மழைப்பூக்கள்.. எனது பார்வையில்..

தேனம்மை லெக்ஷ்மணன்


தகிதா பதிப்பகத்தின் பல் நூல்களில் மழையும் மழை சார்ந்தும் உள்ள கார்கால நூல் இது.. மழை நேசனான சரவணன் அழகியல் குறித்தும்., சூழலியல் குறித்தும் கார்மேக..(காளமேகம் போல) மாகப் பொழிந்த ஈரக்கவிதைகளின் தொகுப்பு.. மழையற்ற இக்கோடையிலும் ஈரச்சிதறல்கள் நம்மை கவிதை வழி நனைகின்றன..

நாமும் மழை உண்ணும் சாதகப் பட்சிபோல கவிதை அருந்தி தாகமடங்கத் துவங்குகிறோம்..

ஈசானத்தில் மின்னல் கண்டதுபோல ஒரு மின்னல் வெட்டை அவ்வப்போது கோடிழுத்துச் செல்கின்றன கவிதைகள்.. மென்மையான இடியைப் போலவும் சில.. மேக விறகெரிந்து தெரித்த நெருப்பாய் சில.. புற்களும் மரங்களும் குளுமையில் ஊறியதால் சில.. என அனைத்தும் அருமை.

முகப்புத்தக தோழமைகளுக்கும்., மற்ற பால்ய தோழமைகளுக்கும் தாய்க்கும் தந்தைக்கும் நனைய நனைய நன்றி சொல்லியபடி ஆரம்பிக்கிறது மழைக் கவிதைகள்.. முகில் உதிர்த்த பூக்கள்..

யானையாய்., ஈசலாய்., தொட்டாற்சிணுங்கியாய்..,வீணையாய்., யாழாய்., குடையாய்., விறகாய்., பரல்களாய்., புரவிப்படையாய்., நாவாய்க்கலன்களாய்., இன்னும் எத்தனையோ உருவங்களில் முகிலை உருவகப்படுத்தி இருக்கிறார்..

கண்கள் வழி வானம் விரிவதும்., மேகம் மழைத்தூரிகை பிடிப்பதும்., மந்தாரைகள் பூப்பதும்., பவளமல்லி வாசத்தோடு மழை நடப்பதும்., நினைவலைகள் உயிர்ப்பதும், யாழ் மீட்டுவதும்., மழைச்சித்திரம் தீட்டுவதும்., வெண் துகிலாய் ஓடை ஓடுவதும் ., குழந்தைகளின் சிரிப்பு செடியெங்கும் பூத்துக் கிடப்பதும் கவிதை..

மனிதநேயத்தோடு மழையில் நனைந்த சிறு குருவிக்காக மழையைப் பெய்தது போதும் என கூறுவதும்.,, நட்சத்திரங்கள் மண்ணில் நிலவாகப் பூப்பதும்., அழகாய் பயமுறுத்தும் காவல் தெய்வமும்., மழையைப் போல பயணம் செய்வதும்., கண்சிமிட்டும் நேரத்தில் பூ பூப்பதும்., காற்று நினைவுகளாய் விளையாடுவதும் அழகு..

எனக்குப் பிடித்த கவிதை இது..

”கடந்து செல்கின்றன..
மழை மேகங்கள்..
அதில்
நீரருந்திச் செல்கின்றன..
தூரதேசப்பறவைகள்..”

இன்னொரு கவிதையும் கூட அருமை..

கொன்றை மரத்தினடியில் உனக்காக காத்திருந்தபோது என்ற தலைப்பில்..

“அடை மழையில் நனைந்த கருங்குயிலொன்று நுணாமரத்தின் நுனிக்கிளையில் அமர்ந்து அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தது. கிளிகளும், தாரிச்சிட்டுகளும்., பட்டாம் பூச்சிகளும்., கொக்குகளும்., நாரைகளும்., வானம்பாடிகளும்., சிறகு விரித்துப் பறந்து சென்றன..

