மியம்மார் அருள்மிகு அன்னை ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி-அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் தேவஸ்தானங்களின் ஜீரணோத்தார அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகப்

சோலை.தியாகராஜன்


அன்பார்ந்த உலகத் தமிழர்களே, வணக்கம்.

மியம்மார் நாட்டிலிருந்து இம்மடலை வரைகின்றேன்.
நேற்று 10-4-2011 ஞாயிற்றுக்கிழமை, நடைபெற்ற
வரலாற்றுச் சிறப்புமிக்க மகா கும்பாபிஷேகப் பெருவிழாவைப் பற்றிய
செய்தியும் படங்களையும் உங்களுடன் பகிந்து கொள்வதில்
மகிழ்ச்சியடைகின்றேன்.

அருள்மிகு அன்னை ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி-அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர்
தேவஸ்தானங்களின் ஜீரணோத்தார அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகப் பெருவிழா நேற்று 10-4-2011,ஞாயிற்றுக்கிழமை காலை 9.45 மணிக்கு இராஜகோபுரங்களில் உள்ள
வெண்கலக் கலசங்களில் நன்னீரூற்றி குடமுழுக்காற்ற லட்சக்கணக்கான ( சுமார் 2 லட்சம் ) பக்தர்கள்
கண்டு மகிழந்தனர். தமிழகம்,சிங்கப்பூர்,மலேசியா போன்ற வெளிநாடுகளில்
இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். மியம்மார் நாட்டில் மிகமிகப் பிரசித்தி பெற்ற இத்தேவஸ்தானங்களின் கும்பாபிஷேகப்
பெருவிழாவிற்கு நாடெங்கிலுமிருந்தும்
இந்துக்கள்,பௌத்தர்கள்,கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் என சமய
வேறுபாடின்றி கலந்து கொண்டது இதன் சிறப்பாகும்.
மியம்மார் நாட்டின் தலைமை நகரங்களில் ஒன்றான யாங்கோன் நகரிலிருந்து 32
கி.மீ.தொலைவில் அமைந்துள்ள பீலிக்கான் என்ற கிராமத்தில் அமைந்துள்ள
அருள்மிகு அன்னை ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி-அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர்
தேவஸ்தானங்களானது 150 ஆண்டுகளுக்கு முன்னர் அவ்வேளையில் குடியேறியிருந்த
தமிழ் விவசாயப் பெருமக்களால் சிறிய அளவில் அரசமரத்தடியில் சூலாயுதம்
ஊன்றி ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயமாகவும் சற்று அருகில் சிறிய அளவிலான அருள்மிகு
அன்னை ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம் அமைத்தும் வழிபாடுகள்
செய்துவந்தனர்.

வயல் வெளிகள் சூழ்ந்த இக்கிராமத்தில் சுமார் 20 தமிழ்க் குடும்பங்கள்
மட்டும் வாழ்கின்றனர் என்றாலும் 64 சுற்றுக் கிராமங்களில் வசிக்கும்
ஆயிரக்கணக்கான மக்களின் குலதெய்வமாக காக்கும் கடவுளர்களாக அம்மையும்
அப்பனுமாக அருளாட்சி செய்ததின் காரணமாய் இத்தலத்தின் புகழும் பெருமையும்
பேரருள் கடாட்சமும் நாடுதழுவிய அளவில் பரவியது.

சென்ற 50 ஆண்டுகளில் இத்தலங்களில் நடைபெறும் பங்குனி உத்திரத்
திருவிழாவிற்கு போகாதவர்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு 10 நாட்கள்
நடைபெறும் உற்சவ விழாவிற்கும், அக்கினிக்கப்பரை அதனையடுத்து மறுநாளாம்
திருவிழாவன்றும் தீமிதியில் ஆயிரக்கணக்கில் பங்குபெறுவதும் இன்றும்
தொடர்கின்றன.

