உடல் கொள்ளும் வேதனை
உதிரம் வெளியேற துடிக்கும் தருணம்
வெற்றுடம்பில் உண்டாகும் மாற்றங்களுக்காக
உண்டாக்கப்படும் மாற்றங்களைத் தாளாமல்
உயிர் போகும் வலி- என்று
சத்தமிடும் ஓலங்கள்..
வேற்று கூடுகள் ஊடுருவி
உயிர் எடுக்க வேட்டையாட
சலனமின்றி ஊற்றெடுக்கும் வலி – என்றும்
நிசப்த மௌனங்கள்…
குருதி குமுறி வெளிநடக்க
உடல் கொள்ளும் சோர்கை..
உபாதை இன்றி உயிர் எடுக்க
வலி ஏற்கும் அஹிம்சை முறை..
மரணம் எங்ஙனம் என
உணர்ந்து கூற
மனிதர் எவரும் இலர்..
மனம் ஏற்கும் வேதனை இன்றி
மரணத்திற்கு இல்லை ஒத்திகை..!!
–
உறவினர் வீட்டுத்திருமணமொன்றிற்குச்சென்றுவிட்டு நானும் என் மனைவியும் திரும்பிக்கொண்டிருந்தோம். திருமண நிகழ்வில் இசைச் சங்கதிகள் ஆழமாய்த்தெரிந்த ஒரு நாதசுரக்காரரின் வாசிப்புக் கேட்ட பின்னே நல்ல தொரு மண விருந்து. சாப்பாட்டுப்பந்தியில்தான் சுவை மிகுந்த எத்தனை எத்தனைப்பதார்த்தங்கள். கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்தான். சாப்பிடுவோர் முகம் பார்த்து இலை பார்த்து ப்பரிமாறும் சமையல் சிப்பந்திகள். திருமண விருந்து முடிந்து இனம் புரியாத ஒரு நிறைவு எங்கிருந்தோ வந்து கள்ளமாய் மனதிற்குள்ளே ஆக்கிரமித்துக்கொண்டது. . இது மாதிரி எல்லாம் எப்போதேனும் மட்டுமே நிகழ்கிறது.
மண்டபத்தின் வாயிலில் மணமக்களை வாழ்த்த வந்தோர்க்கு பொறுப்பாய் வழங்கிய அந்த திருமணத் தாம்பூலப்பை சகிதமாய் அத்திப்பட்டு ரயில் நிலையம் நோக்கி நானும் என் மனைவியும் அந்த மண்சாலையில் மெதுவாகவே நடக்கத்தொடங்கினோம்.. நடக்கும் தூரம் மட்டுமே உள்ள சிறிய ரயில் நிறுத்தம்.
சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையம் தாண்டி வடக்கே போனால் நேர்படும் வட இந்திய உணர்வு.. பெரும்பாலும் ரயில் பயணங்களால் மட்டுமே இணைந்துகொண்டு வாழ்க்கையில் உறவு பேணும் கிராம மக்கள். அவர்களின் தோள் அமர்ந்த பொருத்தமில்லா சாமான் மூட்டைகள். வயிற்றுப்பிழைப்புக்கு அலையாய் அலைந்துதிரியும் அவர்களின் முகச்சாயல்கள். அவை பார்ப்போர்க்குத்தெரிவிக்கும் மன வலிகள். காய்ந்துவிட்டுப்போன அவர்களின் பரட்டைத் தலை. அந்தத் தலை வதியும் செம்பட்டை முடி.க்கற்றை. தாம் தின்னக் கொண்டுவந்ததை மட்டுமே கிடைக்கும் மர நிழல் கீழாகக் கூட்டமாய் அமர்ந்து பங்கிட்டுக்கொள்ளும் இலகு மனோபாவங்கள். அவர்களோடு சிக்கித்தவிக்கும் வாரிசுகளாய் அவர்கள் பெற்றுப்போட்ட சின்னஞ்சிறுசுகள்.
அத்திப்பட்டு ரயில் நிறுத்தத்தில் நிற்காமல் அகம்பாவம் கனக்கச் செல்லும் எத்தனையோ அசுர வேக ரயில் வண்டிகள். இடை இடையே ஏழைக்கு இறங்கி சிறு சிறு ஊர்களிலும் நின்றுசெல்லும் பெரு மனம் கொண்ட வண்டிகள். . அவை நிற்கும் சமயம் தாம் ஏறிக்கொள்ளத்தகுதியுடைய பெட்டிகள் தேடித்தேடி ரயில் வண்டியின் முன்னும் பின்னும் அலையும் அம்மக்களின் பரிதவிப்புக்கள். ஏறிய வண்டியில் இருக்கையில் அமரும் இடமிருந்தும் அமரக்கூசும் அவர்களின் மன அவரோகணங்கள். பெட்டியில் ஏறி விட்ட அவர்களை மனம் ஒட்டாமல் பார்க்கும் முன்னமே ஏறி அமர்ந்த ரயில் பயணிகள். எல்லோருமாய் இங்கு இன்னும் நாமிருக்கும் நாடு நமதென்பது உணரா ஒரு பெரும்பகுதியின் சிறுகூறுகள்..
.
‘ அவன மறந்துடு அவன் தொலஞ்சிபோவட்டும். பெத்தவ நானு இருக்கேன் உனக்கு க்கஞ்சி ஊத்துறேன். வாயும் வவுறுமா இருக்கிற உன்னெ எட்டி வவுத்துல உதப்பானா படுபாவி. அந்தக்கருமத்த குடிச்சி குண்டி வெடிச்சி அவன் சாவட்டும். அவன உட்டுத்தொல. என்னோட கெளம்பு. நீ சொன்னா கேளு. அழுவாத.’
புலம்பிய வண்ணமாக இருந்தாள் ஒரு தாய். அந்தப்பெண் வயிரைச்சாய்த்துக்கொண்டு தன் தாயின் மடி கிடந்து தேம்பி த்தேம்பி அழுதாள். அவளின் கண்கள் அருவியாய் மாறிக் கண்ணீர்ச் சொரிந்துகொண்டிருந்தன. பார்ப்பதற்கே எனக்கு அத்தனைச் சங்கடமாக இருந்தது. சகிக்க முடியாமல் என் மனம் கிடந்து தவிக்கத்தொடங்கியது. காரணம் இல்லாமலா காரியம் எதுவும்.
இப்படியாக எங்கேனும் எப்போதேனும் யாரையேனும் பார்க்கும் போதெல்லாம் எனக்கு என் தங்கையின் நினைவு வந்து உறுத்தத்தொடங்கிவிடுகிறது.. நன்றாக ஒரு வாழ்க்கை வாழ்ந்து அவள் சீக்கிரம் போயிருந்தால் கூட என் மனம் சற்று ஆறியிருக்குமோ என்னவோ ஆதரவாய் அவளுக்கு ஒரு வார்த்தைப்பேசக்கூட யாருமில்லா ஒரு கூட்டத்தில் அவளை நானே மணம் செய்து கொடுத்துவிட்டது எப்படியெல்லாமோ என்னை உறுத்துகிறது.
செத்துப்போய்விட்ட எனது அம்மாதான் ஒரு தரம் என்னைக்கேட்டாள். ‘ இதுவே நீ பெத்த மகளாயிருந்தால் அவளையும் இப்படித்தான் கொடுக்கும் இடம் பற்றி ஏதும் விசாரிக்காமலேயே கொடுத்திருப்பாயோ’. அம்மாவின் இந்தக்கேள்விதான் இப்போதும் என்னை எப்படி உலுக்கி எடுக்கிறது. பாசமாய் வளர்த்த ஒரு தங்கையின் வாழ்க்கை திருமணம் என்னும் சூறாவளியில் சிக்கிச் சின்னா பின்னமாய்ப்போனது விடவும் இன்னும் அதிகமாய்த்தான் தவித்துப்போனேன்.
