முணுமுணுப்பு .. கயிலை மு.வேடியப்பனின் சிறுகதைத்தொகுப்பு… எனது பார்வையில்.

தேனம்மை லெக்ஷ்மணன்


சிறுகதைகள் என்பது சட்டென்று படித்துவிட முடிவதால் எப்போதும் என் ஈர்ப்புக்கு உரியதாய் இருக்கிறது. ஒரு சில பக்கங்களில் நம்மை அந்த நிகழ்வெளிக்கு செலுத்துவது என்பது சிலரால்தான் கைகூடும். மண்ணின் மணம் வீசும் இக்கதைகளில் பனி படிந்த வயல் மண்ணை வெள்ளெலி தள்ளிய வெதவெதப்பையும் ஊரில் வீசும் சாரல் தழுவிய ஈரக்காற்றையும் உணர முடிகிறது. கண்மணி குணசேகரன் முன்னுரை அளித்திருக்கிறார். பாவை பப்ளிக்கேஷன்ஸ் வெளியிட்டுள்ள இந்நூலின் விலை . 45 ரூபாய்.

எழுத்தாளர் கயிலை மு. வேடியப்பன் என்றதும் கயிலைக்கு சென்று வந்த ஞானியோவென என நினைத்தால் அவர் முப்பதுகளில் உள்ள கயிலாயபுரம் (தர்மபுரி மாவட்டம்) என்ற ஊரைச் சேர்ந்த டிஸ்கவரி புத்தக நிலைய உரிமையாளர் வேடியப்பன். புத்தகங்கள் மீதும் எழுத்தின் மீதும்., மண்ணின் மீதும் ததும்பி ஊறிய காதலோடு வடித்து வைத்திருக்கும் இக்கதைகள் மிக அற்புதம். சினிமா தொடர்பான பணிகளிலும் ஈடுபடுவதால் ஒன்றை சித்தரிப்பது என்பது அருமையாக கைவரப் பெற்றிருக்கிறது.

மொத்தம் பத்தே கதைகள்தான்.. பத்தும் கிராமம் தழுவிய கதைகளாய் இருந்தாலும்., பெண் வாழ்வியலை அதிகம் பேசுகின்றன. விதைப்பதற்கான விதையை விவசாயிகள் வைத்துக் கொள்ளும் உரிமையைக் கூட பறித்துவிடும் நோக்கத்தில் ., தங்களது ஜீன் மாற்றப்பட்ட பி டி ரக விதைகளைப் பரப்பி உலக உணவு உற்பத்தியையே தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த் அனைவரையும் பிச்சைக்காரர்களாக ஆக்கும் முடிவோடு உள்ள ஏகாதிபத்தியம் போலத்தான் இலக்கியம் என்பது இன்றைய வாழ்வியலின் நடப்பு முறையைப் பேசாமல் ஹைக்கூ., சிம்பாலிசம் ., ப்பொஸ்ட் மார்டனிசம் என பேசுவது என ஒரே விளாசல் விளாசி இருக்கிறார் வேடியப்பன் தன் முன்னுரையில்.

சின்னவனும் பெரியவனும் சித்தரிக்கப்பட்ட விதம் செல்லப்பிராணி வளர்க்க விரும்பாத நானே வளர்க்க ஆசைப்படும் படி இருந்தது . தும்பி பிடிப்பதும்., ஓணான் பிடிப்பதும் ., உடும்பு, கீரி வேட்டையாடுவதும் கிராமத்து ஆனந்தம். ஆனால் இறப்பிற்குப் பின் அம்மா அழுதுகொண்டே இருப்பதுதான் நினைவில் இருக்கிறது.

தீப்பாஞ்சாள் நகரத்துக்காரிதான் ஆனால் பிச்சைக்காரி. உடல் உழைப்பினால் நிமிரும் காட்சி நெகிழ்வு. இப்படி வழிகாட்டப்படாமல் சேற்றிலேயே புதைந்து போவோர் ஆயிரம். இரண்டு கைகள் இருக்கும் போது உழைத்து தன்மானத்தோடு பிழைக்க வழி கூறியது அருமை.

தப்பிப்பு யார் யாரிடமிருந்து தப்பிக்க முடியும் என்பதைக் கூறியது. புருஷனோ., மனைவியோ., எத்தனை நாள் அல்லது வாரம் அல்லது வருஷம் பேசாமல் இருக்கமுடியும். ஒரு கட்டத்தில் மகள் விரும்பியவனை மணந்து கொள்ள வீட்டை விடு ஓடியதும்., அதற்கு மனைவி குற்றவாளி அல்ல என்பதை உணர்ந்தாலும் அந்த விடாப்பிடியான பிடிவாதத்தை விட முடியாமலும் சமரசம் செய்து கொள்ளத் தெரியாமலும் இருக்கும் அந்தக் கணவனும் அழகுதான். மனைவிக்கு சோறை மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு தன் ஆதிக்கத்தை உணர்த்துவதும் கூட அவளுக்கு மகிழ்வைத் தருவது வினோதமான உணர்வு.

சினிமாவில் நடிக்க வந்த டீக்கடை அண்ணாச்சி கதைதான் எனக்கு மிகவும் பிடித்த கதை. எதேச்சையாக டீக்கடை அண்ணாச்சி ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்க., அதே காரணத்தால் கடை தேய்ந்து நஷ்டத்திற்கு விற்றுவிட்டு., அவர் ஆல்ப்த்தைத் தூக்கிக் கொண்டு ஒவ்வொருவரிடமும் சான்ஸ் கேட்பது தத்ரூபமான கோடம்பாக்கம் நிஜக்கதை.

