நிலாவிற்கு

நெப்போலியன்


நினைவுகளுக்குச்
சொல்லிவிடு
நீயும் நானும்
இல்லையென்று
கனவுகளுக்குச்
சொல்லிவிடு
நீயும் நானும்
நிஜமென்று

முத்தம்
உன் முந்தானை.

கோபம்
உன் கொலுசு.

சிரிப்பாய்
மல்லிகைப் பற்களாய்.

வெட்கம்
விரட்டாத பொழுதுகளில்
விழித்திருக்கும்
நம் நெருக்கம்
இன்று இல்லை
இல்லையாதலால்,
நீ இல்லையென
சொல்லலாகுமோ ?

பிரிவுகளில் பிறக்கும்
தவிப்பின் ருசி
பிரியாமல் கிடைப்பதில்லை
இரவுகளில் இறக்கும்
சிரிப்பின் வலி
சீக்கிரம் உலர்வதில்லை

இரத்தக்கட்டாய்
உள்ளே உறைந்துபோனாய்
நுரையீரல் சுவாசமெல்லாம்
நீயே நிறைந்துபோனாய்
கிழிந்துபோன
இருதயக்கூடு
இனி யார் வந்தடைய ?

நெருங்கிய நிமிடங்களின்
நிம்மதி
நொறுங்கிய நொடிகளை
யாரிடம் சொல்ல ?

உனக்கு முன்
நான் இறந்தால்
பாக்கியம்
உனக்குப் பின்
நான் இருத்தல்
இல்லை சாத்தியம்

கிழித்த கோடுகளின்
இருபுறமும்
நாம் இல்லை
பிடிவாத இறுக்கங்கள்
போட்ட எல்லை
இனி இல்லை

ஒவ்வொரு
முழுநிலா நாளிலும்
உன்னைக் காணப்போகும்
சந்தோஷத்தில்
தேய்பிறை நாட்களில்
நாளும் கரைகின்றேன்….
தேயாத கவிதைகளை
உனக்காய் வடிக்கின்றேன்….
—-
kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation

This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

நெப்போலியன்

நெப்போலியன்

You may also like...