அழுது அரற்றும் எந்தப்பெண்ணைப்பார்த்தாலும் எனக்கு என் தங்கையின் நினைவு பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது.. பெண்ணே உன் மனத்தை புரிந்துகொள்ளா ஒருவனோடு மட்டுமே வாழ்ந்து உன் வாழ்க்கையை முடித்துக்கொள். இது சொர்க்கத்தில் எடுக்கப்பட்ட ஆகப்பெரிய முடிவாமே. தெரியுமா உனக்கு. கண்ணைக்கட்டிக்கண்டு படைப்புக்கடவுள் அந்தப் ப்பிரம்மன் தன் பக்கத்திற்கொன்றாய் தயாராய் வைத்து இருக்கும் ஆண் பெண் எனும் இரண்டு கூடையினின்று ஒரு ஒரு கயறு எடுத்து இரண்டையும் முடித்து முடித்து வீசிப்போடுவதாமே இந்த மண வாழ்க்கை என்பது. இல்லா ஒன்றான இந்துமதம் இப்படியாய்க் கயவர்கள் பிடியில் அகப்பட்டுக்கொண்டு வரலாற்றில் பெண்களுக்கு இழைத்துவிட்டக்கொடுமைகள்தான் சொல்லில் அடங்கிவிடுமா என்ன?.
நான் அந்தப்பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
‘ சாமி நீங்களே ஒரு நியாயம் சொல்லுங்க. இவ எப்படி அவன் கூட வாழ்வா. உதப்பட்டு சாவரதா. புள்ளதாச்சின்னு பாக்காம எப்பிடி அடிச்சிருக்கான் பாவி. அவன் ஒரு குடிகார பேமானின்னு தெரியாம போயிடிச்சி. கிளிய வளத்து கொரங்குகிட்ட போயி குடுப்பனா. என்னைக் கட்டிகிட்டவன் அவ அப்பன் போயி சேந்துட்டான். நான் பொம்பள எதுக்கும் ஆவாத ஒரு கம்முனாட்டி கெடந்து சிருப்பா சிரிக்குறன்’
நான் மட்டும் என்று இல்லை என்னோடு நின்றிருந்த இன்னொரு அரைக்கை சட்டை போட்டிக்கொண்டிருந்த ஆசாமி கண்கள் கலங்கி அந்தப்பெண்னுக்காகப்பரிந்து பேச ஆரம்பித்தார்.
‘ நானு சொல்லுறதக்கேளு. நீ உன் பெத்த பொண்ண இட்டுகினு போ. குடிகாரன்னு தெரிஞ்கிகாம உம் பொண்ண குடுத்துட்டு இப்பிடி நிக்குற. இப்ப முழுவாம இருக்குற பொண்ணு வேற இத வச்சி அவன் குடும்பம் என்னாத்த பண்னப்போறான்’ இப்படி ஆரம்பித்தார் அந்த ஆசாமி.
தாயும் மகளும் மீண்டும் அழுகையை விட்ட இடத்திலிருந்து தொடங்கினர்.
‘ பொண்ணு தேகத்த பாருங்கோ தாம்பு கயிரெடுத்து உடம்பெல்லாம் என்னுமா அடிச்சிருக்கான் அவன் கயில கட்ட மொளக்காதா.நானு பெத்த தங்கமே இந்த கதிக்கு ஆளாகி நீ கெடக்கையிலே பெத்த வவுறு பத்தியல்வோ எரியுது’ தாய் ஒரு பாட்டம் சொல்லி நிறுத்தினாள்.
என்னோடு நின்றிருந்த அந்த அரைக்கை சட்டை ஆசாமி மீண்டும் ஆரம்பித்தான்.
‘ இப்பிடித்தான் கண்ட நாயுவுளுக்கு பெத்த பொண்ண குடுத்துட்டு ஆயி அப்பன் நாம சின்னப்படுறம். அதுவ பேமானிப்பயகிட்டக்கெடந்து சீ படுது. உம்மவள இட்டுகினு போயி ரவ கஞ்சின்னாலும் உன் கையால குடு. அப்புறம் பாக்குலாம் அந்தக்கழுததான் என்னா செய்யுதுன்னு’
‘ நல்ல ரோசன. இந்த க்கழுத வருணுமே. நானு கெஞ்சிப்பாகுறன் என் சாமி. அந்த நாயி இவள கட்டிகுவேன்னு ஒத்த காலுல நின்னான். என்னா வேசம் போட்டன்.
பொம்பள நானு ஏமாந்து போனேனே. இப்ப கெடந்து கேவுனா கூவுனாதான் ஆவுற கதயா. மோசம் போயிட்டு நிக்குறன். கடவுளே உனக்கு கண்ணுதான் உண்டான்னு தெரியிலயே என்னா செய்யுவேன்’
தாய் சொல்லி சொல்லி அழ மடி கிடந்த அவளின் பெண்ணும் தேம்பி த்தேம்பி அழுதாள். மூக்கைத்துடைத்துக்கொண்டாள். தலைமுடி கன்னா பின்னா என்று கலைந்து அலைந்து கிடந்தது. நான் அந்த ஆசாமியோடு அருகில் நின்று கொண்டேன். எனக்கு அவனின் பேச்சுக்கள் பிடித்திருந்தன. அவன் பேசுவதை எல்லாம் நானே பேசுவதாக என் மனம் சொல்லி என்னை த்தேற்றியது.
‘ நம்ப பொழப்ப நாம பாக்குணும். ஊரு பஞ்சாயத்து நமக்கு எதுக்கு. தெருவுல ஆயிரம் நடக்கும். நீரு என்னா ஒலகத்துக்கு எல்லாம் வாத்தியாரா. எல்லா ஆம்புளயும் இப்பிடித்தான். குடிச்சிட்டு அடீக்குறவன் எவ்வளவோ தேவுலாம். படிச்சுட்டு அடிக்குறவன் இங்க இல்லயா’ என் மனவி எப்போதும் போல் தன் வசனம் தொடங்கினாள்.
‘ என்னா சொல்லுற நீ. யாரைச்சொல்லுற’ பட்டென்று கேள்வி கேட்டேன்.
‘ அடிக்குற ஆம்புளயத்தான் சொல்லுறேன். நாம கட்டிகிட்டு வந்த பொம்புள நம்பள எப்பிடி அடிச்சிடுவான்னுதான் எல்லா ஆம்புளயும் அந்த பொம்புளயை போட்டு போட்டு அடிக்குறான்’
இவள் சந்தடி சாக்கில் நம்மைத்தான் சாக்குப்போக்காய்ப்பேசி வைக்கிறாளோ என்று எனக்கு உரைக்க ஆரம்பித்தது.
நான் ஒருமுறை என் மனைவியை அழுத்தம் கூடி ஒரு நோட்டம் விட்டேன்.
‘ தேவுலாம் நல்லாதான் இருக்கு. ரயிலு எப்ப வருன்னு கேளுங்க. நமக்கு கெடக்கு கென வேல தெரியுதா’ என்றாள்.
மானிட சமூகத்திற்கு ஏதோ மாபெரும் சேவை செய்ய நான் வரிந்துகட்டிக்கொண்டு நிற்பதுவாக என் மனம் மலை உச்சி மீது ஏறிக்கொண்டிருக்க இந்த என் மனைவி என்னும் ஜந்து வந்து அதற்கு இடையூறு செய்வதாகப் பாவித்து அல்ப கர்வம் ஒன்று எனக்குள் சிறிய மின்னலாய்த்தோன்றி மறைந்தது.
ரயில் வரும் நேரம். அத்திப்பட்டு நிலையத்தில் மக்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பெருகத்தொடங்கியது. கையில் மூட்டையோ முடிச்சோ இல்லாத மனிதர்களே இல்லை. யாருக்கும் எதாவது எப்போதும் தேவையாகவே இருக்கிறது. ரயில் நிலைய சீருடைச் சிப்பந்திகள் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தார்கள். ஏதோ வேலை அவர்கட்கு இருந்துகொண்டே இருந்தது. அவர்களின் அந்த நடையே அவர்களையும் பயணத்திற்கென வந்த நம்மையும் எப்படி வகைப்படுத்தி க்காட்டிவிடுகிறது. ஏதோ இப்படி இப்படி யோசித்துப்பார்த்தேன். இன்னும் தாயும் மகளும் சிமெண்ட் நாற்காலி அமர்ந்து ஔயாமல் புலம்பியபடியே இருந்தனர்.
.இப்போது என் அருகிருந்து நியாயம் பேசிய அந்த அரைக்கை சட்டைக்காரன் சிமெண்ட் பெஞ்சில் அவர்களோடு அமர்ந்து ஆறுதலாய் ஏதோ சொல்லிக்கொண்டே இருந்தான். எனக்கு மனம் கொஞ்சம் இறுக்கம் தொலைத்தது. மனிதர்கள் அங்கங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள் அப்படி ஒன்றும் இருண்டு விடவில்லை நான் என்னுள்ளே சொல்லிக்கொண்டேன்.
