ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -6

சத்யானந்தன்


சுந்தர காண்டம்

“ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? ” என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது என்னும் ஆய்வில் கம்ப ராமாயணம் வால்மீகி ராமாயணம் ராமசரிதமானஸ் என மூன்று பிரதிகளை வாசிக்கிறோம்.

வாழ்வின் இன்னல்களைப் போக்குவதற்காக பக்தியுடன் வாசிக்கப்படும் பகுதி சுந்தர காண்டம். அனுமன் லங்கையை அடைந்து சீதை இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து அவளிடம் கணையாழியைக் கொடுத்து சூளாமணி பெற்று வருவதுடன் ராவணனுக்கு அறிவுறுத்தி அவனது படையினரால் வாலுக்குத் தீ வைக்கப்பட்டு லங்கையில் பெருந்தீ மூட்டித் திரும்பி வரும் வரையிலான கதை இது. ராவணனின் வம்சத்திலுள்ள சிலரையும் சண்டையிட்டு அழித்து விடுகிறான் அனுமன்.

நாம் வாலி வதத்தில் வியப்புக்கு ஆளானது போல சுந்தர காண்டத்திலும் அனுமனின் புரிந்து கொள்ளும் திறன் வாதிடும் திறன் ஆகியவை மனித இனத்தில் உள்ள சிறந்த சொல்லாளர்களுடன் ஒப்பிடத் தக்கவை. சொல்லின் செல்வன் என க் கம்பர் அனுமனைப் புகழ்கிறார்.

ஆரண்ய காண்டத்தில் அறிமுகமான அனுமன் ராமாயணத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக வடிவெடுப்பதும், விபீடணன் என்னும் மற்றுமொரு கதாபாத்திரம் அவனது தன்மை பற்றி நாம் அறிவது சுந்தர காண்டத்தில் தான்.

சமுதாயத்தின் பாரம்பரியாமான அறநெறி தொடர்பான விழுமியங்களைப் பற்றிய விளக்கத்தின் அடிப்படையில் ஒன்றை விட்டு மற்றொன்றை ஏற்பவனாகவோ, அல்லது ஒன்றையே வித்தியாசமாக விளங்கிக் கொள்பவனாகவோ இரு பெரும் ஆளுமைகளைக் காண்கிறோம். ஒருவன் விபீடணன். மற்றொருவன் (மகாபாரதத்தில்) கர்ணன்.

விபீடணன் உடன் பிறந்த சகோதரன் நடத்தை சரியில்லை என்று அவனை விட்டு நீங்கி அவனுடைய எதிரியுடன் இணைந்து அவனை வீழ்த்த உதவி புரிகிறான். ஆனால் கர்ணனோ உடன் பிறவாத சகோதரனுடன் செஞ்சோற்றுக்கடனுக்காகத் இறுதி வரை தோளுக்குத் தோள் நின்று உயிர் நீக்கிறான்.

இருவருமே இந்தியாவின் பண்பாடு போற்றும் மிகப் பெரிய ஆளுமைகள். விபீடணன் சுந்தர காண்டத்தில் அறிமுகமாகும் போதே ராவணனிடம் தூதுவனாக வந்த அனுமனைக் கொல்வது முறையாகாது என வாதிடுகிறான். அதாவது சமுதாயத்தின் ஒரு அங்கமாக, பாரம்பரியமாக சமூகம் கடைப்பிடிக்கும் ஒரு நெறியைத் தூக்கிப்பிடித்துத் தன் சகோதரனுக்கு எடுத்துரைக்கிறான். இது என் தனி மனித விருப்பம் என முன் வைத்து அல்ல.

“பகைப்புலன் நணுகி, உய்த்தார் பகர்ந்தது பகர்ந்து பற்றார்
மிகைப்புலன் அடக்கி மெய்ம்மை விளம்புதல் விரதம் பூண்ட
தகைப்புலக் கருமத்தோரைக் கோறலின் தக்கார் யார்க்கும்
நகைப்புலன் பிறிது ஒன்று உண்டோ? நம் குலம் நவை இன்றாமே?”