மேகத்திரைச்சீலை ஒதுக்கி வாசல் திறந்தது நீல வானம். நீயும் நானும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் மயிற்கொன்றை மர்த்தினடியில், உனக்காக காத்திருந்த போது, இலைகளோடு
அழகழகாய்ப் பூத்திருந்த மழைத்துளிகளை உதிர்த்தவாறு இளங்காற்றில் வானவில்லை வரைந்தபடி வந்து கொண்டிருந்தாய்..”

அப்பா என்ன அழகு இதில்…

மழையில் செல்ல நாம் குடைப்பிடிப்போம் நான். இங்கே முகில்குடை பிடித்து மழை வருகிறது.

மேக விறகு எரிந்து மழைத்தீப்பொறி பறப்பது., மின்னலைக் கோலாய் ஊன்றி மழை வருவது., யானையைப் போல இடி பிளிர்வதும்., வேழம் முறித்த பச்சை மூங்கில் வாசனையாய் மழை கிடப்பதும்., மழையின் ராகம் கேட்டு தவளைகள் அலைவதும்., நிறைகிணறுகள் தம் பெயர் தொலைத்து நிற்பதும் ., அம்மா செய்து தரும் கத்திக் கப்பலும்., பனை இலை பறையடிப்பதும்., ஆடல் வல்லானின் ஊர்த்துவதாண்டவமாய் பெய்யும் ஆலங்கட்டி மழையும்., மிகவும் அதிரடியான இடியைப் போல விழுந்த வரிகள்..

கடற்புரத்தில் பெய்த மழை., காட்டில் பெயத மழை.,தோட்டத்தில் பெய்த மழை மனமெனும் காட்டில் பெய்த காதல் மழை., கண்கள் பூக்கும் கண்ணீர் மழை., தன்னையே மேகமாக்கி தன் வரவையே மழையாக்குதல்., என அனைத்து மழைகளையும் கவிதை ஆக்கி இருக்கிறார் சரவணன்..

காடுகளை அழிக்காதீர்., அது நிகழ்ந்த போது ., அப்பாவின் தோழி வாங்கிக் கொடுத்த ஹார்மோனிக்கா., என் ஜன்னல் தோழி., யாரேனும் மொழி பெயர்த்து வையுங்கள் இவையெல்லாம் மிக அருமையான வித்யாசமான கவிதைகள்..

பெயர் தெரியாத பல பறவைகள்., பூக்கள்., இவற்றின் ரசனைத் தொகுப்பாய் இருக்கிறது..

பூம்பாதிரி மரம்., பாதிரிப்பூ., பிச்சிக் கொடி.,பன்னீர்ப் பூக்கள்., கத்தாளம் பூக்கள்.,மந்தாரைகள்., செம்பருத்தி., அந்தி மந்தாரை., பவளமல்லி., மல்லிகைக் கொடி., சம்பங்கி., செந்தாமரைப்பூ. ஒற்றைப் பனை., நுணா மரம்., மயிற்கொன்றை மரம்., கருவேப்பிலை மரம்., வெண் அல்லி. , நீலத்தாமரை., முல்லைப்பூ., வேம்பு.,புங்கை மரம்., மூங்கில்., ஆம்பல்., குறிஞ்சிப்பூ., பலா., வண்ணப்பூக்கள்., இலைகள்., தாமரை., தாழை மடல்., மஞ்சள் மலர்கள்., பூத்துக் கிடக்கும் குழந்தகளின் சிரிப்பு., சரக்கொன்றை., பாரிஜாதம்., தென்னங்க்கீற்று., இத்தனை மரங்கள்., செடிகள்., கொடிகள் பற்றி எழுத நுண்மையான கண்ணோட்டம் வேண்டும்..