பிளாட்பாரத்தில் கேட்கிறது ஒரு இரைச்சல். ஒருவன் கையில் உருட்டை க்கட்டை ஒன்றொடு தாண்டுத்தப்படியில் நடந்து வருகிறான்.
‘ எங்க அவ வந்த ஆத்தா செறுக்கி. தொலச்சிப்புடுவேன் நா இல்லாத நேரம் பாத்து மவள இட்டுகிணு ரயிலுக்கு வந்துப்புட்டாளோ மாதச்செரு என்னா செய்யுறன் பாரு இப்ப. நா கட்டிகிட்டு வந்த அந்த நாயிதான் பீய திங்க அங்க ஏம் போவுது. பாக்குறன் இப்ப.’
கூவியபடி வந்த உருட்டைக்கட்டைக்காரன் கம்பீரமாய் நடந்து வந்தான்.
எனக்கு ஏதும் புரியாமல் இருந்தது. நான் திகைத்துப்போனேன்.
கையிலிருந்த கட்டையை சுழற்றிய படியே அவன் பேசத்தொடங்கினான்.
‘ நாயிவுளே உங்களுக்கு இந்த திருட்டுப்புத்தி எதுக்கு. நா இல்லாத நேரம் பாத்து ரயிலுல ஏறிம் போயிட்டா வுட்டுடுவனா நா. தொலச்சிபுடுவேன் சாக்குரத. யாரு எவருன்னு தெரிஞ்சித்தான் கத நடக்குதா. இன்னா இதுன்றென்’
என கொக்கரிக்க ஆரம்பித்தான்.
அவர்களோடு ஆறுதலாக ப்பேசிக்கொண்டிருந்த அந்த அரைக்கை சட்டை சிமெண்ட் பெஞ்சிலிருந்து பைய எழுந்து நின்றது.
‘ இவன் யாரு அரைக்கை சட்டைக்காரன்னு கேக்குறன். ரவ நேரத்துக்குள்ள எங்கனா ஒரு செட் பண்ணிட்டு கெளம்பிடலாம்னு ரோசனையா. யார்ரா நீ பீய திங்க வந்துட்ட.. என்னத்தெரியுமா உனக்கு கேக்குறன்ல’
‘ இல்ல பொம்பளங்க கேவி கேவி அழுதுதுங்க. தாயும் மொவளும் வேற. அந்த பொண்னு வாயும் வவுறுமா இருக்குது. அதான் எனக்கு மனசு கேக்குல’
‘ எலே ஔடுறா ஔடு கை கட்டையாலே ஒரு இழுப்பு இழுப்பு இழுத்தன்னா மவனே இங்கயே தூளாயி பூடுவ தெரிதா நக்குற நாயி நீ என்னா பேசுற இவுரு கடவுளு வந்துருக்காரு. ம்ம்ம். எடத்த காலி பண்ணு. ஒரு வார்த்த பேசுன இப்ப உன் உசுறு இருக்காது’
அந்த ஆசாமீ லேசாக நகரத்தொடங்கினான்.
‘ங்க இன்னா ப்பார்வ பாக்குற ஔடுறா ஔடு. நிக்காத திரும்பிப்பாக்காத’ என்றான் கையில் உருட்டுக்கட்டை வைத்தவன்.
எனக்கு சொர சொர என்று இருந்தது.
தாயும் மகளும் அழுகை நிறுத்தி சுதாரித்துவிட்டு எழுந்து நின்று கொண்டனர். அரக்கை சட்டைக்கரனை சுற்றும் முற்றும் தேடிப்பார்த்தேன். அவன் எங்கே சென்று மாயமாய் மறைந்தானோ. யாருக்குத்தெரியும்.
‘ கெளம்பு வூட்டுக்கு’ என்றான் உருட்டைக்கட்டைக்காரன் தன் மனைவியிடம்.
‘ உன் சேதி என்னா வர்ரியா இல்லை இப்பிடியே கெளம்புறயா’ என்றான் அந்தப் பெண்ணின் தாயிடம். அந்தத்தாய் அவனிடம் எதுவும் பதில் பேசவில்லை. தன் மகளை மட்டும் ஒருமுறை ஆழமாய்ப் பார்த்துக்கொண்டாள்
அவனும் அவளும் இப்போது நடக்க ஆரம்பித்தனர்.
‘ போய் உன் வேல எதனா இருந்தா பாரு . அலையாதெ தெரிதா.’ என்றான் உருட்டுக்கட்டைக்காரன் என்னிடம்.
அவர்கள் இருவரும் முன்னே செல்ல அந்தத்தாய் அவர்களின் பின்னால் நடக்கத்தொடங்கினாள். என்னை ஒருமுறை அந்தத்தாய் பார்த்துக்கொண்டாள். எனக்குள் அந்தப்பார்வை மனத்தின் வலியை இன்னும் கூட்டியது.
‘ வேடிக்கை என்னா வேடிக்கை வழிய பாத்து நட ‘ என்றவன் அவள் கையைப்பிடித்து க்கொண்டு முன்பாக நடந்துசென்றான்.
சென்னை திரும்பும் ரயில் அத்திப்பட்டு நிலையத்துக்குள் பரபரப்பாய் நுழைந்து கொண்டிருந்தது.
நானும் என் மனைவியும் அதனுள் இடம் பிடிக்கவேண்டுமே என்ற புதுக்கவலையோடு தயாராக விரைத்துக்கொண்டு பிளாட்பாரத்தில் நின்றோம்.
‘நமக்குன்னு பொழப்பு இருக்கு’ என்றாள் அவள். வலி எனக்குள் இன்னும் சற்றுக் கூடுதலே ஆகியது.
——————————————————————-
வெள்ளிக்கிழமை என்றால் கிளாஸில் எல்லோருக்கும் கொண்டாட்டம் தான். பீ. டி பீரியட்! மூணு மணியிலிருந்து நாலு மணி வரை…முழுசாக ஒரு மணி நேரம் ப்ளேகிரவுண்டு கிளாசின் கையில். அடிக்கடி மட்டம் போடும் ஆறுமுகம் கூட வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் ஸ்கூல் வந்துவிடுவான். மதியத்திலிருந்தே பசங்களிடம் பரபரப்பு துவங்கிவிடும்.
” டேய்.. நான் உன் டீம்டா…”,
” இந்த வாரம் நான் கோலி கிடையாது…போன வாரம் கூட நான் தான் நின்னேன்”,
” இன்னிக்கு எப்படியாவது சார்கிட்ட கேட்டு அந்த புது பால வாங்கணும்டா.. 7Dக்கு மட்டும் குடுத்தாரு”
பீ. டி பீரியடிற்கு முன்பு தமிழ் கிளாஸ். தமிழ் அம்மா, சீதா பாட்டி சரியான வில்லி. ஹோம் வொர்க் செய்யவில்லை என்றால் இம்போசிஷன் குடுப்பது அதன் வழக்கம். ஆனால் வெள்ளிக்கிழமை மட்டும் விவரமாக கிளாசிற்கு வெளியே நிறுத்திவிடும். கிளாஸ் முடிந்தவுடன் எல்லோரும் ப்ளேகிரவுண்டிற்கு ஓட,ஹோம் வொர்க் செய்யாதவர்கள் சீதா பாட்டியின் பின்னால் ஸ்டாப் ரூமிற்கு ஓட வேண்டும்.
“அம்மா …சாரிம்மா …….. நாளைக்கு சப்மிட் பண்ணிடறேன்” .
அவசரம் புரிந்தும் வேண்டுமென்றே இழுத்தடிப்பது சீதா பாட்டியின் வழக்கம், “அப்படி என்னடா அவசரம்… பீ. டி பீரியடா? ஒழுங்கா ஹோம் வொர்க் பண்ணியிருக்கலாம்ல?”
அதற்குள் கிரவுண்டில் டீம் பிரித்துவிடுவார்கள், லேட்டாக போனால் உப்புக்குசப்பாணிதான் என்ற பதட்டம் பசங்களுக்கு.”நோட்டு தொலைஞ்சுபோச்சுமா” , ” எனக்கு நைட்டு வயிறு வலிமா” என்று ஆளாளுக்கு சாக்குபோக்கு சொன்னார்கள்.
“சரி சரி.. போங்க.. நாளைக்கு சப்மிட் பண்ணனும்” சொல்லி முடிப்பதற்குள் ஒடதுடங்கினார்கள் பசங்கள். நான் மட்டும் மெதுவாக நகர்ந்தேன்.