சாராயம் காய்ச்சும் கட்டியக்காரன் கதை வித்யாசம். மாமூல் கொடுப்பதும்., சிலசமயம் கேஸ் கிடைக்காத போது கேன்களோடு உட்கார வைக்கப்பட்டு படம் பிடிக்கப்பட்டு பத்ரிக்கைகளில் வரும் மெலிந்த சாராயம் காய்ச்சி பிடிபட்ட ஆளாக கட்டியக்காரன் இருப்பது போல் ஒரு தோற்றம் விரிந்தது மனக்கண்ணில் ..

வயலில் ஏர் பூட்டி உழ விரும்பும் ஒரு சாதாரண விவசாயித்தாத்தாவின் கதை முணுமுணுப்பு. ஒவ்வொரு மழையின் போதும் அதிகப்படியாய் பெய்து வாழை மற்றும் வயல்களை நாசப்படுத்தும் மழை குறித்தான கவலை எனக்குண்டு. எளிமையாய் களியும் கீரையும் உண்டு உழைக்க அஞ்சாத அந்தத்தாத்தா மழை வந்ததும் ஏர் பூட்டி நாடகப் பாடல்கள் பாடியபடி உழுவது அழகு.

படிப்பு மிகவும் யோசிக்கவைத்த கதை. தன்னைப் போல தன் மகனும் வாத்தியாருக்கு சாப்பாடு கொண்டு செல்வதைப் பார்த்துப் பதைக்கும் சீனி ., பின் எடுக்கும் முடிவு வரவேற்கத்தக்கது. படிக்க வரும் பிள்ளைகளை கடைக்கு அனுப்புவது., தன் வீட்டுக்குச் சாப்பாடு கொண்டு வர சொல்வது., சில இடங்களில் தனியாய் ட்யூஷன் வேறு வகுப்பாசிரியரே நடத்தி தன் வகுப்பு மாணவர்க்கே ப்ரைவேட் க்ளாஸ் எடுப்பது எனக்கு ஒவ்வாத விஷயம். இந்தக் கதையின் முடிவுக்கு பெரிய பூங்கொத்து.

கற்பென்றும் தீட்டென்றும் பெண்ணை மட்டும் ஒதுக்கி நெருப்புக் கம்பளத்தில் நடக்க வைப்பது மனித் சமூகத்தின் வழக்கம். கால் ஊனமான ஆறுமுகம் தன் தந்தையிடம் சொல்லி திருமணம் செய்துகொள்ள சமூகம் புறக்கணிக்கும் பெண்ணைத் தேர்ந்தெடுப்பது அவர் மன அழகைக் காட்டியது. இருந்தும் ஊரார் முன் ஒருவரால் அவமானம் ஏற்படும் அவளுக்கு பாதை நெருப்புக் கம்பளமாய் விரிந்து நீண்டு நடப்பது வருத்தம் தந்தது.

ஆண் பெண்ணை அன்பால் ஆக்கிரமிப்பது போல இங்கே ஒரு பெண் ஆணை ஆக்கிரமித்து தன் கட்டுப்பாட்டுக்குக் கீழ்தான் என எண்ண வைக்கிறாள். ஒரு கட்டத்தில் அவள் வாழ்கை இவன் வசமாக வரும்போது அவள் தன் கம்பீரம்., செருக்கு எல்லாம் இழந்து தன் பாட்டியை., மற்ற பெண்களைப் போலாவது ஒரு சின்னத் துயரமாகத்தான் இருக்கிறது பாட்டி முகத்தில்..

முட்டக்கண்ணனார் கதை கொஞ்சம் அதிர்ச்சி கலந்த கிராமத்து ரகசியம். கிடை போட்டிருக்கும் இடத்தில் இளம் ஆடு ஒன்று இறக்க அதை போட்டிக்காக ஒருவரே தின்று விட்டால் மற்றவர் மீசை எடுக்க வேண்டுமென்பது பந்தயம் . ”பாலும் பழமும் ஒரு வகைன்னா., சாரயமும் கறியும் இன்னொரு வகை. ” என்று குதூகலிக்கும் அவர்கள் அடுத்த வருட படையலில் நேர்ந்து கொண்டவர்கள் படையலிட்டு மீசையை எடுக்கலாம் என்பதை சொல்லும் போது. நிறைய வேண்டுதல்களை நான் இப்படியேதான் செய்து கொண்டிருக்கிறோமா என்ற ஐயமும் ஏற்பட்டது..

மொத்தத்தில் என்னை கிராம மண்ணில் உலாவச் செய்த கதைகள்.. யதார்த்தமும் வாழ்வியல் அழகும் அவலமும் பொருந்திய கதைகள். கண்மணி குணசேகரனின் வார்த்தைகளில் சொன்னால் “இன்னும் கூட உள்நுழைந்து வாழ்வியலின் நுனியறீயாத முடிச்சுக்களைத் தேடி எழுத ஆயத்தப்படுத்திக் கொள்வதுதான் வேடியப்பன்., தன்னை ஒரு படைப்பாளியாக நீட்டித்துக் கொள்வதும் நிலைநிறுத்திக் கொள்வதும் ஆகும்.

Series Navigation34 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 34 >>

This entry is part [part not set] of 47 in the series 20110430_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்

தேனம்மை லெக்ஷ்மணன்