பொருள்: பகைவர் நாட்டை அடைந்து தன்னை அனுப்பியவரின் செய்தியைத் தெரிவித்து, கேட்பவரிடம் உண்டாகும் கோபத்தைக் குறைக்கும் படி அவர்களிடம் பேசி, ஒரு விரதமாக உண்மையையே பேசும் நேர்மையான தூதர்களை நீ கொன்றால் அது நகைப்புக்கு இடமாவது தவிர நமது குலத்துக்கே பழி உண்டாகும். (பாடல் 1158 சுந்தர காண்டம், கம்ப ராமாயணம்)

“அஸம்ஸயம் ஷத்ருரயம் ப்ரவிருத்தஹ
க்ருதம் ஹானேநாப்ரியம்பரமேயம்
நதூதவத்யாம் ப்ரவதந்தி ஸந்தோ
தூதஸ்ய த்ருஷ்டா யஹவோ ஹி தண்டாஹா”

பொருள்: இவன் மிகப்பெரிய எதிரி என்பதில் சந்தேகமேயில்லை. ஒப்பிடமுடியாத அளவு கடுமையான குற்றத்தை இவன் செய்திருப்பதும் உண்மையே. இருந்தாலும் சான்றோர் தூதனைக் கொல்வதற்கு ஒப்புவதில்லை. ஆனால் தூதனுக்கு வேறுவிதமான பல தண்டனைகள் உண்டு. (வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம், 52வது சர்க்கம், 14வது பாடல்)

“வைரூய அங்கேஹூ கஷா பிகாதோ
மௌண்டயம் ததா லட்சண சன்னிபாதஹ
ஏதான் ஹி தூதே ப்ரவதந்தி தண்டான்
வதஸ்து தூதஸ்ய ந நஹ ஷ்ருதோஸ்தி”

பொருள்: ” ஏதேனும் ஒரு அங்கத்தை வெட்டுவதோ, சிதைப்பதோ, கசையடி கொடுப்பதோ, மொட்டை அடிப்பதோ, அல்லது ஏதேனும் ஒரு இடத்தில் பச்சை குத்தி விடுவதோ போன்ற தண்டனைகளுள் ஒன்றைக் கொடுக்கலாமே ஒழிய மரண தண்டனை தரலாம் என நான் கேள்விப்பட்டதே இல்லை” (வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம், 52வது சர்க்கம், 15வது பாடல்)

“நாய ஷீஷ் கரி வினய பஹுதா
நீதி விரோத் ந மாரிய தூதா
ஆன் தண்ட் குச் கரிய குஸா(ந்)யீ
ஸம்ஹி கஹா மந்த்ர பல் பாயீ
சுனத் விஹ(ந்)ஸி போலா தஸ கந்தர்
அங்க் பங்க் கரி படவஹு பந்தர்”

பொருள்:விபீடணன் ராவணனை வணங்கி தூதனைக் கொல்வது அரசநீதிக்கு விரோதமானது எனக் கூறினான். வேறு ஏதேனும் தண்டனை தரலாம். இதை அவையிலுள்ள அனைவரும் ஏற்றனர். அப்போது சிரித்தபடி ராவணன் இந்தக் குரங்கை அங்க ஹீனமாக்கி அனுப்புங்கள் என்றான். (பக்கம் 664 ராமசரிதமானஸ் அலகாபாத் ராமநாராயண்லால் பதிப்பு 1936)

தூதுவனைக் கொல்லக் கூடாது என்னும் நெறியை நினைவு படுத்தும் விபீடணன் அடுத்தவன் மனவியை அபகரிக்கக் கூடாது என்பதை சுந்தர காண்டத்தில் நினைவு படுத்தவில்லை. இது ஒரு முரணாகவே தென்படுகிறது. வருணம் என்னும் அடிப்படையில் பார்க்கும் போது ராவணனும் சகோதரரும் அந்தணரே.