“டேய்.. குமார் நில்லு…. என்ன ஆச்சு உனக்கு? நீ எப்பவும் ஒழுங்கா ஹோம்வொர்க் செஞ்சிவடுயே.. என்னாச்சு இன்னிக்கு? ” என்று என்னை நிறுத்தியது சீதா பாட்டி .
” இல்லமா…. நோட் கொண்டுவரலை….மறந்துட்டேன்..” என்று தயங்கினேன் நான்.
” சாப்பிட மறக்குமா? …நானும் பாத்துகிட்டே இருக்கேன் ….கரெக்ட்ஆ வெள்ளிக்கிழமை ஆனா ஹோம் வொர்க் செய்யறதில்லை… ‘ஒலியும் ஒளியும்’ பாக்கறயா? நாளைக்கு உங்க அம்மாவ கூட்டிகிட்டுவா”
” சரி மா” என்று தலையாட்டினேன்.
” சரி .. இப்போ போ”
நான் மெதுவாக ஊர்ந்து,ஊர்ந்து ப்ளேகிரவுண்டிற்கு போனேன். அதற்குள் டீம் பிரித்து முடித்திருந்தார்கள்.’அப்பாடா’ என்று இருந்தது எனக்கு. வழக்கம் போல ‘லேட்’டானதற்கு தண்டனையாக கிரவுண்டை சுத்தி மூணு தடவை ஓடியே பிறகே விளையாடலாம் என்றார் ஆல்வின் சார். “சரி சார்” என்று தலையாட்டினேன் நான்.
மூணு முறை ஓடிவிட்டு, மரத்தடிக்கு சென்று அமர்ந்துகொண்டேன், முடிந்தவரை யார் கண்ணிலும் படாமல் பார்த்துக்கொண்டேன்.சில சமயம் ஆல்வின் சார். ரூமிலிருந்து பார்த்துவிட்டால் கூப்பிட்டு அனுப்புவார்.
போன வாரம் கூட இப்படித்தான்.
” என்னடா…. மரத்தடில என்ன பண்ற ? எந்த டீம் நீ? விளையாடல?”
” இல்லை சார்”
” ஏன்டா… பின்ன எதுக்கு பீ.டி பீரியட்? , சும்மா உக்காரகூடாது” என்று சொல்லிவிட்டு விசில் அடித்து இரண்டு டீம் காப்டனையும் கூப்பிட்டார்.
” டேய் ….. குமார ஒரு டீம்ல சேத்துகோ”
” ஐயோ…… பொட்டை பையன்…….எனக்கு வேண்டாம் சார்” – ஒருவன்
” ஆமாம் சார்! சரியான ஒம்போது இவன்…. விளையாட லாயக்கு இல்லை” – இன்னொருவன்
” டாய்…….உத படுவ… உன் டீம்ல சேத்துக்கோ ” என்று ஒரு டீமில் தள்ளிவிட்டார் ஆல்வின் சார்.
வேண்டாவெறுப்பாக என்னை அந்த டீமில் சேர்த்துகொண்டார்கள். கிரவுண்டுக்கு போனவுடன் பசங்களின் கேலி துடங்கிவிட்டது.
” ஏன்டா… குமாரி…… பொண்ணுங்களோட போய் கொக்கோ விளையாடுடா……இங்க என்ன பண்ணற?”
” பொண்டுக”
” அஜக்கு”
சுட்டெறிக்கும் சொற்கள்! வேறு யாரையோ கேலி செய்கிறார்கள் என்பது போல காதில் வாங்காமல் நடந்தேன்.
” நடையா……இது நடையா” என்று ஒருவன் கல்லை எடுத்து என் இடுப்பில் குறிவைத்தான். சுளீரென்று வலி சுண்டி இழுத்தது.
” அம்மா…” என்று கத்திக்கொண்டே கிரவுண்டில் நான் சறிய, சுற்றி பத்து பேர்.
” பாருடா… ஒரு கல்லடி தாங்கல ”
” நீயெல்லாம் ஆம்பளை.. ” என்று ஒருவன் காலால் உதைத்தான், கத்தினேன் நான்.
” பாருடா.. பொட்டை கத்துது” உதை தொடர்ந்தது.
” பாத்துடா….கொட்டைல படப்போவுது” இன்னொருவன் சிரித்தான்.
” பொட்டைக்கு ஏதுடா கொட்டை….. பாத்துருவோமா…..” என்று ஒருவன் கேட்க, இரண்டு பேர் சேர்ந்து என் டவுசரை இழுத்தார்கள்.
” விடுடா… … விடுடா…அம்மா” என்று கத்திக்கொண்டே எழுந்தேன் நான். விடாமல் இரண்டுபேரும் டவுசரை இழுக்க, சமாளித்து எழுந்து, அவர்களை தள்ளிவிட்டு, வேகமாய் ஓட ஆரம்பித்தேன்
” ஓடு.. பொட்டை…..உனக்கெல்லாம் புட்பால் கேக்குதா?” பத்து பேரும் கொல்லென்று சிரித்தார்கள்.
ஓட்டம் பிடித்து, மரத்தடியில் வந்து அமர்ந்த பொழுது…. மூச்சிரைத்தது. கை கால்கள் நடுங்கின. ஓடிய வேகத்தில் தொண்டை வறண்டது, தொண்டையில் எதோ அடைத்துக்கொண்ட மாதிரி ஒரு வலி. கண்ணீர் கண்களில் முட்டியது. அவமானத்தால் உடல் கூசியது. “அம்மா……. அம்மா……” என்று கத்தியவாறே உடைந்து அழ தொடங்கினேன். கண்கள் இருண்டது…….தலையில் பெரிய சுமையை ஏற்றி வைத்தாற்போல வலி. புல்வெளியில் சரிந்தேன்.
கண் விழித்த பொழுது வானம் இருட்ட ஆரம்பித்திருந்தது. அவசரமாய் எழுந்து ‘பேக்’கை மாட்டி கொண்டு வேகவேகமாய் நடந்தேன். வீட்டிற்கு வந்த பொழுது, வாசலில் அப்பா.
” நில்லுடா” என்று என்னை நிறுத்தினார்
” அப்பா”
” ஏன்டா லேட்?”
” பீ. டி பீரியட்பா ”
” அது தெரியும்.. நான் இப்போ தான் சேகர் வீட்டிலேர்ந்து வரேன்”. சேகரின் அப்பாவும், என் அப்பாவும் நண்பர்கள்.
“…………….”
” ஏன்டா….. ஒரு ….புட்பால் விளையாட தெரியாதா? ”
” ஹ்ம்ம் ……..” என்று சுவரோரம் நெளிந்தேன் நான்.
“என்ன நெளியற .. இங்க வா ” என்று கையை பிடித்து இழுத்தார் அப்பா
” ஒழுங்காதனே உன்ன பெத்தேன்…… ஏன் மானத்த வாங்கற….. அது என்ன நடை… பொட்டை மாதிரி?” என்று தலையை கட்டாயமாக அமுக்கி முதுகில் ஓங்கி ஒரு அறை.
இடிவிழுந்தார் போல இருந்தது, ” அம்மா” அலறினேன், “அப்பா வேண்டாம்பா…அடிக்காதீங்கபா”
” அடுத்ததரம்…… அப்படி நட, காலை உடைக்கறேன் ” இன்னொரு அடி பலமாய். ” இனிமே அந்த பக்கத்துக்கு வீட்டு பூங்குழலியோட விளையாடறத பாத்தேன், தொலைச்சேன்” காதை பிடித்து திருகினார் அப்பா.
” வேண்டாம்பா….இனிமே விளையாட மாட்டேன்பா.. அடிக்காதீங்கபா… ” வலி பொறுக்காமல் கெஞ்சினேன்.
அதற்குள் அம்மா அடுக்களையிலிருந்து ஓடி வந்தாள். “வேண்டாங்க, விடுங்க.. பாவம் பையன்” என்று என்னை இழுத்து அணைத்து கொண்டாள்.
” நீ செல்லம் குடுத்து குடுத்து தான் கெட்டுபோறான் ” என்று என்னை முறைத்துவிட்டு வெளியே நடந்தார் அப்பா. நான் தேம்பி தேம்பி அழுதேன்.
அம்மா என் கண்ணை துடைத்து, பேக்கை இறக்கினாள். “சரி வா……டிபன் தரேன்”
சுட சுட தோசை , தேங்காய் சட்டினி. பசி தாங்காமல் விண்டு விண்டு விழுங்கினேன்.
” ஏன்பா…..உனக்கு பூங்குழலிய விட்டா பசங்க யாரும் பிரெண்ட்ஸ் இல்லையா?” அம்மா கேட்டாள்.
