ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -7

சத்யானந்தன்


யுத்த காண்டம் – முதல் பகுதி

“ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? ” என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது என்னும் ஆய்வில் கம்ப ராமாயணம் வால்மீகி ராமாயணம் ராமசரிதமானஸ் என மூன்று பிரதிகளை வாசிக்கிறோம்.

சுந்தர காண்டத்திற்கு முன்னர் நாம் சூர்ப்பனகை மற்றும் மாரீசன் பேசுவதை மட்டுமே காண்கிறோம். சுந்தர காண்டத்தில் தான் முதன் முதலாக விபீடணன் ‘தூதுவனைக் கொல்லாதே’ என்னும் போது கவனிக்கிறோம். சுந்தர காண்ட முடிவில் லங்கையை எரித்து விட்டு அனுமன் கிஷ்கிந்தைக்குத் திரும்புகிறான்.

இங்கே லங்கையில் விபிடணன் ராவணனுக்குப் புத்திமதி கூறுகிறான்.

“இசையும் செல்வமும் உயர் குலத்து இயற்கையும் எஞ்ச
வசையும் கீழ்மையும் மீட்கொள கிளையோடும் மடியாது
அசைவில் கற்பில் அவ்வணங்கை விட்டருளிதி இதன் மேல்
விசையம் இல் எனச் சொல்லினன் அறிஞரில் மிக்கான்”

பொருள்: அறிஞருள் முதன்மையானவனான விபீடணன் “மாறாத கற்புடையவளான சீதையை அனுப்பி விடுவதே நம் குலத்தின் உயர்ந்த பண்பு தாழ்ந்து விடாமலும் , சுற்றத்துடன் நீ இறந்து போகாமலும் காக்கும்” என்றான்.
(பாடல் 110 யுத்த காண்டம் கம்ப ராமாயணம்)

ந து ஷமம் வீர்யவதா தேன தர்மானுவர்திதனா
வைரம் நிரர்த்தகம் கர்த்தும் தீயதாயஸ்ய மைதிலி

ஸ்ரீராமன் தர்மாத்மா ஆனவர். மிகுந்த ஆற்றல் கொண்டவர். அவரிடம் வீண் போர் புரிதல் உகந்ததன்று. மிதிலை மன்னரின் மகளான ஜானகியை அவரிடம் திரும்ப அனுப்ப வேண்டும்.
(பாடல் 16 ஸர்க்கம் 9 யுத்த காண்டம் வால்மீகி ராமாயணம்)

இந்த அறிவுரையைப் பொருத்த அளவில் ராம சரித மானஸ் சற்றே வேறுபடுகிறது. விபீடணனின் புத்திமதி மற்றும் அதைத் தொடர்ந்து அவன் ரானிடம் சரணடைவது இரண்டுமே சுந்தர காண்டத்திலேயே நிகழ்ந்து விடுகின்றன.

“ஜோ ஆபன் சாஹெவ் கல்யாணா
சுயஷ் சுமதி ஷுபதி சுக் நானா
தெவ் பரநாரி குஸாயி
தஜெவ் செவ்தீ சந்தா கீ நாயி(ந்)”

பொருள்: “நீங்கள் தமது நன்மை, புகழ், நன்மதி, நற்கதி மற்றும் பல சுகங்களை அடையும் எண்ணம் கொண்டிருந்தால் பிறன்மனைவியை சதுர்த்தசி நிலவை விட்டு நீங்குவது போல் (அமாவாசையன்று) நீங்கி விடுங்கள்.
(பக்கம் 676 சுந்தர காண்டம் ராமசரிதமானஸ் அலகாபாத் ராமநாராயண்லால் 1936 பதிப்பு)

எனவே, விபீடணனது அறிவுரை ஒரு உடன்பிறப்பின் தரப்பில் அக்கறையும் கவலையும் கொண்டதாக இல்லாமல் லங்கை அரசின் முக்கியப் பங்குள்ள இளவரசன் என்னும் தொனியுடனும் தோரணையுடனும் இருப்பதைக் காண்கிறோம்.

விபீடணனும் கும்பகர்ணனும் ராவணின் இரு சகோதரர்கள். சமுதாயம் சகோதரனின் கடமை இது தான் எனக் காட்டிய வழியில் க ண் ணை மூடிக் கொண்டு கும்பகர்ணன் செல்லுவதை நாம் இதே யுத்த காண்டத்தில் காண்கிறோம். எனவே விபீடணனது அறிவுரை தனது இறுதியான அரசியல் முடிவைச் செயற் படுத்தும் முன் (எதிரியான ராமனிடம் சரணடையும் முன்) ராவணனுக்கு ஒரு வாய்ப்புத் தர எண்ணி செய்யப்பட்டதே.

இந்த முடிவை மொத்த லங்கை மற்றும் அரக்கர் ஆட்சியின் தொடர்ச்சி இவற்றை மனதிற் கொண்டே விபீடணன் எடுக்கிறான். சீதை கடத்தப் படும் முன்பும் ராமன் அதே வீரதீரமிக்க மன்னர் குலத்தவனே.