தாய் வழியில் தான் அவர்கள் ராட்சசராய் அறியப்பட்டது. சரி ராட்சத நீதி என்று பார்க்கும் போது கூட எது நீதி? அவர்தம் சமூகத்தில் எது சரி எது சரியில்லை என்பது பிரதிகளில் தென்படவில்லை என்றாலும் மாரீசனின் அணுகுமுறையில் இது பேரழிவுக்கும் வம்சமே அற்றுப் போகும் நிலைக்கும் வழி வகுக்கும் என விபீடணன் விளக்கி இருக்கலாம். (யுத்த காண்டத்தில் அறிவுரை செய்கிறான் விபீடணன். ஆனால் யுத்த காண்ட நிலை வேறு. சுந்தர காண்டத்தில் அவகாசம் இருந்தது).

லட்சுமண பரதரை ஒப்பிடும் போது கும்பகர்ண விபீடணரின் சகோதர பாசம் எந்தவிதத்திலும் குறைவானதல்ல. விபீடணனைப் பொறுத்த அளவில் ராவணன் என்றைக்குமே திருந்த மாட்டான் என ஒரு ஆழ்ந்த அவநம்பிக்கை அவன் மனதிற் குடி கொண்டு விட்டதாகவே தோன்றுகிறது.

ஏனெனில் தூதுவனாக வந்த இவனைக் கொல்லாதே என விபீடணன் ராவணனிடம் கூறுவதற்கு முன்பு அனுமன் ராவணனிடம் ஒரு நீண்ட அறிவுரை கூறுகிறான். அதில் பிறன் மனை விழைவது குற்றம் என உறுத்துக் கூறுகிறான்.
“திறம் திறம்பிய காமச் செருக்கினால்
மறந்த தம்தம் மதியின் மயங்கினார்
இறந்து இறந்து இழிந்து ஏறுவதே அலால்
அறம் திறம்பினர் ஆர் உளர் ஆயினார்”

பொருள்: முறை தவறிய காமத்தின் செருக்கில், அறம் மறந்து மயங்கியோர் இறந்தும் மேலும் இழிந்துமே போனார்கள். அறம் பிறழ்ந்தோரில் அழியாமல் வாழ்வோர் யார் உள்ளார்கள்?

(பாடல் 1140 சுந்தர காண்டம் கம்ப ராமாயணம்)

“இச்சைத் தன்மையினில் பிறர் இல்லினை
நச்சி நாளும் நகைஉற நாண் இலன்
பச்சை மேனி புலர்ந்த பழி படூஉம்
கொச்சை ஆண்மையும் சீர்மையில் கூடுமோ”

பொருள்: பிறர் நகைக்கும் படி பிறன் மனைவியின் மீது காமம் கொண்டு காம தாபத்தால் உடல் வாடி நைவது ஆண்மையின் குணங்களுள் ஒன்றாகுமோ? (பாடல் 1143 சுந்தர காண்டம் கம்ப ராமாயணம்)

“தத் பவான் த்ருஷ்டதர்மார்த்ஸ்தபஹக்ருதப்பரிக்ரஹஹ
பரதாரான் மஹாப்ராஷ நோபரோத்தம் த்வம்மர்ஹஸி”

பொருள்: அறிவிற் சிறந்தவனே! நீ அறம் பொருள் என்னும் தத்துவங்களை நன்கறிந்தவாய். மிகப்பெரிய தவங்களைப் ப்ரிந்தன் நீ. எனவே இன்னொருவர் மனைவியைத் தன் வீட்டில் அடைத்து வைத்திருப்பது முறையாகாது. (வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம், 51வது சர்க்கம், 17வது பாடல்)

ராமசரித மானஸில் ராமனைச் சரணடைவதே சிறந்தது என ராமனின் பராக்கிமரங்களைத் தூக்கிப் பிடிக்கிறான் அனுமன். குறிப்பான அறநெறி போதனை ஏதுமில்லை.

இவ்வாறாக கைலாயத்தையே தன் தவ வலிமையால் அசைத்த ராவணனனுக்கு அறிவுரை கூறுமளவு சமுதாய நெறிமுறைகளை நன்கறிந்த சமுதாய அங்கமாக அனுமன் நம்மால் காணப்படுகிறான். ஒரு மன்னனுக்கு அவனது அவையில் அவனது சகோதரன் விபீடணன் எதிரில் புத்திமதி கூறுமளவு அனுமனின் அறவுணர்வு பிரம்மாண்டமாக நம் முன் எழுகிறது.