” இல்லம்மா”
” நல்ல பசங்களா பாத்து பிரெண்ட்ஸ் புடிச்சிக்கோ .. இனிமே பூங்குழலி கூட விளையாடதே….. ஆம்பளை பையன் நீ அப்படி நடக்க வேண்டாமா?”
“சரிம்மா” என்றேன் நான்.
அம்மா என்ன சொல்கிறாள்? எப்படி நடக்க வேண்டும்? நான் என்ன தப்பாக செய்கிறேன்?
எதற்காக எல்லோரும் என்னை கேலி செய்கிறார்கள் என்பதே முதலில் புரியவில்லை.
மற்ற பசங்களை போல தானே நானும்? என் நடையில் என்ன பிழை? ஏன் என்னை “பொட்டை” என்று ஏசுகிறார்கள்?
ஏன் பசங்களில் யாருக்கும் என்னை பிடிக்கமாட்டேங்கிறது? ஏன் என் கூட யாரும் பிரெண்ட்ஸ்ஆக இருப்பதில்லை?
ஒன்றும் விளங்கவில்லை.
டெய்லி ஸ்கூலில் நரக வேதனைதான். நின்னால் கிண்டல், நடந்தால் கிண்டல், பேசினால் கிண்டல்! இதற்காகவே காலையில் எல்லோருக்கும் முன்னாடி ஸ்கூலிற்கு போய், என் சீட்டில் அமர்ந்துகொள்வேன். தண்ணி , பாத்ரூமிற்கு கூட அவ்வளவாக நகர மாட்டேன். பயம் …. வெட்கம் …கலக்கம்!
அப்பாவிடம் சொல்லுவது நடக்காத காரியம். அம்மாவிடம் ஒரு முறை ஸ்கூலில் பசங்களின் கிண்டல் தாங்க முடியவில்லை என்று அழுததற்கு,
” பாரு… பொட்டைபிள்ளை மாதிரி அழக்கூடாது….. பசங்கன்னா கிண்டல் பண்ணத்தான் செய்வாங்க, இதுக்கெல்லாம் அழலாமா? ” என்று என் வாயை மூடிவிட்டாள்.
கண்ணாடி முன் நின்று என்னையே திரும்ப திரும்ப பார்த்தேன். என்ன செய்வதென்று தெரியவில்லை. யோசித்து யோசித்து, தலை வலி அதிகமாகியது.மெதுவாக படுக்கையில் படுத்து கண்களை மூடினேன். ஸ்கூலுக்கு போகவே இஷ்டம் இல்லை. நாளை எதாவது சாக்கு சொல்லிவிட்டால் சனி ஞாயிறு லீவு… திங்ககிழமை வரை நிம்மதி.
———-
அப்பா சீக்கிரமே ஆபிசுக்கு போய் விட்டார். அம்மாவிடம் தாஜா பண்ணி, ஸ்கூலுக்கு மட்டம் போட்டேன்.
” பக்கத்து வீட்டுக்கு நேத்திதான் புதுசா குடி வந்திருக்காங்க… அவங்க வீட்டு பையன் கணேஷ் கூட உங்க ஸ்கூலுக்கு தான் வரப்போறான்” என்றாள் அம்மா
” அப்படியா?”
” ஆமாம் .. இன்னிக்கு வீட்டுலதான் இருக்கான், போ.. போய் பேசு… பிரெண்டு பிடிச்சிக்கோ” என்றாள் அம்மா.
நான் குளித்து, இட்லி சாப்பிட்டு பக்கத்துக்கு வீட்டுக்கு போனேன்.
” டேய் குமாரு” என்று சிரித்தாள் பூங்குழலி. இவள் இங்கே என்ன செய்கிறாள்?
” இவன்தான்டா கணேஷ் ……., கணேஷ் இவன் தான் குமார், பக்கத்து வீடு” என்று இரண்டு பேரையும் அறிமுகம் செய்து வைத்தாள்.
” நீ இன்னைக்கு ஸ்கூலுக்கு போல?” என்றேன் நான் குழலியிடம்.
” போலடா… எங்க அப்பா கடைல பூஜை ” என்றவள் ” கணேஷ் கூட உங்க ஸ்கூல்தான் வரப்போறான்” என்று அவனை பார்த்து சொன்னாள்.
கணேஷ் என்னை பார்த்து நட்போடு சிரித்தான். சராசரி உயரம் , சிவப்பு தோல்.பாக்க நல்ல பையனாக தெரிந்தான்.
” 7C” என்றான்
” நானும் 7C தான்” எனக்கு ஒரே குஷி.
” ஹய்……ஒரே கிளாஸ் ….” என்று குதித்தாள் குழலி.
” ஆமாம்” என்று இளித்தேன் நான்.
மூவரும் ஒன்றாக வீட்டிற்கு வெளியே ஓடினோம். “விளையாடலாம் டா” என்றாள்.
“சரி வா” – நான்.
” நானும் குமாரும் ஒரு செட்டு” என்று என் பக்கத்தில் வந்து நின்றான் கணேஷ்.
என்னால் என் காதுகளையே நம்ப முடியவில்லை.மனதிற்குள் ஒரே பூரிப்பு. இதுவரை எந்த பையனும் என்னை செட்டு சேர்துகொண்டதில்லை.பரம சந்தோசம் எனக்கு. மூவரும் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் ஓயாது விளையாடினோம்.
குழலி அம்மா வந்து அவளை கடைக்கு போகவேண்டும் என்று கூட்டிக்கொண்டு போனாள். கணேஷ் அவன் வீட்டுக்குள் என்னை அழைத்து சென்றான்.
அவன் அப்பா புதுசாக வாங்கி குடுத்த ரேஸ் கார் பொம்மையை காட்டினான். அவன் பழைய ஸ்கூல் பத்தி பல கதைகள் சொன்னான். பின்பு அவன் சைக்கிளை காட்டினான்.
” நல்ல இருக்குடா”
” உன்கிட்ட இருக்கா?”
” இல்லையே” என்றேன் நான்.
” ஸ்கூலுக்கு நடந்தா போற?”
” ஆமாம்”
” ஏன் உனக்கு சைகிள் ஓட்ட தெரியாத?”
” தெரியாது”
” வா நான் சொல்லித்தரேன் ” என்று என் கைகளை பிடித்து அதில் உட்கார வைத்தான்.
” வேண்டாம்டா ” எனக்கு சற்று பயம்.
” டேய் … நீ என் பிரெண்டா இல்லையா”
” பிரெண்டுதான்டா” என்று சிரித்தேன் நான்.
” அப்போ உக்காரு” என்று என்னை அமர்த்தி, சைக்கிளை பின்னால் பிடித்துகொண்டான். ” பெடல் போடு”.
நான் மெதுவாக அமுக்கினேன்.. சைக்கிள் ஒரு அடி முன்னே போக, ‘தொபக்கடி’ என்று கீழே விழுந்தேன், சைக்கிள் என்மேல்!
” பரவாயில்லை … முதல அடிதான் படும்” என்றவன் சைக்கிள்ளை பிடித்து தூக்கினான். நான் சமாளித்து எழுந்தேன்.
” உக்காரு” என்றாள் சைக்கிளை காட்டி
” போதும்டா.. ” எனக்கு கீழே விழுந்த அசிங்கம்.
” டேய்… ஒன்னும் ஆகாதுடா” என்று என்னை பிடித்து மீண்டும் அமர வைத்தான். இந்த முறை மூன்றடி …… திரும்பி ‘தொபக்கடீர்’!
இப்படியே பல முறைகள்.. பெரிதாக எதுவும் முன்னேற்றம் இல்லை.
“நாளைக்கு வா….. சொல்லித்தரேன்” என்றான்
” தாங்க்ஸ் டா” என்றேன் நான்
” சரி டா நாளைக்கு பாக்கலாம்டா…” என்று சைக்கிளை உள்ளே தள்ளி கொண்டு போனான்.
அவனை நிறுத்தி “டேய் கணேஷ்…. கிளாஸ்ல என் பக்கத்துக்கு சீட்டு காலிதான்.. நீ என்கூட உக்காரலாம்” என்றேன் நான், எனக்கும் ஒரு நண்பன் கிடைத்த குஷியில்.
” சரி டா.. டாடா”
அவனுக்கு டாடா சொல்லிவிட்டு வீட்டை நோக்கி நடந்தேன்.
” என்னடா , கணேஷ் என்ன சொன்னான்?” அம்மா கேட்டாள்.
