரில் வழக்குரைஞர் தொழிலையும் நடத்தி வந்தேன். டில்லி இன்றிருப்பதைப் போல பெரிய நகரமல்ல. அன்றைய டில்லியின் மக்கட்தொகை சுமார் 15 லட்சங்களே. ‘டோங்கா ‘ என்று அழைக்கப் படும் குதிரை வண்டி பொதுவாகப் போக்குவரத்துக்கு உபெயோகிக்கப் பட்டது. டில்லியில் நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து அரசியல் நிர்ணய சபை அலுவலகத்திற்கு டோங்கா வண்டியில் செல்ல எட்டணா அல்லது 50 பைசா தர வேண்டியிருந்தது.
நாங்கள் நான்கு பேர் ஒன்றாகச் சேர்ந்து டோங்காவில் செல்வோம். ஒவ்வொருவரும் தலா இரண்டணா (இப்போது 13 பைசா) கொடுப்போம். அப்பொது டில்லியில் பண்டங்களின் விலை வாசிகள் மிகவும் மலிவாக இருந்தன. நான் அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக இருந்த போது, அரசாங்கம் அளித்த தினசரி அலவன்ஸ் தொகையான முப்பது ரூபாய்க்குள் எல்லா செலவுகளையும் எளிதில் சமாளிக்கவும், ஓரளவு மிச்சப் படுத்தவும் முடிந்தது.
ஏற்கனவே நான் குறிப்பிட்டுள்ளபடி ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், அளகேசன் , நான் ஆகியோர் ஒரு வீட்டில் தங்கியிருந்தோம். அன்றைய சென்னை மாகாணத்தின் பிரதமராக ஓமந்தூர் ரெட்டியார் பதவி ஏற்ற பிறகு நானும் அளகேசனும் மட்டும் அந்த வீட்டில் தொடர்ந்து வசித்து வந்தோம்.
நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் அல்லாடி கிருஷ்ணசுவாமி அய்யர் தங்கியிருந்தார். அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களில் அவரும் ஒருவர். அவர் சிறந்த சட்ட வல்லுனர். அவர் சென்னையில் புகழ் பெற்ற வழக்குரைஞராக இருந்தவர். நான் டில்லிக்கு அரசியல் நிர்ணய சபை உறுப்பினராகச் செல்வதற்கு முன்னரே, அல்லாடி கிருஷ்ன சுவாமி அய்யரை நன்கு அறிந்திருந்தேன். எனினும் அரசியல் நிர்ணயப் பணிகளின் போது நெருங்கிய நண்பர்கள் ஆனோம். தினசரி காலை ஒன்பது மணியளவில் நான் அவர் வீட்டிற்குச் சென்று, அன்றைய தினம் அரசியல் நிர்ணய சபையில் என்னென்ன விஷயங்கள் குறித்துப் பேசப் போகிறோம் என்பது பற்றி விவாதிப்பேன்.
அரசியல் நிர்ணய சபையில் விவாதத்திற்கு வரவிருந்த பல்வேறு புதுக் கருத்துகள், புதுத் திட்டங்கள் ஆகியவற்றின் விளைவுகளை அல்லாடி கிருஷ்ண சுவாமி அய்யர் விளக்குவதைக் கேட்பது சிறந்த அனுபவமாக இருக்கும்.
சட்டம் சம்பந்தமான விஷயங்களில் அவரது நினைவாற்றல் அபாரமானது. ஆனால் நண்பர்களின் பெயர்களை அவர் அடிக்கடி மறந்து விடுவார். அவர் என்னை ‘திரு பிள்ளை ‘ என்றே அழைத்து வந்தார். முதலில் நான் அதைத் திருத்த முற்படவில்லை. பிறகு , ‘சார், நான் பிள்ளை வகுப்பைச் சேர்ந்தவன் இல்லை. நான் கவுண்டர் வகுப்பைச் சேர்ந்தவன் ‘ என்று ஒரு முறை அவரிடம் கூறினேன். ‘ஓ அப்படியா, திரு பிள்ளை அவர்களே , நான் வருந்துகிறேன் ‘ என்று உரத்த குரலில் சொன்னார். நான் அத்துடன் அந்த விஷயத்தை விட்டு விட்டேன். ஆனால் பிறகு அவர் அந்தப் பிழையைத் திருத்திக் கொண்டார். அரசியல் சாசனம், மற்றும் அரசியல் சாசனச் சட்டம் சம்பந்தமாக அல்லாடி கிருஷ்ண சுவாமி அய்யரிடமிருந்து தான் நான் பெருமளவில் தெரிந்துகொண்டேன்.