சிறுவயதில் தந்தையோடு செல்லும் இடங்களில் உள்ல இயற்கையை கண்டு களிப்பதும்., பின் கல்கி போன்ற ப்ரம்மாக்களின் நூல்களைப்படித்து உள்வாங்கியதையும் நன்கு வெளிப்படுத்துகிறார்.. நிறைய இடங்களில் சிவகாமி., பூங்குழலி ., வானதி.,குந்தவை போன்ற எழிற் பெண்னரசிகள் இந்தப் பூக்களோடு எனக்கு தரிசனம் தந்தார்கள்..

மைனா., ஊதா தேன் சிட்டு., தங்கத்தும்பி., வண்ணக் கொண்டைக் கொண்டலாத்திகள்., சிறு குருவி., குயில்., தங்கநிறப்பறவைகள்( சூரியன் ஒளி பட்டு)., கருங்குயில்., கிளிகள் ., தாரிச்சிட்டு., பட்டாம் பூச்சி., கொக்குகள்., நாரைகள்., வானம்பாடிகள்., மரகதப் புறா., ஊசித்தட்டான்., பட்டாம் பூச்சி., கருமேக யானைகள்., அணில்கள்., செம்போத்து., தூக்கணாங் குருவிகள்., கெண்டை., கூழைக்கடா., கயல்., வலசைப் பறவைகள்.,, தட்டாரப் பூச்சிகள்., தவளை., எறும்புகள்., தேனீ., நுளம்புகள்., நண்டுகள்., ஆமைகள்., சிப்பிகள்., சங்கு., தேன் வண்டு., கருமந்தி., முள்ளம் பன்றி., காட்டுப் பன்றி., புள்ளினம்., புழு., பூச்சி., முதலைகள்., மீன்கள்.,மயில்., கீரி., பாம்பு., வேங்கைகள்., மான்கள்., நரிகள்., முயல்கள்., கெண்டை மீன்., வண்ணத்துப் பூச்சி., வண்ண மயில்., கரிச்சான் குருவி., என இத்தனை மிருகங்கள் பறவைகளையும் குறிப்பிட நல்ல கவனிப்பும் பரிச்சயமும் இருக்க வேண்டும். இதைல் நுளம்பு ., மற்றும் வலசைப் பறவைகள் என்னைக் கவர்ந்தன.

நுளம்பு என்றால் கொசுப்போல ஒன்று.. வலசைப் பறவைகள் என்றால் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு வந்து செல்லும் பருவ காலப் பறவைகள்.. புலம்பெயர் பறவைகள் எனக் கொள்ளலாம்..

இதெல்லாம் மிக கவனிப்புத் திறன் கொண்டவருக்கே எழுத முடியும்..

இவை அவர் இயற்கையோடும்., பூக்களோடும்., பறவைகளோடும் எவ்வளவு இயைந்து வாழ்ந்திருக்கிறார் என்பதை அறிவிக்கிறது..

பிரிவு பசலையாயும்., காதல் மழை கூடலாகவும் காட்டப் பெறுகிறது..

மிக மென்மையான் உணர்வுகள் கொண்ட., இயல்பான ரசனையான கவிதைகளின் தொகுப்பு இது..படித்தவுடன் ஈரக்காற்றும் மழை வாசமும் உங்களுக்கும் கூட தட்டுப்படலாம்.

”காற்றில் கலந்து விட்டன
எழுத நினைத்தவை..
பூ வாசமோ
மண் வாசமோ
ஏதோ ஒன்று
உனக்குச் சொல்லும்
காற்றில் கலந்ததை..”

மொத்தத்தில் மழை என்னும் சந்தோஷத்தை நம் மனதில் பெய்வித்துக் குளிரச் செய்து., வாசனைப் பூக்களைப் பூக்க வைத்துச் செல்கிறது கவிதை..

Series Navigation32 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 32 >>

This entry is part [part not set] of 39 in the series 20110410_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்

தேனம்மை லெக்ஷ்மணன்