” நல்ல பையன்மா … எனக்கு பிரெண்ட் ஆயிட்டான்” என்றேன் நான் பெருமிதத்தோடு.
” நல்லது போ! ” அம்மாவுக்கும் சந்தோசம்.
எனக்கு திங்கள்கிழமை எப்பொழுது வரும், ஸ்கூலிற்கு எப்பொழுது போவோம் என்றிருந்தது.
———-
இரண்டாவது பீரியட் ஆரம்பத்தில் கணேஷ் அப்பா அவனை கிளாஸில் கொண்டுவந்துவிட்டார். மிஸ் அவன் அப்பாவிடம் பேசிகொண்டிருக்க, நான் என் பெஞ்சிலிருந்து எழுந்து கணேஷை நோக்கி கையாட்டினேன். அவனும் என்னை பார்த்து கையாட்டி சிரித்தான். நான், என் கையை காலியாயிருந்த என் பக்கத்துக்கு சீட்டை நோக்கி காட்டி, “இங்கே வா” என்று ஜாடை காட்டினேன்.
சிறிது நேரத்தில் அவன் என் பக்கத்தில் வந்து அமர்ந்துகொண்டான்…. எனக்கு ஒரே ஜாலி. மிஸ் கிளாஸ் நடத்த ஆரம்பிக்க, கணேஷிடம் புத்தகம் இல்லை,
” இந்தடா… என் புக்க பாரு” என்று பகிர்ந்து கொண்டேன்.
கிளாஸ் முடிந்ததும், மத்த பசங்கள் கணேஷை சுத்தி கொண்டார்கள்.
” உன் பெயர் என்னடா” என்றான் ரகு
” கணேஷ்”
” எந்த ஸ்கூல்?”
” ஆர்.வீ” என்றான் கணேஷ்.
” என்ன இந்த பொட்டை பயல உனக்கு முன்னாடியே தெரியுமா?” என்று சிரித்தான் ரகு
” என்ன?” கணேஷ்க்கு ஒன்றும் புரியவில்லை
” இவன்தான்டா…குமாரி… அவன் பக்கத்துல உக்காந்திருக்க……..நீயும் பொட்டையா?” சீண்டினான் ரகு.
கணேஷ்க்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது.
” யார பாத்து பொட்டைனு கூப்பிடற..” என்று எழுந்தவன் ரகுவின் கன்னத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டான். ரகு வலி தாங்காமல் “ஆ ஆ” என்று அலறினான். பின்பு சுதாரித்து கணேஷின் கைகளை பிடித்து முறுக்கினான். இரண்டு பேரும் கட்டிபிரண்டு உருள ஆரம்பித்தார்கள். பசங்கள் எல்லோரும் அவர்கள் இருவரையும் சுற்றி வட்டமடித்து, கத்த ஆரம்பித்தார்கள்.”அடிடா”, “நல்லா குத்து”, “விடாதே” என்று ஒரே கூச்சல்.நான் பயந்து,செய்வது அறியாமல் திகைத்து போயிருந்தேன்
அதற்குள் அடுத்த பீரியட் மிஸ் வந்துவிட, இரண்டு பேரும் விலகினார்கள், ஒரே அமைதி. மிஸ் இரண்டு பேர் கன்னத்திலும் “பளார்”, “பளார்” என்று அறை விட்டு, வெளியே நிறுத்தினாள்.அன்னிக்கு நாள் முழுவதும் வெளியே நிற்கவேண்டும் என்று தண்டனை. கணேஷ் எரிச்சலில் முறைத்து கொண்டிருந்தான். எனக்கு அவனை பார்க்க பாவமாய் இருந்தது. திமிரெடுத்த ரகு! அவன் சைக்கிள் காத்தை பிடுங்கி விட வேண்டும் என்று கறுவினேன்.
———-
சாயங்காலம் ஸ்கூல் முடிய, கணேஷை காணவில்லை. சீக்கிரம் கிளம்பியிருப்பான். நான் வீட்டுக்கு போய் உடை மாற்றி , அம்மாவிடம் மிட்டாய் வாங்க காசு கேட்டேன்.
” எதுக்குடா எட்டணா? ரெண்டு மிட்டாய்யா? பல்லு கெட்டுபோகும்”
” அம்மா.. கணேஷ்க்குமா , குடுமா” என்று கெஞ்சினேன்.
” சரி இந்தா”
வேகமாய் தாதா கடைக்கு போய் இரண்டு தேன் மிட்டாய் வாங்கிகொண்டு, கணேஷின் வீட்டிற்கு விரைந்தேன்.
” கணேஷ்” என்று கத்திவிட்டு, அவன் சைக்கிளில் ஏறி அமர்ந்தேன்.
இரண்டு நிமிடத்தில் அவன் வெளியே வந்தான்.
” இந்தாடா மிட்டாய்” என்று இளித்துக்கொண்டே அவனிடம் நீட்டினேன்.
” என் சைக்கிள விட்டு இறங்குடா” என்றான் கணேஷ் கோபமாய்.
” டேய்.. ஏன்டா?” ஒன்னும் புரியவில்லை எனக்கு.
” பொட்டை பையனோட எல்லாம் எனக்கு பிரெண்ட்ஷிப் வேண்டாம்.. இறங்கு”
தூக்கிவாரி போட்டது எனக்கு.
” டேய்.. கணேஷு.. பசங்க சும்மா கிண்டல் பண்றாங்கடா.. ” என்று குரலை தாழ்த்தி கெஞ்சினேன்.
” இறங்குடான… ஒம்போது” என்றவன் என்னை பிடித்து கீழே தள்ளினான். நான் நிலைகுலைந்து விழ, மிட்டாய் இரண்டும் மண்ணில் சிதறி ஓடியது
” அம்மா! ” கத்தினேன்.
” போடா… இனிமே இங்க வராத” என்று ஒரு உதைவிட்டான்.
” அம்மா…” நான் வலி பொறுக்காமல் கத்தினேன், அழுகை அழுகையாய் வந்தது.
அவன் சைக்கிளை சரி செய்துவிட்டு உள்ளே போனான். நான் கீழே விழுந்து கிடந்தேன். கைமுட்டி சிராய்த்து, ரத்தம் கசிந்தது. எழுந்துகொள்ள முடியவில்லை…எழுந்துகொள்ள மனம் வரவில்லை. வலி…. அப்படி ஒரு வலி…..என் மனதில்!
———
ஓர் புதர் மூடிய நடுநிசியில்
எல்லாம் முடிந்துபோயிற்று
நிணம் தின்னிப்பேய்கள்
வாய்முழுதும் குருதிமணம்
பற்களின் ஈறுகட்குள் மனிதச்சதைத் துண்டுகள்
முகம் முழுதும் சிரிப்பைப் பூத்தபடி
அரக்கர் குழுவொன்று எரிதணல் மூட்டியது
எம் கூடு நாசமாய்ப்போனது
வாய்க்கால் நிரம்பி குருதி வழிந்தோடியது
வயல் வரம்பெல்லாம் நரவாடை நீவியது
குழந்தைகள் குஞ்சுகள் பிஞ்சுகள் எல்லாம்
குத்திக் குதறி பிச்செறிந்தாயிற்று
வாழவழியின்றி வரலாற்று இனமொன்று
வரலாறின்றி அழியுது
——–
இனி என்றுகாண்பேன் என் தெய்வீக தேசத்தை
யாரிடம் கேட்பது
வாழ்வின் சுவடுகளில்லை
ஒரு சமூகத்தின் பிறப்பை மூழ்கடித்த
பிரளயம் அரங்கேறி முடிந்து
மௌனமும் கதறலுமே எதிரொலியானது
உயிர் மட்டும் துடித்து எரிகிறது
மயான தேசத்தின் துர்நாற்றம் தீர
இன்னும் எத்தனை ஆண்டுகள் கரையும்.
