விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்துநாலு

இரா.முருகன்


1915 – நவம்பர் 15 ராட்சச வருஷம் ஐப்பசி 30 திங்கள்கிழமை

பகவதி இந்த அறுபது வருஷ ஜீவிதத்திலேயே முதல் தடவையாக குரிசுப் பள்ளிக்குள் அடியெடுத்து வைத்தாள். அரசூர்ப் பக்கத்தில் மாதா கோவில் என்று சொல்கிற வழக்கம். கொஞ்சம்போல் விலகி நிற்கிற குரிசுப் பள்ளியை விட மாதாகோவில் பிடித்திருந்தது. அதுவும் கோவில் தான். அங்கே இருக்கப்பட்டவளும் சகல ஜீவராசிகளுக்கும் அம்மைச்சி தான்.

இதென்னடா மருதைய்யா அம்பல நடை போல் விசாலமாகத்தான் இருக்கு. ஆனா, கர்ப்பகிருஹத்தைக் காணோமேடா. நடுவிலே சிலாரூபமாத்தான் தெரியறது.

கைத்தாங்கலாகக் கூட்டி வந்த மருதையனை விசாரித்தாள் அவள்.

குரிசுப் பள்ளி ஏகப் பரபரப்பாக இருந்தது. தீபஜோதி கல்யாணத்துக்காக அதை சிரத்தையெடுத்துக் கொண்டு அலங்காரம் செய்திருந்தார்கள். குருத்துத் தோரணமும், குலைவாழை கட்டிய முகப்பும், உள்ளே வர்ணக் காகிதத்தால் பூவும் செடியும் கொடியுமாக ஏகக் கோலாகலமாக அதை சிங்காரம் செய்ததில் துர்க்கா பட்டனுக்கும் பங்கு உண்டு.

அது ஏன் நம்மாத்துக் குழந்தை கல்யாணத்தை நம் வீட்டிலேயே வைச்சு அமோகமா நடத்தாம கோவிலுக்குக் கொண்டு போகணும்?

அவள் வேதையனை வந்து சேர்ந்ததுமே விசாரித்து விட்டாள்.

கோவில்லே வச்சுத்தான் எல்லாக் கல்யாணமும் சவ அடக்கமும்னு பல நாள் பழக்கம் ஆச்சே.

வேதையன் கவனமாக விளக்க முற்பட, பரிபூரணம் அவனை உடனே கடிந்து கொண்டாள்.

கொஞ்சமாவது விவஸ்தை இருக்கா. நம்ம குழந்தை கல்யாணம் நல்ல படியா முடியணும்னு அத்தை ஆசையோட இத்தனை தூரம் வந்திருக்காங்க. ஒரு பாட்டித் தள்ளையா குடும்ப வீட்டுலே சுபச் சடங்கு நடக்கணும்னு அவங்க மனசு நிறைஞ்சு சொல்றபோது நீங்க அமங்கலமா ஏதோ பேசிட்டுப் போறீங்களே.

வேதையன் உடனே பேச்சை மாற்றினான்.

அதாவது நான் சொல்ல வந்தது என்னன்னா, ஏழையோ பணக்காரனோ எந்தவிதப் பட்ட மனுஷனா இருந்தாலும் வித்தியாசம் பார்க்காம, ஒரே மாதிரி கோவில்லே சடங்கு சம்பிரதாயம், பிரார்த்தனை நடக்கறது வாடிக்கை. அப்புறம் வீட்டுக்கு வந்து சௌகரியம்போல விஸ்தரிச்சு காரியங்களை நடத்திக்கத் தடையொண்ணும் இல்லை.

மாப்பிள்ளை அழைப்பு எல்லாம் உண்டோ இல்லியோ? அன்னப் பறவை வச்சு சாரட் வண்டியிலே வந்து ஜம்முனு மாப்பிள்ளை நம்மாத்து வாசல்லே வந்து இறங்கினா எவ்வளவு அம்சமா இருக்கும். ஏற்பாடு செஞ்சிருக்கியோ இல்லியோ?

பகவதி அம்பலப்புழை குடும்பத்துச் சடங்கை வேதத்தில் ஏறின கிட்டாவைய்யன் வீட்டில் ஒட்டி வைக்கப் பார்க்க, பரிதாபமாகத் தோற்றுத்தான் போனாள்.