****
அரசியல் நிர்ணய சபை ஆண்டு முழுவதும் கூடிப் பணி புரிந்தது. டில்லியில் கோடை மிகக் கடுமையானதாக இருக்கும். அப்போது குளிர் சாதன வசதிகள் கிடையாது. நாங்கள் திறந்த வெளியில் தான் இரவில் தூங்கினோம். எனினுன் வெப்பத்தின் கொடுமை தாள இயலவில்லை.
நமது பெரியவர்கள் கால்த்தில் காலையில் ‘பழைய சோறு ‘ சாப்பிடும் பழக்கம் இருந்தது அல்லவா ? அந்தப் பழக்கத்தை நானும் , அளகேசனும் பின்பற்ற ஆரம்பித்தோம். இரவில் மிச்சமாகும் சாதத்தை தண்ணீர் ஊற்றி வைத்து விடுவோம். அடுத்த நாள் காலையில் சிற்றுண்டிக்குப் பதிலாக அந்தப் பழைய சாதத்தில் சிறிது தயிரை ஊற்றிக் கலந்து அதனுடன், நறுக்கப் பட்ட வெங்காயத் துண்டுகளையும் , சிறிது கொத்துமல்லி இலையையும் சேர்த்து, அளகேசனும் நானும் சாப்பிடுவோம்.
கோடையில் இந்தப் பழைய சாதம் உடலுக்கு மிகவும் இதமாக இருக்கும்; வெப்பத்தைக் குறைக்க உதவும். ‘இயற்கையான ஏர்கண்டிஷனர் ‘ என்று நாங்கள் இதை வேடிக்கையாகக் கூறுவது உண்டு. பழைய சாதத்தின் மகிமையை நாங்கள் பல நண்பர்களுக்கு எடுத்துக் கூறவே , டில்லியில் பலர் காலைச் சிற்றுண்டியாகப் பழைய சாதத்தையே விரும்பிச் சாப்பிட ஆரம்பித்தார்கள்.
****
அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் மெளண்ட்பாட்டன் பிரபு ஒரு விருந்து அளித்தார். விருந்தின் போது எந்த ஆடைகளை அணிவது என்பது குறித்துச் சுவையான விவாதம் நடந்தது. ஒழுங்கு முறைக்குரிய விசேட ஆடைகளை அணிந்து தான் உறுப்பினர்கள் விருந்தில் பங்கேற்க வேண்டும் என்று பல உறுப்பினர்கள் கருதினார்கள். ஆனால் இது பற்றி அழைப்பிதழில் எதுவும் குறிப்பிடவில்லை.
தமிழர்கள் வழக்கமாக அணியும் வேட்டி, சட்டையுடன் செல்வது என்று நானும் அளகேசனும் முடிவு செய்தோம். இந்த ஆடைகள் மெளண்ட் பாட்டனுக்கு எரிச்சலூட்டும் என்று சில நண்பர்கள் சொன்னதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. வேஷ்டி சட்டை அணிந்து தான் விருந்துக்குச் சென்றோம்.
விருந்தின் போது, மெளண்ட்பாட்டன் பிரபு முதலில் எங்களை நோக்கி வந்ததைக் கண்டு நாங்கள் வியப்புற்றோம். அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களான நாங்கள் பணி புரியும் விதம் குறித்து எங்களிடம் விசாரித்தார். எங்களுடைய வேட்டியும் சட்டையும் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றவை என்று அவர் குறிப்பிட்டார். மெளண்ட்பாட்டனுக்கு முன்பு வைசிராயாக இருந்தவர்கள் ஏகாதிபத்திய ஆணவத்துடன் செயல் பட்டார்கள். ஆனால் மெளண்ட்பாட்டன் இந்தியர்களின் மரபுகளையும், பழக்க வழக்கங்களையும் வெறுக்காமல் ஏற்றுக் கொண்டார்.
***
இந்தியாவை மொழி வழி மானிலங்களாகப் பிரிப்பதற்குப் பதிலாக, நாட்டை ஐந்து அல்லது ஆறு மானிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்ற திட்டத்தை, மேற்கு வங்காள முதல் அமைச்சர் டாக்டர் பி சி ராய், சில முக்கியமான தலைவர்களை ஆலோசனை கலந்த பிறகு, வெளியிட்டார்.
மேற்கு வங்காளத்தையும் , பீகாரையும் ஒரே மானிலமாக இணைக்க வேண்டும் என்று அவர் கருதினார். இந்த இரு மானிலங்களின் இணைப்புக் குறித்து பீகார் முதலமைச்சருடன் ஓர் உடன் பாட்டைக் கூட அவர் செய்து கொண்டார்.
தென்னிந்தியாவில் கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு அடங்கிய தட்சிணப் பிரதேசம் ஒன்றை அமைக்கலாம் என்றும் யோசனை கூறப்பட்டது. இந்த யோசனை குறித்துக் கணிசமான விவாதம் நடந்தது.