கேள்விகளைக் கைப்பிடித்தபடி நகர்ந்துகொண்டிருக்கிறேன்
நுகங்களால் நிலம் தோண்டிச் சுவாசித்தேன்
ஏமாற்றங்களும் சந்தேகங்களும் கதறிக்கொண்டிருந்தன
எம்மை நாமே புண்ணாக்குவதைத் தவிர யாதறியோம்
——–
காகிதத்தில் இறுகிப்போன பதிவுகளை உள்வாங்கியபடி
காலம் விரைந்துகொண்டிருக்கிறது
இரவும் பகலும் பூமியின் மீது கொட்டிக்கிடக்கிறது
அதன் மேடு பள்ளங்கள் பனியால் நிரம்பி சமதரையானது
இப்பனியின் கீழ் புதையுண்ட ஆன்மாவை எடுத்து முகர்ந்தேன்
கண்களின் ஓரங்களில் இன்னும் ஓர் கனவு மிச்சமிருந்தது
உங்கள் கடைசிப் புன்னகையைத் தாருங்கள்
நாம் அழுகையைத் தொலைக்கவேண்டும்
எல்லோரும் ஒரே மாதிரியான எரிச்சல் கலந்த சினத்தோடு அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டு போனார்கள். யாரோ ஒருத்தன், முகத்தில் காறித்துப்பாத குறையாய், வேண்டுமென்றே வாசலில் காறித்துப்பிவிட்டுச் சென்றான். தடியை ஊன்றியபடி இன்றைக்கோ நாளைக்கோ என்றிருந்த வயோதிபமாது ஒருத்தி, அந்த வீட்டைக் கடந்து செல்லும்போது, நின்று ஒருபிடி மண் எடுத்துத்திட்டித் தீர்த்துவிட்டுத் தன்பாட்டிற்குப் போனாள்.
கொஞ்ச நாட்களாக அவனைச் சுற்றி என்னென்னவோ எல்லாம் நடக்கின்றன. வானத்தில் ஹாயாய்ப் பறந்து கொண்டிருந்தவனை திடீரென சிறகொடித்து, சாக்கடைக்குள் இழுத்து விழுத்தி விட்டது போன்ற உணர்வில் அவன் மனசு கூனிக்குறிகிப் போனது. அவனை மட்டுமல்ல அவனைச் சார்ந்த எல்லாவற்றையுமே இவர்கள் வெறுப்போடு பார்ப்பது போன்றதொரு பிரமையும் அவனை வாட்டிவதக்கியது.
அவன் சற்றும் எதிர்பார்க்காததொன்று, இப்படி நடக்கும் என்று அவன் ஒருபோதும் நினைத்ததில்லை. அந்த நிலைக்குள் இருந்து கொஞ்சமேனும் அவனால் விடுபட்டு வெளியே வரவும் முடியவில்லை. வெளியேவர முயற்சி செய்தாலும் அவனது மனச்சாட்சி நடந்ததை குத்திக் காட்டிக் கொண்டே இருந்தது. தவறு நடந்ததென்னவோ உண்மைதான். பேசாமல் மன்னிப்பாவது கேட்டிருக்கலாம். மனைவியின் பாராமுகத்தால், தான் செய்த தவறுக்கு பொதுமன்னிப்பாவது கேட்கத்தான் நினைத்தான், ஆனாலும் அவன் நினைத்ததுபோல அது அவ்வளவு சுலபமாகக் கைகூடவில்லை. அதிகாரபீடத்தில் இருந்தவர்கள் அவனது நினைப்பிற்கு சற்றும் இடம் கொடுக்கவில்லை. ‘ஊதியம் பெற்றுக் கொண்டுதானே இதைச் செய்தாய், உன்பணி இத்துடன் முடிந்துவிட்டது, கவலையைவிடு! இனி நடக்க வேண்டியவற்றை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்று அதிகாரபீடத்தில் இருந்தவர்கள் கைவிரித்து விட்டார்கள்.
அன்று முழுவதும் நடந்த பாராட்டிலே குளிர்ந்துபோய், இரவு வீட்டிற்கு வந்தவனை மனைவிதான் முதலில் எதிர்கொண்டாள். ஏதோ தீண்டத்தகாத பொருளைப் பார்த்ததுபோல தீராதவெறுப்போடு அவள், அவனைப் பார்த்தாள். வெற்றிக் களிப்பு உபசாரத்தில் கொஞ்சமாய் மேல்நாட்டு மதுவை அவன் அருந்தியிருந்தாலும், கதவைத் திறந்தபோது அந்த வாடை அவள் முகத்தில் குப்பென்று அடித்திருக்கலாம் என்பதை அவளது முகச்சுழிப்பில் இருந்து அவன் நிச்சயப்படுத்திக் கொண்டான். அவளது அலட்சியத்திற்கு அது காரணமில்லை என்பதும் அவனுக்குத் தெரியும். இப்படி எத்தனை நாட்கள் இரவு நேரம் கடந்து மதுபோதையில், வண்டியைவிட்டு இறங்கித் தள்ளாடிக் கொண்டு வீட்டிற்கு வந்திருக்கிறான். அப்பொழுதெல்லாம் அவள் இப்படி முகத்தைத் திருப்பியதில்லை. இன்று மட்டுமென்ன? அவனது உயர் அதிகாரிகள், சகபாடிகள் எல்லோரும் அவன் பெரிய சாதனை செய்து விட்டதாக புகழாரம் சூட்டி வெற்றிக் களிப்பில் மிதந்து கொண்டிருக்க, இவள் மட்டும் ஏன் முகத்தைச் சுழிக்கிறாள்? ஏன் என்னை அவமானப் படுத்துகிறாள்?
மனைவி மட்டும்தான் இப்படி அலட்சியப் படுத்தியிருந்தால் அதை ஓரளவாவது தாங்கியிருப்பான், ஆனால் அதற்கும் மேலாய் அவனது பதினாறு வயது மகளுமல்லவா அவனை அலட்சியம் செய்துவிட்டாள்.
ஒரே மகள் என்பதால் அவள் மீது அவன் அதிக பாசம் வைத்திருந்தான். அதனால்தான் மகளின் அந்த அலட்சியத்தை அவனால் தாங்க முடியவில்லை!
‘என்னம்மா.., என்னோட என்ன கோபம்..?’ என்றபடி, ஒரு தந்தையின் பாசத்தோடு அவளை அணைக்கச் சென்றான்.
‘கிட்டவராதே கொலைக்காரப்பாவி..!’ என்று அவள் வீறிட்டுக் கத்திக் குளறிப் பின்வாங்கியபோது, அந்த அதிர்ச்சியில் அவன் செய்வதறியாது ஒருகணம் அப்படியே அதிர்ந்துபோய் நின்றான்.
‘என்னைப் போலதானே அம்மா, என்னுடைய வயசுதானேம்மா, எப்படி இந்த மனுஷனாலே ஒட்டுமொத்தமாய் அந்தப் பிஞ்சுகளை ஈவிரக்கம் இல்லாமல் கொலை செய்யமுடிஞ்சுது..?’ தாயிடம் சொல்லி மகள் கதறி அழுதபோதுதான் தனது செய்கையின் மறுபக்கம், அதனால் ஏற்பட்ட பாதிப்பு என்னவென்று அவனுக்குப் புரியலாயிற்று.
மகள் கொடுத்த அதிரடியில் அவனுடைய மதுபோதை சற்றுத் தெளிந்து போயிருந்தது. என்னுடைய மகளா இப்படிச் சொன்னாள்? மகளிடம் ஒரு சோகத்தழும்பை அந்தச் சம்பவம் ஏற்படுத்தியிருக்கும் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. சாப்பிடாமல் மதுபோதையில் அப்படியே கட்டிலில் விழுந்தான்.
தூக்கம் வர மறுத்தது. நீண்ட நேரத்தின்பின் கண்கள் செருக அயர்ந்து கொண்டு போனவன் யாரோ உலுப்பி விட்டதுபோல சத்தம் போட்டுக் கத்திக் கொண்டே திடுக்கிட்டு எழுந்தான்.
‘யூ ரூ டாட்..? நீயுமாப்பா..?’ மகள் அருகே வந்து கேட்டாளா, அல்லது மகளைப்போன்ற தெளிவில்லாத பலபிஞ்சு முகங்கள் ஒவ்வொன்றாய் வந்து கேட்டனவா, அல்லது அவன் கண்டது கனவா என்னவென்று புரியாமல் குழம்பிப்போய் படுக்கையில் எழுந்திருந்து தவித்தான். நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. சுரம் வந்து சுடுவதுபோல உடம்பெல்லாம் கொதித்து வியர்த்துக் கொட்டி, உடம்பு தொப்பமாய் நனைந்து போயிருந்தது.
இரவில் சின்னச் சத்தம் கேட்டாலே துடித்துப் பதைத்து எழுந்திருக்கும் மனைவிகூட ‘எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன’ என்பதுபோல, அவன் அவஸ்தைப்படுவதைத் தெரிந்து கொண்டும் அப்படியே அசையாமல் கிடந்தாள்.
