சன்னமாய் ஒரு குரல்..

அமைதிச்சாரல்



மரணத்தின் வாசம் நிரம்பிய
சிதறிக்கிடக்கும் துளிகளினூடே..
வீதியெங்கும் என் விருட்சங்கள்
இழுத்துச்செல்லப்படும்போதும்
பரபரத்துப்பதறி
பற்றிட நினைக்கும்
என் கைகள் வெட்டப்படும்போதும்
நானெழுப்பும் கூக்குரல்
ஏனோ..
உங்கள் காதுகளை வந்தடைவதில்லை.

கருவறையே கல்லறையாவது
பெண்களுக்கு மட்டுமான
தலைவிதியென்றாலும்,
பெண் விரல்களாலும்
அது எழுதப்படுகிறது,
சில கையறுநிலைகளில்

துளிர்த்துத்தழைக்கும்
குருத்துகளை
வேருடன் நசுக்கியெறிந்துவிட்டு;
மலர்களைத்தேடும் வீணர்களே…
மிஞ்சியிருக்கும் முட்களில்
வாசனையைத்தேடாதீர்..

உணவென்று நம்பி,,
பசிபோக்கிய பால்
சுரந்தது கள்ளியிலிருந்தென்று அறியுமுன்னே,..
உறக்கம் கொண்டுவிட்டோம்
கள்ளித்தாய்மடியிலேயே……..
பெற்றவளின் முகம்கண்ட திருப்தியினூடே
அறுக்கிறதொரு கேள்வி;
என் முகம் அவள் பார்த்த, தருணமென்றொன்று ….இருந்திருக்குமா?????

Series Navigation34 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 34 >>

This entry is part [part not set] of 47 in the series 20110430_Issue

அமைதிச்சாரல்

அமைதிச்சாரல்