நினைவுகளின் தடத்தில் – 14

வெங்கட் சாமிநாதன்


வீட்டு வாசலில் மாமாவுடன் பேசிக்கொண்டிருந்தார் அம்பி வாத்தியார். தற்செயலாக நான் அங்கு வந்து சேர்ந்தது, என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே, “மாப்பிள்ளை டவுனுக்குப் போய் படிக்கப் போறாராக்கும்! இனிமேல் அவர் டவுன் வாசிதான்.” என்றார். அது சும்மா தமாஷாகப் பேசுவதாகவும் இருக்கும். கொஞ்சம் கிண்டலும் கலந்திருக்கலாம். நிச்சயமில்லை. ஆனால் எனக்கு அது சந்தோஷமான சமாச்சாரம் தான். நான் மதுரைக்குப் போய் படிக்கப் போகிறேன் என்பது எல்லோரும் பேசும் ஒரு விஷயமாகியிருந்தது, எனக்குச் சந்தோஷம் தான். அது என்னை முக்கியப்படுத்தி இல்லை. சின்ன மாமா மதுரைக்குப் போய் படிப்பது என்பது நிச்சயமானதும், எனக்கும் நிலக்கோட்டையில் எட்டாம் வகுப்புப் படிப்பு முடிந்ததும் மேலே படிக்க வெளியே தான் போக வேண்டும் என்ற நிலையில், சின்ன மாமாவோடு ஒட்டிக்கொண்டு விட்டேன். ஆனால் எப்படியானால் என்ன, நான் மதுரையில் படிக்கப் போகிறேன். பெரிய நகரம் அது. நிறைய சுத்தலாம். வருஷம் பூராவும் சுத்திக்கொண்டிருக்கலாம். அப்படியும் மதுரை அலுத்துவிடாது, அது பார்த்துத் தீர்ந்துவிடாது, என்ற எதிர்பார்ப்பும் பரபரப்பும் என்னில் பரவியிருந்தது. அத்தோடு, இன்னும் ஒரு பெரிய விஷயம். மதுரையில் பாட்டியும் சின்ன மாமாவும் தான் இருப்பார்கள். மாமா இல்லை. அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் நிர்ப்பந்தமும் இல்லை. நான் என் இஷ்டம் போல இருக்கலாம். ஒரு சுதந்திர பிறவியாக. எல்லாவற்றையும் விட இப்போது முதலில் அனுபவிக்க இருப்பது 30 மைல் பஸ் பிரயாணம். அதை நினைக்க நினைக்க மனத்தில் ஒரே பூரிப்பு. ஆனால் 2 மணி நேரம் தான் நீடிக்கும் அந்த சுகம். அது பற்றி அப்போது கவலை இல்லை.

வெகு அரிதாகவே கிடைத்தன எனக்குப் பிரயாண சந்தோஷங்கள். இந்த 13 வருஷங்களில் பக்கத்தில் இருக்கும் வத்தலக்குண்டுக்கு ஒரே ஒரு முறை தான் போக வாய்த்தது. அதுவும் பரிட்சை எழுத. சின்ன மாமாவுக்கு எவ்வளவு அதிர்ஷ்டம்!. வத்தலக்குண்டுக்கு கவர்ன்மெண்ட் போர்டு ஹைஸ்கூலில் படிக்க சேர்ந்த பிறகு மூன்று வருஷங்கள் தினம் காலையில் போனால் சாயந்திரம் வந்தால் போதும் அவ்வளவு நேரமும் வத்தலக்குண்டில் கழிக்கலாம் என்றால் எவ்வளவு அதிர்ஷ்டம் சின்ன மாமாவுக்கு மாத்திரம்! பக்கத்தில் இருக்கும் அணைப்பட்டி கூட பார்த்ததில்லை. இவ்வளவுக்கும் மாமா சுவாமிநாத ஸ்வாமி பக்தர், அவர் குல தெய்வம். பின் ஏன் ஒரு தடவை கூட ஏன் மாமா அங்கு போனதில்லை? அவர் போயிருந்தால் என்னையும் கட்டாயம் அழைத்துச் சென்றிருப்பார். ஆனால் இப்போது அதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. இப்போது ஒரு வருஷம் பூராவும் மதுரையில் இருக்கப் போகிறேன். அதுவும் சுதந்திரமாக.