ஆனால் என்ன? ஹோமம் வளர்த்து புரோகிதர் நீட்டி முழக்கி மந்திரம் சொல்லிக் கன்யாதானம் செய்து கொடுத்தால் தான் கல்யாணமா? இங்கே சந்தோஷமாக அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டிருக்கிற இளசுகள் யாரைக் கேட்டாலும் இல்லை என்றுதான் சொல்வார்கள்.

அவர்கள் உலகம் வேறே. அதுவும் சடங்கு, சம்பிரதாயம், மகிழ்ச்சி, துக்கம் என்று புது வருஷப் பிறப்புக்கு உண்டாக்குகிற மாங்காய்ப் பச்சடி மாதிரி எல்லாம் கலந்திருக்கும். அதிலும் கால ஓட்டத்தில் மாற்றம் ஏற்படும்.

பகவதி போல இவர்கள் வயசர்களான முத்தச்சன்மாரும் முத்தச்சிகளும் ஆகும்போது கடந்துபோன காலத்தை கற்பனையிலாவது தடுத்து நிறுத்த படாதபாடு பட்டு தோற்றுப் போய் இதேபோல் நின்று கொண்டிருப்பார்கள்.

குரிசுப் பள்ளிக்கு வெளியே வேதையன் மட்டும் நின்று கொண்டிருந்தான். உள்ளே இருக்கப்பட்ட கூட்டம் முழுக்க மாப்பிள்ளை வீட்டுக்காரர்களால் நிறைந்தது.

அம்மா, நீங்க உள்ளே போய் விஸ்ராந்தியா ஒரு குரிச்சி போட்டு உட்கார்ந்து எல்லாம் பாருங்க. துர்க்கா பட்டன் உள்ளே தான் இருக்கான். அவன் கவனிச்சுப்பான். ஆகாரம் செஞ்சாச்சு இல்லியோ?

வேதையன் பகவதியைக் கேட்டான்.

ஆச்சு அய்யரே. புட்டும் கடலையும் இட்டலியுமா கொதிக்கக் கொதிக்க பரிமாறித்தான் அண்ணி அனுப்பி வச்சுது. அம்மா தான் புட்டுத் தின்ன மாட்டேனுடுச்சு. கொண்டக்கடலை நவராத்திரிக்கு சுண்டல்லே போடற சமாச்சாரமாம். காலையிலே ஆகாரத்துக்கு உதவாதாம்.

மருதையன் சுகமாக வயிற்றைத் தடவியபடி சிரித்தான். சமைக்கிற எல்லாவற்றிலும் தேங்காயை அரைத்துப் போட்டு ஊரே தேங்காய் எண்ணெய் வாடை அடிக்கிறதை மட்டும் பொறுத்துக் கொண்டால் கண்ணூரும் மலையாளக் கரையும் சுவாரசியமான பிரதேசங்கள் தான்.

பழகிடுத்துன்னா புட்டும் கடலையும் இல்லாம ப்ராதல் இறங்காது தெரியுமோ?

அம்பலப்புழை தேகண்ட குடும்பத்தில் புட்டும் கடலையும் கடந்து வந்ததில்லை என்று பகவதி சொல்ல நினைத்தாள். அந்த ஆசாரம் வேறே. இது வேறே. அண்ணா கிட்டாவய்யன் ஜான் கிட்டாவய்யன் ஆகி மண்ணுக்கு உள்ளும் போய் எத்தனை மாமாங்கம் ஆகிவிட்டது.

அம்மா உட்கார்ந்துக்கட்டும். நான் என்ன செய்யணும்?

பிரின்சிபால் மாஷ் கல்யாணச் சடங்கு முடியற வரைக்கும் மண்டி போட்டு நிக்கணுமாக்கும்.

உள்ளே இருந்து ஒரு பீங்கான் பூ ஜாடியைத் தூக்கிக் கொண்டு வந்த பட்டன் சொன்னான்.

ஐயோ, ப்ரைமரி பள்ளிக்கூட வாத்தியார் கூட அத்தனை நாழிகை மண்டி போட்டு நிக்க வச்சது இல்லியே. தப்பிக்க வேறே வழியே இல்லியா?

ஆமாடா, நீ ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி. உன்னை நம்மூர்லே ஒரு பயல் முட்டி போட வச்சிருப்பானா? சேர்த்து வச்சு இங்கே போட்டுடு. தெய்வத்துக்கு முன்னாடி தெண்டனிட்டா பரம புண்ணியம்.