1956-ம் ஆண்டில் அமிர்தசரஸ் நகரில் நடந்த அ.இ.கா.க கூட்டத்தில் இந்த விஷயம் குறித்து விவாதிக்கப் பட்டது. டாக்டர் பி சி ராயின் திட்டத்தை ஏற்றுக் கொள்ளலாம் என்று பரிந்துரைத்த ஒரு தீர்மானத்தை கோவிந்த வல்லப பந்த் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானத்தை வழிமொழியுமாறு நான் கூறப் பட்டேன்.
தட்சிணப் பிரதேசம் அமைப்புக் குறித்துக் காமராஜர் அதிருப்தி கொண்டிருந்தார். எனவே கோவிந்த வல்லப பந்தின் தீர்மானத்தை நான் வழிமொழிய காமராஜர் ஒப்புக் கொள்ளாவிட்டால் எனக்குத் தர்ம சஙகட நிலை ஏற்படும் என்று காங்கிரஸ் மகாசபையின் தலைவரிடம் கூறினேன்.
அதைத் தொடர்ந்து, காமராஜரிடம் இது பற்றிக் கேட்கப் பட்டது. கோவிந்த வல்லப பந்தின் தீர்மானம் குறித்துத் தமக்கு ஆட்சேபம் எதுவுமில்லை என்று காமராஜர் கூறினார். பிறகு தீர்மானத்தை வழிமொழிந்து நான் பேசினேன். டாக்டர் பி சி ராயின் திட்டத்திற்குத் தமிழ் நாட்டில் போதிய ஆதரவு இல்லை என்றும், எனவே சர்க்கஸ் கூடாரத்தில் கம்பியின் மீது நடப்பவன் நிலையில் நான் இருந்தேன் என்றும் எனது உரையில் குறிப்பிட்டேன்.
பின்னர், பந்த் கொண்டு வந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. அந்தத் தீர்மானத்தை வழி மொழிந்தவன் என்ற வகையில் இந்த விவகாரம் குறித்துச் சில நடவடிக்கைகளை நான் எடுப்பது அவசியம் என்று கருதினேன்.
தட்சிணப் பிரதேசம் ஏற்பட்டால் , அதன் முதலாவது முதலமைச்சராகக் காமராஜர் இருப்பதற்குக் கர்நாடக கேரள முதலமைச்சர்களின் சம்மதத்தையும் நான் பெற்றேன்.
நேருஜியிடம் இந்த விவரங்களைத் தெரிவித்தேன். காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கலாம் என்று நேருஜி சொன்னார். பெங்களூரில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடியது.
அக்கூட்டத்தில் நேருஜி நடு நிலையான ஒரு போக்கை மேற்கொண்டார். முடிவை எவர் மீதும் திணிக்கப் போவதில்லை என்றும், மூன்று முதலமைச்சர்களும் இந்த முடிவை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று தாம் விரும்புவதாகவும் நேருஜி கூறினார்.
பிற்பகல் கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்பாகக் காமராஜருக்கு ஈ வெ ராமசாமி நாயக்கரிடமிருந்து ஒரு தந்தி வந்தது. அந்தத் தந்தியில் தட்சிணப் பிரதேச அமைப்பு யோசனையை ஈ வெ ரா கடுமையாக எதிர்த்திருந்தார். தட்சிணப் பிரதேசம் அமைக்கப் பட்டால் இதர மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் தமிழர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள் என்றும், சென்னை மாகாணத்தில் காமராஜரின் தலைமை நீங்கி விடும் என்றும், அந்தத் தந்தியில் ஈ வெ ரா காமராஜரை எச்சரித்தார்.
ஈ வெ ராவிடமிருந்து இவ்வாறு ஒரு தந்தி வந்தது என்ற விவரம் அப்போது தெரியாது. ஆனால் பிற்பகலில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடியதும் தட்சிணப் பிரதேசத்திட்டத்தைத் தாம் ஆதரிக்க வில்லை என்றும், எனினும் காரியக் கமிட்டி அந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டால் தாம் அதை ஒப்புக் கொள்வதாகவும் காமராஜர் தயக்கத்துடன் கூறினார்.
பெரிய மாநிலங்கள் அமைப்பதில் நேருஜிக்கும் உற்சாகம் இல்லை என்று தோன்றியது. அத்துடன் தட்சிணப் பிரதேசம் அமைக்கும் யோசனை கைவிடப் பட்டது.
(சி.எஸ் எழுதிய ‘என் வாழ்க்கை நினைவுகள் – திருப்புமுனை ‘ என்ற நூலிலிருந்து.)