இத்தலங்களில் உள்ள அன்னை அங்காள பரமேஸ்வரின் தீமிதியும் பலிதமாகும்
வேண்டுதலும் பிரசித்தம் என்றானதோடு, ”ஐயா கோயில் ”என்று பயபக்தியோடு
அழைக்கப்பெறும் அரசோடு ஆலயங்கொண்டுள்ள ஸ்ரீ முனீஸ்வரர் சுவாமிகள்
நடுநிலைமாறாத நீதிபதியாக நீதிமன்றமும் அமைத்து அருள்பாலிக்கிறார் என்பது
கூடுதல் செய்தி.

நாடெங்கிலும் உள்ள நம்பிக்கை கொண்ட எல்லாச் சமயம்
சார்ந்த மக்களும் தங்கள் வழக்குகளை இங்குவந்து காணிக்கை கட்டி
முறையிடுவர். பிரதிவாதிகள் கோயில் சார்பாக அழைக்கப்படுவதும் வழக்குகளை
விசாரிப்பதும் சமரசம் செய்வதும் இயலாவிடின் ஐயாவின் தீர்ப்புக்காக
சூடமேற்றி நிறைவேற்றுவதும் வாரந்தோறும் வெள்ளி செவ்வாய் கிழமைகளில்
வழக்கமாய் நடைபெற்றுவருகின்றன. ஐயாவின் தீர்ப்பு நிச்சயம் பயங்கர
விளைவில் கண்கூடாய்க் கண்டதில் ஐயாவின் நீதிமன்றம் என்றதும் இன்றும்
குலைநடுங்கிப் போவது உண்மையிலும் உண்மை.
ஐயாவின் சன்னிதானத்தில் உருக்கமான வேண்டுதல்கள் அனைத்தும் நலமுடன்
நிறைவேற்றப்பட்டுவருவதால் பக்தப்பெருமக்களின் மிகப் பெரிய இறைமைத்
தலங்களாக வணங்கப்பெறுகின்றன.
மியம்மார் நாட்டிலிருந்து 1964 ஆண்டு முதல் அகதிகளாக தமிழகம் திரும்பிய
தமிழர்கள் , தமிழகத்தின் பாடியநல்லூர்,தஞ்சாவூர், எண்ணூர், வியாசர்பாடி,
மோரே (இந்திய மியம்மார் எல்லைப் பகுதி )போன்ற பகுதிகளில் இத்தலங்களின்
மண் எடுத்து அழகிய பெரிய கோயில்கள் அமைத்து திருவிழாக்கள் சிறப்பாக
நடத்திவருகின்றனர்.
2002 ம் ஆண்டு தொடங்கி , செல்வந்தர்கள்,பக்தப்பெருமக்கள் ஒன்று கூடி
இத்தலத்திலுள்ள கோயில்களை மிகச் சிறப்பக் கட்டித் திருப்பணி
செய்துள்ளனர். இத்திருப்பணியில் உள்நாடு,வெளிநாடு வாழ் இந்துக்கள்
பங்குபெற்றிருப்பது சிறப்பாகும். தமிழகச் சிற்பிகளின் கைவண்ணத்தில்
கோயில் கோபுரங்கள்,சிற்பங்கள்,வண்ண ஓவியங்கள் மற்றும் மிகச் சிறப்பான
கருங்கல் சிலைகளும் நிறுவப்பெற்றிருக்கின்றன. ஆகம முறைப்படி ஆலயங்கள்
அமைக்கப் பெற்றிருப்பதோடு தமிழகச் சிவாச்சாரியார் 120 பேர் மற்றும் பல
உதவியாளர்களும் வருகைதந்து கும்பாபிஷேக விழாவை சிறப்புடன்
நடத்தியுள்ளார்கள்
செய்தியும் படங்களும்,

சோலை.தியாகராஜன்
Yangon,Myanar
00 959 43042105

Series Navigationவிஸ்வரூபம் அத்தியாயம் 75 >>

This entry is part [part not set] of 46 in the series 20110417_Issue

சோலை.தியாகராஜன்

சோலை.தியாகராஜன்