பகவதி தன் பங்குக்கு மருதையனை சீண்டியபடி மேரி மாதா ஸ்வரூபத்தைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டாள். அப்படியே தரையில் விழுந்து நமஸ்கரிக்கவும் செய்தாள். அவள் வாய் லலிதா சகஸ்ரநாமத்தை உருவிட்டுக் கொண்டிருந்தது.

மருதையனும் பட்டனும் பகவதியைக் கைத்தாங்கலாக உள்ளே கூட்டிப் போனார்கள். மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் முந்தின தினமே அவள் யார் என்று தெரிந்திருந்ததால் மரியாதையோடு எழுந்து வரவேற்றார்கள்.

துடிப்பான ஒரு பையன் முன்னால் வந்து, ‘அம்மா, கொஞ்சம் ஷர்பத் கொண்டு வரச் சொல்லட்டுமா? நாரிங்கா சேர்த்து அருமையா புதுசா பிழிஞ்சது.

பகவதி வேண்டாம் என்றபடி அவனைப் பார்த்தாள். ஏது, இவன் மாப்பிள்ளையா? கம்பீரமாக, உத்தியோகத்துக்குக் கிளம்பின தோதில் வஸ்திரம் தரித்து வெள்ளைக்கார துரை போல் கழுத்தில் ஒரு பட்டியையும் நேர்த்தியாக அணிந்து நிற்கிறானே.

சந்தேகத்தை வாய்விட்டே கேட்டு விட்ட்டாள் அவள்.

மாப்பிள்ளை பிரான்சிஸ் அங்கே இருக்கான் அம்மா. நான் பெஸ்ட் மேன்.

மரியாதையோடு குனிந்து சொன்னான் அந்தப் பதவிசான பையன்.

அவளுக்கும் கொஞ்சம் போல் இங்கிலீஷ் தெரியும். எழுத்துக் கூட்டிப் படிக்க சங்கரன் சொல்லிக் கொடுத்திருக்கிறான். ரெண்டு பேரும் சேர்ந்து அடிப்படை இங்கிலீஷ் புத்தகத்தை முடிக்கவில்லை. அதுக்குள் அவன் ஜீவிதப் புத்தகம் முடிந்தாகி விட்டது.

பெஸ்ட் மேன். நல்ல மனுஷனா? அப்ப மத்தவா எல்லாம்?

அந்தப் பையன் அந்தாண்டை போனபிறகு மருதையன் காதில் விசாரித்தாள்.

அது வந்து, இந்த சடங்குலே மாப்பிள்ளைத் தோழன். இவங்க சம்பிரதாயப்படி மாதாகோவில்லே முதல்லே மாப்பிள்ளை வீட்டார் வந்து பெண் வந்து சேரக் காத்திருக்கணும். காத்திருக்காங்க. அதோ பொண்ணு வீட்டு வண்டி வந்தாச்சு.

தழையத் தழைய உடுத்த வெண்பட்டுச் சேலையும் தலையை மறைத்து மூடிய முந்தானையுமாக தீபஜோதி வண்டியில் இருந்து மெல்ல இறங்கினாள். பகவதிக்குக் கண்ணை நிறைத்தது.

குழந்தைக்கு ஒரு திருஷ்டிப் பொட்டாவது இட்டிருக்கக் கூடாதோ. பட்டா நீயாவது சொல்லக் கூடாதா?

பகவதி பட்டனிடம் புகார் சொல்லத் திரும்ப அவன் போன இடம் தெரியவில்லை.

என் கண்ணே பட்டுடும்போல இருக்குடா மருதையா. அதென்னத்துக்கு வெள்ளைப் புடவை அச்சானியமா? போறது விடு. நம்பூத்ரி வீட்டுக் கல்யாணத்துலேயும் வெளுப்பு வஸ்திரம் போர்த்தித்தான் கூட்டிண்டு வருவா பொண்ணை.

தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டு அவள் நிற்க, தீபஜோதியும் அவளைத் தொடர்ந்து வந்த பரிபூரணமும் பகவதியைப் பார்த்து ஒரு வினாடி நின்றார்கள்.

தீபம் சட்டென்று குனிந்து பகவதி காலில் விழுந்து சேவித்து, ஆசீர்வாதம் செய்யுங்கோ அத்தைப் பாட்டியம்மா என்றாள் பிரியத்தோடு.