இதற்கு முன்னால் ஒரு நீண்ட பிரயாணம், அதுவும் ரயிலில் போகும் அதிர்ஷ்டம் எனக்கு இருந்திருந்தது. இரண்டு வருஷம் இருக்குமா? அல்லது மூன்று வருஷங்கள் ஆயிடுத்தா? எனக்கு பூணூல் போட்டாகணும். வயசாயிண்டிருக்கிறது. அப்பாவிடமிருந்து லெட்டர் வந்தது. எல்லோரும் உடையாளூர் போகணும். உடையாளூரில் அப்பாவும் அம்மாவும் இருக்கிறார்களே. அந்த பிரயாணம் தொடங்கிய பிறகு தான் எவ்வளவு புது விஷயங்கள் அதில் அனுபவிக்க இருந்தன என்று தெரிந்தது. ஒரு பகல் பூராவும் ரயிலில் பிரயாணம் செய்யலாம். அவ்வளவு தூரம் உடையாளூர்.முதலில் ஐந்து மைல் தூரத்தில் இருக்கும் அம்மையநாயக்கனூருக்குப் போகவேண்டும், அங்கு போய்த்தான் ரயில் ஏறவேண்டும். அம்மையநாயக்கனூர் ரயில் ஸ்டேஷனுக்குப் பேர் கொடைரோடு. மதுரையிலிருந்தோ, அல்லது வடக்கே சென்னையிலிருந்தோ கொடைக்கானல் போகிறவர்கள், கொடைரோடு ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்து ரோடு வழியாக கொடைக்கானல் போகவேண்டும். அந்தக் காலத்தில், பிரிட்டீஷார் ஆட்சி நடந்த காலத்தில், சென்னை கவர்னர், கோடை காலத்தில் ஊட்டிக்கோ அல்லது கொடைக்கானலுக்கோ தான் போய்த் தங்குவார்களாம்.

கொடை ரோடிலிருந்து செங்கோட்டா பாஸஞ்சர் வண்டியை பிடிக்க வேண்டும். அது காலை 5.30 மணிக்கோ என்னவோ வரும். அது ஒரு வண்டிதான் கும்பகோணம் போகும். அந்த வண்டியைப் பிடிக்க வசதியாக நிலக்கொட்டையிலிருந்து பஸ் ஏதும் கிடையாது. குதிரை வண்டியில் தான் போகவேண்டும். காலை நாலு அல்லது நாலரை மணிக்கு குதிரை வண்டி எங்கிருந்து கிடைக்கும்.? மாமா முதல் நாள் சாயந்திரம் போய் நாடார் ஹைஸ்கூலுக்கு 10-15 வீடு தள்ளி இருக்கும் குதிரை வண்டிக்காரருக்குச் சொல்லி வைக்கவேண்டும். காலையில் 4 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிடவேண்டும், ரயிலைப் பிடிக்கவேண்டும் என்று. வீட்டில் 3 மணிக்கே எழுந்து எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படும். ரயிலில் சாப்பிடுவதற்கு இட்லி, புளியஞ்சாதம், தயிர் சாதம் எல்லாம் தயாராகும். வீடு ஒரே ரகளையும், கோலாகலமுமாக இருக்கும்.

1942-லோ 1943-லோ சரியாக ஞாபகமில்லை. உபநயனத்திற்காக உடையாளூர் போக ரயிலில் போனது. அது தான் எனக்கு ஞாபகமிருக்கும் முதல் ரயில் பிரயாணம். முதல் நாளிலிருந்து வீடு அல்லோகப் பட்டுக்கொண்டிருக்கும். அதைச் செய்யக்கூடாதா, இதைச் செய்யக்கூடாதா, மக்கு மாதிரி இப்படி நின்னுண்டேயிருக்கியே, என்ற திட்டுக்கள் மாமாவிடமிருந்தும், பாட்டியிடமிருந்தும் வந்துகொண்டேயிருக்கும். அதையெல்லாம் தாண்டி காலையில் நாலு நாலரைமணிக்கு குதிரை வண்டியில் உட்கார்ந்துவிட்டால் முதல் நாள் கேட்ட திட்டுக்களெல்லாம் மறந்து விடும். சில்லென்று இருக்கும் அந்த முன் காலை இருட்டில் குதிரை வண்டி சவாரி சந்தோஷமாக இருக்கும். அது மட்டும் என்ன? பின் தொடர்வது எல்லாமே சுகமான விஷயங்கள் தான். முதல் தடவையாக சிறு பையனாக, ஒரு பகல் முழுதும் ரயில் பிரயாணம் செய்வது என்பது ஸ்வர்க்க அனுபவம் தான். அப்போதெல்லாம் முன் பதிவு என்பதெல்லாம் இருந்ததில்லை. வெகு வருஷங்களுக்கு இருந்ததில்லை. டிக்கட் வாங்கிக் கொண்டு கிடைத்த காலி இடத்தில் உட்கார்ந்து கொள்ள வேண்டியதுதான்.