இதைக் கேட்டும் தன் படையினரையும் உறவினரையும் அழித்துப் பின் பிரம்மாஸ்திரத்தில் கட்டுப்பட்டதால் மட்டும் அடக்கப்பட்ட அனுமனைக் கொல்ல முடிவெடுக்கும் போது தான் விபீடணன் ராவணனனைத் தடுத்துக் கூறுகிறான்.

இப்படியாக அனுமனும் விபீடணனுமாய் அறநெறிகளைத் தூக்கிப் பிடிக்கிறார்கள். ஆனால் அதற்கு அடுத்து நடப்பவை மிகப் பெரிய மீறல்களாக நம்மைத் துணுக்குறச் செய்கின்றன. அனுமனைக் கொல்லா விட்டாலும் அளவில் மிகப் பெரிய அவனுடைய வாலுக்குத் தீ வைக்க ராவணன் ஆணையிட பிரம்மாஸ்திரக் கட்டு எடுக்கப்பட்டு வாலுக்குத் தீ மூட்டப்படுகிறது. சூர்ப்பனகையை அங்கஹீனம் செய்ததற்குப் பதில் அடியாக ஒருபுறமும் மறுபுறம் லட்சுமணனின் அந்தச் செயலைப் போலவே இதுவும் கேள்விக்குறியதாகிறது. அனுமனால் அப்பெருந்தீ லங்கை முழுவதும் பரவுகிறது.

நந்தவனங்கள், பறவைகள், விலங்குகள், வீடுகள், போர் வீரர்கள், அவரது மனைவி குழந்தைகள், பொது மக்கள் எனத் தீயில் வெந்து சாம்பலானோர் பட்டியல் மிகப் பெரிது. ஒரு அரசனுக்கே அறநெறி சார்ந்த அறிவுரை கூறிய அனுமனின் செயல் இது. அனுமனின் இந்த அழிவுத் தாண்டவம் தற்செயலாய் நிகழ்ந்ததா? இல்லை. இறுதியில் அனுமன் தானாகவே கடலிற் சென்று அத்தீயை அணைக்கிறான். அவ்வாறெனில் இப்பேரழிவை நிகழ்த்த அனுமனைத் தூண்டியது எது? ராமன் மற்றும் சீதையின்பாற் கொண்ட விசுவாசம் ஒன்றே இதன் காரணம் என்றால் ஒரு தவறான அரசனின் காரண்மாக அவனது குடிமக்கள் அழிய வேண்டும் என நியாயப் படுத்த இயலுமா? இதை எப்படி விளங்கிக் கொள்வது? எத்தகைய புரிதலுடன் சுந்தர காண்டத்தை நாம் வாசிப்பது என்னும் கேள்வி நம் முன்னே எழுகிறது. ஒரு ஆவேசத்தில் இயங்கிய அனுமன் பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படவில்லை என எண்ண முடியாதபடி, பின் வரும் பாடல்களைக் காண்கிறோம்:

“விட்டு உயர் விஞ்சையர் வெந்தீ
வட்ட முலைத் திருவைகும்
புள் திரள் சோலை புறத்தும்
கட்டிலது என்பது சொன்னார்”
பொருள்: வானத்துக்கு பூமியிலிருந்து வந்த வித்யாதரர்கள் பெரிய தீயானது வட்டமான முலை உடைய சீதை இருக்கின்ற பறவைகள் நிறைந்த சோலையை வெளியிலோ உள்ளேயோ சுடவில்லை என்பதைக் கூறினார்கள்.

“வந்தவர் சொல்ல மகிழ்ந்தான்
செந்திரல் வீரன் வியந்தான்
உய்ந்தெனன் என்ன உயர்ந்தான்
பைந்தொடி தாள்கள் பணிந்தான்”
பொருள்: வந்தவர்களான வித்யாதரர்கள் சொன்னதைக் கேட்டு மகிழ்ந்தான் அனுமன். வியந்தான். ‘நான் தீவினையில் இருந்து தப்பினேன் என்று எண்ணி மேலெழும்பிச் சென்று சீதையின் கால்களில் (அசோகவனத்தில்) பணிந்தான்.