அவளை எழுப்பி அப்படியே நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் பகவதி.

என் கண்ணே. சகல சௌபாக்கியத்தோட தொங்கத் தொங்கக் கட்டிண்டு நீ ஆயுசு உள்ள வரைக்கும் ஆத்துக்காரனோடும் குழந்தை குட்டிகளோடும் அமோகமா இருக்கணும். எல்லாம் அந்த அம்பலப்புழை கிருஷ்ணன் பார்த்துப்பான்.

பகவதி கண்ணை மூடி கை குவித்து அம்பலப்புழை அம்பல முற்றத்தில் நின்றாள்.

பரிபூரணமும் அவள் பார்த்த திசை நோக்கி வணங்கி கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.

பக்கத்தில் நின்ற பாதிரியார் குரிசு வரைந்து சகலரையும் ஆசீர்வசித்தபடி மௌனமாகப் புன்னகை செய்தார்.

பிராமண கிறிஸ்தியானிகள் கொஞ்சம் வினோதமானவர்கள். வேரோடு அறுத்து வர முடியாது தலைமுறை தலைமுறையாக நம்பிக்கைகளையும் சம்பிரதாயங்களையும் அங்கேயும் இங்கேயும் கொஞ்சம்போல் கூடவே எடுத்து வருகிறவர்கள். ரகசியமாக ஜாதகம் கூடக் கணிப்பார்கள். இந்தப் பெண்ணுக்கும் செய்திருக்கலாம். இருந்தாலும் அவருக்கு என்ன?

தோழிப் பெண்களும் இதர பெண் வீட்டுக்காரர்களும் கல்யாணப் பெண்ணைத் தொடர்ந்து வர அவர்கள் மெல்ல ஊர்வலமாக சபையைச் சுற்றினார்கள். பிள்ளை வீட்டுக்காரர்கள் எல்லோரையும் வரவேற்று உபசார வார்த்தை சொன்னார்கள்.

பகவதியும் மருதையனும் ஓரமாக காற்றோட்டமாக ஒரு பெரிய ஜன்னலுக்குக் கீழே உட்கார்ந்து நடக்கிற காரியங்களை சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பகவதிக்கும் பெண் கூட நடந்து போய் வாரணம் ஆயிரம் பாட ஆசைதான். அவள் கல்யாணத்தின்போது அரசூர்க்காரி நித்திய சுமங்கலிக் கிழவி சுப்பம்மாள் பாடியது.

சுப்பம்மாள் சொர்க்கத்தில் அந்த இனிமையான கானத்தை ஆவர்த்தித்து பாடிக் கொண்டே இருக்கட்டும்.

பாதிரியார் கையை அசைத்து சமிக்ஞை காட்ட குரிசுப் பள்ளி சங்கீத கோஷ்டி வாத்திய சங்கீதத்தில் இனிமையாக ஏதோ வாசிக்க ஆரம்பித்தது. பகவதி மருதையனைப் பார்த்தாள்.

என்னம்மா, நடேச பண்டிதர் நாதசுவரம் இல்லாம கல்யாணமான்னு பார்க்கறீங்களா?

அவள் காதில் மட்டும் கேட்கிற தோதில் சொல்லி மருதையன் சிரித்தான். கள்ளன், அவன் ஜாதியைச் சொல்லவில்லை. நிஜமாகவே இந்தப் பிள்ளை மனதை அவள் எப்படியோ படித்து விட்டிருக்கிறான்.

அம்மா, அவங்க பியானோவிலேயும் பிடில்லேயும் இப்போ வாசிச்சிட்டு இருக்கறது வேக்னர்னு ஒரு இசைமேதை ஸ்வரப்படுத்தின கானம். பிரார்த்தனை இனிமே ஆரம்பமாகும்.

உனக்கு எப்படித் தெரிஞ்சுது இதெல்லாம்?

பகவதி கேட்க, சட்டைப் பையில் இருந்து நாலாக மடித்த ஒரு கடிதாசை எடுத்தான் மருதையன். பகவதி வாங்கிப் பார்த்தாள். அச்சு எழுத்தில் ராமநவமி நோட்டீசு மாதிரி வரிசையாக சடங்கு சம்பிரதாய விவரம் அதில் கண்டிருந்தது. ரெண்டு பக்கமும் றெக்கை கட்டிப் பறக்கிற கந்தர்வர்களைத்தான் காணோம்.