அந்த புதிய அனுவத்தை நான் வெகுவாக ரசித்தேன். ஒவ்வொரு சின்ன நிலயத்திலும் ரயில் நின்றது. கொடை ரோடைத் தாண்டியதும், திண்டுக்கல் வரை, பின் அதைத் தாண்டியும் கொஞ்ச தூரம் வரை, ரயில் பாதையின் இருபக்கங்களிலும் வெகு தூரத்திற்கு ஜவந்தி மலர்ந்திருக்கும். அல்லது திரா¨க்ஷ பயிர் செய்திருப்பார்கள். பந்தல் பந்தலாக படர்ந்திருக்கும் அந்த வெளியில் திரா¨க்ஷப் பழ்ங்கள் கொத்துக் கொத்தாகத் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். இப்போது என்ன செய்கிறார்களோ தெரியவில்லை. அதன் பிறகு அந்த வழியில் பிரயாணம் செய்ததெல்லாம் ஓரிருமுறை இரவு நேரங்களில் ரயில் அந்தப் பகுதியைக் கடந்து விடும். இம்மாதிரி கண்ணுக்கெட்டும் தூரம் வரை ஜவந்திப் பூக்களாக பார்த்தது முதல் அனுபவம்.மிக சந்தோஷம் தந்த அனுபவம். உலகம் இப்படியெல்லாம் கூட அழகாக இருக்கிறதே, எல்லாமே நிலக்கோட்டைக்கு அப்பால் தானா? என்று நினைத்தேன். இம்மாதிரியான மலர்ப்பரப்பை ஹாலந்து தேசத்தில், செய்திப் படங்களிலும், இந்நாட்களில் நம் சினிமாக் காட்சிகளில் தான் டூயெட் பாட ஹாலந்து போவதால் பார்க்கக் கிடைக்கிறது. ஹாலந்தில் காணுவது போன்று அடிவானம் வரை விஸ்தாரமான மலர்ப் பரப்பல்ல, திண்டுக்கல்லைச் சுற்றிக் காணப்பட்டது.

ஒவ்வொரு நிலையத்திலும் நின்று நின்று சென்று கொண்டிருந்தது வேடிக்கையாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. எத்தனைபேர்கள், இறங்குவதுன் ஏறுவதுமாக. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில், அதாவது இரண்டு மூன்று நிலயங்களில் அடுத்தடுத்து நின்றதும், மாமாவிடம் எப்போது ஊருக்குப் போகும் என்றுகேட்டேன். “சாயந்திரமாத்தாண்டா போகும். அதான் சாப்பிடறதுக்கெல்லாம் எடுத்துண்டு வந்திருக்கே” என்றார். நான் இடைப்பட்ட எண்ணற்ற ரயில் நிற்கும் நிலயங்களை எண்ணத் தொடங்கினேன். முப்பத்திஒன்றோ, முப்பத்தி இரண்டோ எண்ணினேன் என்று ஞாபகம். இது அந்த 1942 அல்லது 1943 வருடத்தில் எண்ணிய கணக்கின் நினைவு தான். இன்னமும் இந்த எண்ணிக்கை எனக்கு நினைவில் பதிந்திருக்கிறது. சரிதானா, இவ்வளவு ரயில் நிலயங்கள் இருக்கின்றனவா என்று சரிபார்க்க ரயில்வே கால அட்டவணைப் புத்தகத்தைப் பார்த்தேன். அதில் வேக வண்டிகள் நிற்கும் நிலயங்கள் மாத்திரமே குறிப்பிடப்பட்டிருந்தன. ஆக, இந்த எண்ணிக்கை சரிதானா என்பது இப்போது தெரியாது. அந்த வயதில், முதல் அனுபவத்தில் எண்ணத் தோன்றிற்று. அது வேடிக்கையாகவும் இருந்தது.