நிம்மதி இல்லாத இந்த நிலையில், வீடு வாசல் காசு பணம் என்று கொட்டிக் கிடந்தென்ன? அந்த சம்பவத்தின்பின் மற்றவர்களிடம் இருந்து தான் தனிமைப் படுத்தப்பட்டு விட்டதை அவன் உணர்ந்தான். அன்று வெறுப்போடு வீட்டைவிட்டு போன அவனது மகள் திரும்பி வீட்டிற்கு வரவேயில்லை. ஊர்பேர் தெரியாத அவனை, அந்தச் சம்பவத்தின்பின் சர்வதேசமுமே அவனைத் தீண்டத்தகாதவன் போல ஒதுக்கி விட்டிருப்பதை அவன் உணர்ந்தான். கொஞ்சம் கொஞ்சமாக அந்த நினைவுகள் அவனது உயிரைக் குடித்துக் கொண்டிருந்தன. ஒன்றா இரண்டா..? எத்தனை பெண் குழந்தைகள்? அவை என்ன பாவம் செய்தன..?
மனச்சாட்சி குத்திக் கிளறிக் கொண்டே இருந்தது. பயங்கரக் கனவு கண்டு துடித்துப் பதைத்து எழும்புவதும், தனிமையில் தவிப்பதும், தூங்காத இரவுகளும் அவனுக்கு ஒரு சாபக்கேடாய் போயின.
மனசு இனம்புரியாமல் ஏனோ சஞ்சலப்பட்டது. எதிலும் நாட்டமில்லாமல், வாழ்க்கையில் பிடிப்பில்லாமல், இப்போதெல்லாம் வெறித்த பார்வை ஒன்றுதான் அவனிடம் மிஞ்சி நின்றது.
‘இவன் ஒரு மனநோயாளி’ என்றனர் சிலர்.
‘யார் பெற்றாலும் பிள்ளைகள்தானே! குழந்தைகள் என்று தெரிந்து கொண்டுதானே இந்த ஈனச்செயலைச்செய்தான். தப்பு செய்துவிட்டு தப்பிக்கொள்ளத்தான் இப்படிநடிக்கிறான். இவனைமட்டுமல்ல, அதைச் சரியென்று நியாயப்படுத்த நினைக்கும் மனிதநேயம் இல்லாத இவனைப் போன்றவர்களையும் மன்னிக்கவேகூடாது’ என்று தங்கள் விசனத்தை வெளிப்படுத்தினர் வேறு சிலர்.
‘மனிதநேயம் என்பதே அவனிடம் இல்லையா, புத்தரின் பெயரைச் சொல்லிக் கொண்டு ஒரு கோழைபோல, அதுவும் பச்சிளம் குழந்தைகளைக் குண்டுவீசிக் கொன்று குவித்தானே, எப்படி மனசு வந்தது? இவன் மிருகத்தைவிடக் கேவலமானவன்’ என்றார்கள் சம்பவத்தை நேரில் சென்று பார்த்தவர்கள்.
‘யப்பானில் குரோஷிமா, நாகசாக்கியில் குண்டு போட்டு காட்டுமிராண்டித் தனமாக அப்பாவி மக்களைக் கொன்று குவித்தவனுக்கும,; இவனுக்கும் என்ன வித்தியாசம்? குழந்தைகள், பெண்கள் என்று முதலைக் கண்ணீர் வடிக்கும் ஓரே பட்டறையில் இவனும் பயிற்சி பெற்றிருப்பானோ? இப்படித்தான் அவனும் உலகத்தால் தனிமைப் படுத்தப்பட்டு, அந்த வலியின் வேதனையில் மனநோயாளியாகி ஒருநாள் இறந்து போய்விட்டான்.’ சரித்திரம் தெரிந்தவர்கள் பேசிக்கொண்டார்கள்.
போதாக்குறைக்கு இவர்களோடு இதுவரைகாலமும் சினேகமாய் பழகிய அயல்வீட்டுக்காரர்கூட எதுவும் பேசாமலே, சந்தேகப் பார்வையோடு அவசரமாக தாங்கள் குடியிருந்த வீட்டை இரவோடீரவாக காலி செய்துவிட்டுப் போனார்கள்..
இவனுக்குப் பயம் பிடித்துக் கொண்டது.
நிம்மதிதேடி புத்தவிஹாரைக்குச் சென்றான். ஜீவராசிகளிடம் அன்பு காட்டிய புத்தபிரான் ஆட்டுக் குட்டி ஒன்றை கையிலே தூக்கி அணைத்தபடி கருணையே உருவமாய் இருப்பதை அப்போதுதான் அவனது கண்ணில் பட்டதுபோலவும், முதன்முதலாய்ப் பார்ப்பது போலவும் பார்த்தான். கூப்பிய அவனது கரங்களில் இருந்து இரத்தம் வழிவது போன்ற பிரேமை அவனுக்கு ஏற்படவே, அவனை அறியாமலே அவனது கைகள் நடுங்கத் தொடங்கின.
‘உண்மையிலே இவர்கள் யாரை வழிபடுகிறார்களோ, அந்தப் புத்தரும் பிறப்பாலே இந்துதான், இதைத்தெரிந்து கொண்டும் எப்படித்தான் இந்தப் படுகொலையைச் செய்ய அந்த பாவிக்கு மனம்வந்ததோ?’ இவன்தான் இதற்கெல்லாம் காரணகர்த்தா என்று தெரியாமல் உண்மையான பௌத்தர்கள் சிலர், இவனிடமே நடந்த சம்பவத்தைச் சொல்லி அந்தச் சிறார்களுக்காகப் பச்சாதாபப்பட்டார்கள்.
சென்ற இடமெல்லாம் வசை கேட்கவேண்டியதாயிற்று. வீட்டிலும் நிம்மதி இல்லாமற்போயிற்று. ஒரு புழுவைப் பார்ப்பது போன்ற மனைவியின் மௌனப்பார்வை அவனைக் குத்திக் கிழிக்கலாயிற்று. பிரிந்துபோன மகளை நினைத்தாளோ அல்லது அநியாயமாய் குண்டுவீச்சில் இறந்துபோன குழந்தைகளை நினைத்தாளோ, மனம் பொறுக்க முடியாமல், ஒருநாள் மௌனத்தை உடைத்துக் கொண்டு ஓவென்று கத்தியழுதபடி அவள் மனதில் உள்ளதை சினத்தோடு கொட்டித் தீர்த்தாள்.
‘பாவி எப்படியடா உனக்கு மனசுவந்தது..? அந்தப் பச்சிளம் பாலகர்களைக் குண்டுவீசிக் கதறக்கதறக் கொன்று குவிச்சிட்டியேடா! நீ நல்லாயிருப்பியா..?’
ஆற்றாமையால் துடித்தவள், சாபம் போடுவதுபோல அவனைப் பார்த்து உறுதியாகச் சொன்னாள்.
‘உன்னுடைய மரணம் அவங்களுக்கு ஒரு தூசு! ஆனால் இப்போ நீ மரணிக்கக்கூடாது. ஏத்தனை உயிர்களைக் கொன்று குவித்தாயோ அத்தனை உயிரையும் இழந்தவர்களின், ஊனமுற்றவர்களின் வலியையும், வேதனையையும் ஒட்டுமொத்தமாய் நீ உயிரோடு இருந்து அனுபவிச்சுச் சாகணும்! அப்பதான் எங்க குடும்பத்திற்கு ஏற்பட்ட மறக்கமுடியாத இந்த பெரியவடு நீங்கும்!’
மற்றவர்களின் அவலங்களைத் தொலைக்காட்சியில் பார்த்து ரசிப்பவர்களும், மௌனம் சாதிப்பவர்களும், ஆரம்பத்திலேயே இப்படிப்பட்ட அநியாயங்களை, அமைதிப்போராட்டம் மூலம் தடுத்து நிறுத்தாவிட்டால், தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும்கூட இப்படி ஒருநாள் நடக்கலாம் என்பதை ஏனோ உணர்வதில்லை.
வலி என்பது எல்லா ஜீவன்களுக்கும் ஒன்றுதான்! ஆனால் அதை அனுபவிப்பவர்களுக்குத்தான் அந்த வலியின் உண்மையான வேதனை புரியும்!
அனுபவித்தால் மட்டுமே அறிய முடியும் மழை பெய்த மண்ணின் வாசனை நடுநிசி நிசப்தத்தால் வரும் பயம் அதிகாலை காற்று தறும் ஆனந்தம் மறைந்து கிடக்கும் மனத்தில் மலையாய் உயரும் வலி!!