தாடகை முதல் மாரீசன் வரை எத்தனையோ அரக்கர் ராமனின் பாணங்களுக்கு இரையாயினர். அப்போதெல்லாம் ராமனின் புகழை விபீடணன் உரைக்கவில்லை. நாம் ராமனின் வழி நடப்போம் சரணடைவோம் என்று கூறவேயில்லை. சீதையை சிறை வைத்துப் பல நாட்களுக்கும் அவன் மௌனமே காக்கிறான். அனுமன் கொல்லப்பட வாய்ப்பு இருக்கும் சற்று முன்னர் (சுந்தர காண்டத்தில்) அவன் தூதுவனைக் கொல்ல வேண்டாம் என்னும் கோணத்தில் அறிவுறுத்துகிறான். அனுமன் சொன்னவற்றைத் திருப்பிச் சொல்லவில்லை விபீடணன். சீதை அபகரிப்பு மிகப் பெரிய குற்றம் என்று சுந்தர காண்டத்தில் பேசவேயில்லை. இவ்வளவு ஏன்? யுத்த காண்ட துவக்கத்தில் கூட ராமனின் பேராற்றல் குறித்துப் பேசும் அளவு விபீடணன் அபகரிப்புக் குற்றம் என்னும் அடிப்படையில் பேசவேயில்லை. நீ ஏன் ராமனின் மனைவியை அபகரித்தாய்? அல்லல்படுவாய் என்னும் கோணத்திலேயே அவனது புத்திமதிகள் அமைகின்றன.

தனது அறிவுரையும் தானும் ராவணனால் நிராகரிக்கப் படுவோம் என விபீடணன் நன்கறிவான். எனவே அரசியல் ரீதியான ஒரு முடிவே ராமனிடம் சரண்புகல் என்னும் அணுகுமுறைக்குப் பின்வரும் பாடல்கள் சான்றாய் அமைகின்றன

விபீடணன் முகாமுக்கு வெளியே ராமனை சந்திக்க என வந்து காத்திருக்கிறான் என்ற செய்தி தெரிந்த உடன் அவனை ஏற்பதா வேண்டாமா என சுக்ரீவனை ராமன் கேட்க அவன் கூறுவான்:

“தகையுறு தம்முனை தாயை தந்தையை
மிகையுறு குரவரை உலகின் வேந்தனை
பகைஉற வருதலும் துறந்த பின்பு இது
நகையுறல் அன்றியும் நயக்கற்பாலதோ

பொருள்: மூத்தவனாகிய அண்ணனை, வணக்கத்துகுரிய ஆசிரியரை, உலகத்துக்குத் தலைவனான அரசனையும் பகைவன் தாக்க வந்ததும் கை விட்டு விடும் பண்பு ஏளனத்துக்கு உரியதே அன்றி ஏற்கக்கூடியதா?
(பாடல் 365 யுத்த காண்டம் கம்ப ராமாயணம்)

ஜாம்பவான் சொல்வது:
வெற்றியும் தருகுவர் வினையம் வேண்டுவர்
முற்றுவர் உறுகுறை முடிப்பர் முன்பினால்
உற்றுறு நெடும் பகை உடையவர் அல்லதூம்
சிற்றினத்தவரொடும் செறிதல் சீரிதோ

பொருள்: நெடும் பகை உள்ளவர்கள் முதலில் பணிந்தும் நம் வெற்றிக்கு உதவியும் செய்து, வேறு நமது குறைகளை நம்மோடு சேர்ந்து நீக்குவார்கள். ஆனால் தக்க தருணத்தில் நமக்குத் தீங்கே இழைப்பார்கள். மேலும் கீழினமான அ ர க்கருடன் சேருவதில் என்ன சிறப்பு? (பாடல் 376 யுத்த காண்டம் கம்பராமாயணம்)

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக அனுமன் கூறுகிறான்:
வாலி விண் பெற அரசு இளையவன் பெற
கோலிய வரி சிலை வலியும் கொற்றமும்
சீலமும் உணர்ந்து நின் சேர்ந்து தெள்ளிதின்
மேல் அரசு எய்துவான் விரும்பி மேயினான்

பொருள்: வானுலகை வாலியும் அவன் தம்பி சுக்ரீவன் அரசையும் அடையச் செய்த உமது வில்லின் வலிமையையும் தங்கள் ஆளும் திறத்தையும் குணத்தையும் புரிந்து கொண்டு உங்களிடம் சேர்ந்து அரசை அடைய விரும்பி விபீடணன் வந்துள்ளான். (பாடல் 394 யுத்த காண்டம் கம்ப ராமாயணம்)

வால்மீகி ராமாயணத்தில் சுக்ரீவன் கூறுவது:

“ப்ரக்ருத்யா ராக்ஷஸோ ஹ்யேய ப்ராதா மித்ரஸ்ய வை ப்ரபோ
ஆகதஷ்ச ரிபுஹு ஸாக்ஷாத் கதஸ்மின்ஸ்ச்சவிஷ்வஸேத்”