(பாடல் 1244,1245 சுந்தர காண்டம் கம்ப ராமாயணம்)

“யதி தக்தா திவ்யம் ஸ்ர்வா நூன மார்யாமி ஜானகி
தக்தா தேன மயா பர்துர்ஹதம் கார்யமஜானதா”

பொருள்: இலங்கையே எரிந்து அழிந்ததென்றால் மதிப்பிற்குரிய ஜானகியும் எரிந்து வெந்திருப்பார். இப்படிச் செய்து என்னையுமறியாமல் என் இறைவனின் பணியை ஒன்றுமற்றதாக்கி விட்டேன். (வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம், 55வது சர்க்கம், 8வது பாடல்)

” ததஹ கபிஹி ப்ராப்தமனோரதார்த்
ஸ்தமஷ்ரதாம் ராஜஸுதாம் விதித்வா
ப்ரத்யஷதஸ்தாம் புனரேவ த்ருஷ்டா
ப்ரதிப்ராணாய மதிம் சகார்”
பொருள்: இளவரசி சீதைக்கு எந்த ஊறும் விளையவில்லை என்றறிந்து, தனது எண்ணம் ஈடேறியது என நினைத்து மறுபடி சீதையை தரிசிக்க விழைந்தான் அனுமன் (வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம், 55வது சர்க்கம், 65வது பாடல்)

“ஜாரா நகர் நிமிஷ இக் மாஹி(ன்)
ஏக் விபீஷண் கோக்ருஹ் நாஹி(ன்)
பொருள்: ஒரே நிமிடத்தில் நகர் முழுவதும் எரியத் துவங்கியது. விபீடணனது வீடு மட்டும் எரியவில்லை. (பக்கம் 666 ராமசரிதமானஸ் அலகாபாத் ராமநாராயண்லால் பதிப்பு 1936)

ராமசரிதமானஸில் சீதை எரிவாளா என்னும் அனுமன் கவலை பற்றிய எந்தப் பதிவும் இல்லை. மற்ற இரு ராமாயணங்களிலும் அனுமன் பாரபட்சமாகச் சிந்திக்கிறான். அதாவது சீதை தான் மூட்டிய தீயால் பாதிக்கப் படவில்லையா என அனுமன் கவலைப் படுவதும், பின் தெளிந்து மன ஆறுதல் அடைவதும் சீதையின் மீது அவனுக்கு உள்ள அக்கறையை மட்டும் வெளிப்படுத்தவில்லை. மற்ற உயிர்களை மிகவும் மலிவாக நினைப்பதும் அதில் தொக்கி நிற்கவே செய்கிறது.

சமுதாயம் பற்றிய உணர்வே பொது நலன் பற்றிய அக்கறையே அற உணர்வுகளின் அடிப்படை. எனவே தன்னை (பொறுப்புள்ள) சமூகத்தின் ஒரு அங்கமாகக் கருதி அறநெறி பேசும் அதே கதா பாத்திரம் மறுகணம் ஊழித்தாண்டவம் ஆடுவதையும் காண்கிறோம் சுந்தர காண்டத்தில்.

சீதையோ, பரதனோ, அனுமனோ கொண்ட மீறல்களில் ஒரு பொதுமையானது அவர்களை அடக்கி ஆளும் ராமன் அருகே இல்லை. சரி, ராமனே வாலிவதையில் செய்த மீறல்?

மேலும் வாசிக்கும் போது தனிமனித உணர்வுகள் எப்போது மேலெழும்புகின்றன, மற்றும் தன்னை சமூகத்தின் அங்கமாக எப்போது பாத்திரங்கள் உணர்கின்றனர் என்பது பிடிபடலாம்.

Series Navigationவிஸ்வரூபம் அத்தியாயம் 75 >>

This entry is part [part not set] of 46 in the series 20110417_Issue

சத்யானந்தன்

சத்யானந்தன்