பெரிய நிலயங்களில், அதாவது ரயில் சந்திப்புகளில் வண்டி அதிக நேரம் நின்றது. என் ஞாபகத்தில் திருச்சி வந்ததும் மாமா எங்களையெல்லாம் சாப்பிடச் சொல்லிவிட்டு, “இதோ வந்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டு ரயிலை விட்டு இறங்கி வெளியே போனார். வண்டி கிளம்புவதற்குள் திரும்பி வந்துவிட்டார். வந்த பிறகு தான் அவர் சாப்பிட ஆரம்பித்தார். பின்னர் நான் அவர் இறங்கிப் போனது எதற்கு என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன். அக்காலங்களில் நீண்ட தூர ரயில் பிரயாணங்களுக்கு கட்டணம் அதிகம் என்றும் அதனால் தான் கொடைரோடிலிருந்து திருச்சிக்கு ஒரு முறையும், பின்னர் திருச்சியில் இறங்கி கும்பகோணத்திற்கு மறுபடியும் எல்லோருக்கும் டிக்கட் எடுத்து வந்தார் என்றும் தெரிந்தது. எனக்கு அவர் திருச்சியில் இறங்கியது தான் தெரியும். இடையில் திண்டுக்கல்லிலும், பின்னர் தஞ்சாவூரிலும் ரயில் நிற்கும் நேரம் அதிகம் என்ற போதிலும், இப்படி அடிக்கடி இறங்கி டிக்கட் எடுப்பது சிரமம் என்றா, இல்லை, இந்த சிரமத்திற்கு ஏற்ற பணம் மிச்சம் அதில் இல்லை என்றா என்பது தெரியாது. இப்போது எங்கும் அந்தமாதிரி சலுகைகள் கிடையாது அப்போது அந்த சலுகை இருந்தது இப்போது நினைத்துப் பார்க்க வேடிக்கையாகத் தான் இருக்கிறது. சலுகைகள் கொஞசம் தலைகீழாகத் தான் தோன்றுகிறது. ஒரு வேளை அந்தக் காலத்தில் ஏழை மக்கள் ரயிலில் நீண்ட தூர பிரயாணங்களை மேற்கொள்வதில்லை என்றோ, அல்லது நீண்ட தூரம் பிரயாணம் செய்பவர்கள் கொஞ்சம் கூட கொடுத்தால் சௌகரியமாக பயணம் செய்யலாம் என்றோ, என்ன தர்க்க நியாயமோ தெரியவில்லை. அப்போது கொடைரோடிலிருந்து கும்பகோணத்திற்கு ஒரு டிக்கட்டுக்காண கட்டணம் ஒரு ரூபாய் பத்தணா தான். இதில் மாமா திருச்சியில் இறங்கி டிக்கட் மறுபடியும் வாங்கி மிச்சம் பிடித்திருக்கக்கூடியது எவ்வளவு அணாக்கள் என்று எனக்குத் தெரியாது. அது சில அணாக்கள் அல்லது ஒரு ரூபாய்க்குக் கிட்டத்தட்ட இருக்கலாம். ஆனால் இங்கு நான் இதைச் சொல்லக் காரணம் ஒன்று, இந்த மாதிரியான வேடிக்கையான சலுகைகள் அன்று இருந்தன. இரண்டு, என் மாமாவின் வருவாயில், இப்படி மிச்சம் பிடிக்கும் சில அணாக்களோ,அல்லது ஒரு ரூபாய் சொச்சமோ, பெரிய கணிசமான தொகையாக இருந்திருக்கிறது என்பதும் தான். இப்படி அணா அணாவாக கணக்கிட்டுச் செலவழிக்கும் நிலையில் இருந்த மாமா தான் என்னை இரண்டு வயதிலிருந்து மதுரையில் 9-வது படிப்பு முடியும் வரை படிப்பித்தார். பின்னர் என் இடத்தை என் அடுத்த தம்பி எடுத்துக் கொண்டான். அவன் எஸ்.எஸ் எல்.ஸி வரை படித்தான். அவன் படித்து தேர்ந்ததும், அவனுக்கு அடுத்த தமபியும் மாமாவிடம் தான் படிக்கச் சேர்ந்தான். அவனுக்கு மதுரையோ வத்தலக்குண்டோ போகத் தேவை இருந்திருக்கவில்லை. அவன் காலத்தில் நிலக்கோட்டையிலேயே ஒரு போர்டு ஹைஸ்கூல் தொடங்கப்பட்டு விட்டது.

வெங்கட் சாமிநாதன்/16.12.07

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்