அத்தை, நானும் இங்கேயே நின்னுக்கட்டா?

பகவதி நிமிர்ந்து பார்த்தாள். தெரிசா புன்னகையோடு அவள் கையைப் பற்றிக் கொண்டாள்.

சாரதே நீ அங்கே போய் அவாளோட உக்கார்ந்து பிரார்த்தனையும் மத்ததும் பண்ணலியா? மண்டி போட சிரமம்னா வேணாம்.

சலுகை காட்டுகிறவளாக பகவதி சொல்ல தெரிசாவுக்கு சிரிப்பு வந்தது.

இல்லே அத்தை. இது கத்தோலிக்க சர்ச். நான் ப்ராட்டஸ்டண்ட். நெறைய வித்தியாசம் இருக்கு எல்லாத்திலேயும். அதான் இங்கேயே நின்னுக்கறேன்.

அது என்னடி, கிறிஸ்து மகரிஷிக்கு தானே நீயும் உங்காத்துக்காரனும் அஷ்டோத்ரம் சொல்றது? வேதையனும் அதே ஸ்வாமிக்குத்தானே ஆராதனை?

அம்மா, சாவகாசமா அதை எல்லாம் சொல்றேன். தெரிசா அக்கா இங்கே உக்காருங்க.

மருதையன் தான் உட்கார்ந்திருந்த குரிச்சியை தெரிசா உட்கார ஒழித்துக் கொடுத்து விட்டு, பகவதி பக்கம் நின்றபடி முன்னால் பார்த்தான்.

சங்கீர்த்தனம். பாடல் பதினெட்டு.

சின்னக் குருக்கள் மாதிரி துறுதுறுப்பான ஒரு கொச்சு பாதிரிப் பையன் சொல்ல எல்லாரும் பாட ஆரம்பித்தார்கள். அது முடிந்து பாதிரியார் தாலி எடுத்துக் கொடுக்க மாப்பிள்ளைப் பையன் தீபஜோதி கழுத்தில் முடிச்சுப் போட்டான். கூடவே தம்பதிகள் மோதிரத்தைக் கழற்றி ஒருத்தருக்கு ஒருத்தர் மாற்றிக் கொண்டதையும் பகவதி கவனித்தாள்.

தாலி கட்டும்போது மேளத்தை முழக்கி அமர்க்களப்படுத்த வேண்டாமா? என்னமோ போ. இந்த ஆசாரம் இப்படின்னா நான் என்ன சொல்ல இருக்கு?

கேட்டபடி வேகமாக முன்னால் போன பகவதி முன் வரிசைப் பெண் யாரிடமிருந்தோ ஒரு வெள்ளித்தட்டை வாங்கி அதில் இருந்த பூக்களை ஓரமாக இட்டாள்.

ஜலம். கொஞ்சம் ஜலம்.

யாரோ பன்னீர்ச் செம்பைக் கவிழ்த்தார்கள்.

பட்டா, கொல்லூர் குங்குமம் சதா மடியிலே வச்சிருப்பியே. எடு.

பக்கத்தில் நின்ற பட்டன் ஒரு வினாடி தயங்கி விட்டு எடுத்துக் கொடுத்தான்.

குங்குமத்தைக் கரைத்த ஆரத்தித் தட்டை பரிபூரணத்திடம் தரச் சொன்னாள் பகவதி.

ஏண்டியம்மா, மசமசன்னு நிக்காம மாப்பிள்ளை, பொண்ணுக்கு ஆலத்தி எடுங்கோ. வேறே யாராவது சேர்ந்துக்கலாம்.

தெரிசா முன்னால் வந்து புடவையை இழுத்துச் செருகிக் கொண்டு ஆரத்தித் தட்டை பரிபூரணத்தோடு பற்றிக் கொண்டு மெல்ல ஆல வட்டமாகச் சுற்றினாள்.

சீதா கல்யாண வைபோகமே.

பகவதியின் குரல் கணீரென்று இனிமையாக குரிசுப் பள்ளி சுவர்களில் எதிரொலிக்க ஆரம்பித்தது.

(தொடரும்)

Series Navigation32 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 32 >>

This entry is part [part not set] of 39 in the series 20110410_Issue

இரா.முருகன்

இரா.முருகன்