பொருள்: பிரபு, இவனோ இயல்பால் ராக்ஷஸன். தன்னை நம் எதிரியின் உடன் பிறந்தவன் என்றும் சொல்லிக் கொள்கிறான். அவ்வாறெனில் நம் எதிரியே இங்கு வந்தானென்றே கொள்ள வேண்டும். (வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம் 7வது ஸர்க்கம் 15வது பாடல்)

அனுமன் கூறுவது:

உத்யோகம் தவ ஸ்ம்ப்ரேக்ஷ்ய மித்வாவிருத்தம் ச ராவணம்
வாலினம் ச ஹதம் ஷ்ருத்வா ஸுக்ரீவம் சாபிஷேசிதம்
ராஜ்யம் ப்ரார்த்தயமானஸ்து புத்திபூர்வமிஹாகதஹ
ஏதாவத் து பரஸ்க்ருத்ய யுஜ்யதே தஸ்ய ஸ்ங்க்ரஹ

பொருள்: தங்களது செயற் திறன், ராவணனது கெட்ட நடத்தை, வாலியைத் தாங்கள் வதம் செய்ததையும், சுக்கிரீவன் ராஜ்ஜியம் பெற்றதையும் அறிந்த பிறகே இவன் தங்களைச் சரணடைய வந்துள்ளான். (தாங்கள் பாதுகாப்புத் தந்து அரசும் தருவீர்கள் என்று அவன் நம்புகிறான்). இதைக் கருத்திற் கொண்டால் அவனை ஏற்றுக் கொள்வது உகந்தது என்றே தோன்றுகிறது.(வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம் 7வது ஸர்க்கம் பாடல்கள் 66,67)

ராமசரித மானஸில்
பேத் ஹமார் லேன ஷட் ஆவா
ராகிய பாந்தி மோஹி(ந்) அஸ் பாவா
சகா நீதி தும் நீக் விசாரி
மம ப்ரண ஸரணாகத் பய ஹாரி

பொருள்: (சுக்கிரீவன் கூறினான்: நம்முள் பிளவு உண்டாக்கும் சதியுடன் இவன் வந்துள்ளான். இவனைப் பிடித்து சிறையிலடைக்க வேண்டும். இதைக் கேட்டு ராமர் கூறினார் ” ஒரு வேளை நீ கூறியது சரியாக இருக்கலாம். ஆனால் என்ன செய்வது ? சரணமடைந்தவரைக்காப்பது என் உயிர் மூச்சு போன்றது”

சுனி ப்ரபு வசன் ஹரஷி ஹனுமானா
ஷரணாகத வத்சல பகவானா

பொருள்: இதைக் கேட்ட ஹனுமன் மகிழ்ந்தான். ‘சரணமடைந்தவர் மீது அன்பு செலுத்துபவர் தாங்கள் இறைவனே!”
(பக்கம் 680 சுந்தர காண்டம் ராமசரிதமானஸ் அலகாபாத் ராமநாராயண்லால் 1936 பதிப்பு)

சமுதாயத்தால் பாரம்பரியமாக, மிகவும் கடைப்பிடிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டு வரும் அற நெறி
களை மீறித் தனி மனித உத்வேகத்துடன் செயற்படும் நிகழ்வுகளை ஒவ்வொரு காண்டமாக வாசித்து வருகிறோம். ஒரே கதாபாத்திரம் சமூக அங்கமாக அனேக தருணங்களிலும், அபூர்வமாக மிகப் பெரிய ஒரு மீறலைச் செய்பவராகவும் நம்முன் வருகின்றனர். அத்தகைய மீறல் தருணங்களில் ‘ என்னுடைய புரிதலுக்கு மட்டுமே தென்பட்ட முக்கியமான விஷயம்; மிக நல்ல செயற்பாடு இது’ என்னும் கோணத்தில் தான் எல்லா கதாபாத்திரங்களும் இயங்கியுள்ளார்கள். தனது தனித்தன்மையை நிலை நாட்டும் தேவை இருப்பதாக மிகப்பெரிய ஆளுமைகள்கூட ராமாயணத்தில் தலை எடுத்து முயற்சிகள் எடுக்கவில்லை. ஆனால் தானோ, குடும்பமோ, நாடோ, ஆட்சியோ ஏதோ ஒன்று மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் என்பதைத் தனது கோணத்தில் மட்டுமே காண்பதாக உணரும் ஒரு மையப்புள்ளி இந்த மீறல்கள் அனைத்திலும் தென் படுகிறது.

ஆகவே நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ தன்னுள்ளிருந்து பெற்ற ஒரு உந்துதலில் தனிமனிதராய், தம் போக்கில் பாத்திரங்கள் செயற்படுவதைக் காண்கிறோம். குறிப்பாக யுத்த காண்டம் நம் கேள்விக்கான விடையை நம்மை நெருங்க வைக்கும் சாத்தியங்களைக் காட்டுகிறது. யுத்த காண்டம் பெரியது. மேலும் வாசித்து வழி தேடுவோம்.

Series Navigation33 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 33 >>

This entry is part [part not set] of 33 in the series 20110424_Issue

சத்யானந்தன்

சத்யானந்தன்