சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 6

ராமச்சந்திர கோபால்


இந்த பாடங்களில் இலக்கணத்தையோ அல்லது படிப்பதையோ நான் முக்கியத்துவம் கொடுத்து எழுதப்போவதில்லை. இந்த சமஸ்கிருத பாடங்களில் சமஸ்கிருதத்தில் பேசுவதையும் கேட்பதையுமே முக்கியத்துவம் கொடுக்கபோகிறேன்

ஆகவே நீங்கள் இந்த பாடங்களை கற்றுகொள்ளவேண்டுமென்றால் இரண்டு வேலைகளை செய்யவேண்டும். ஒன்று இந்த வாக்கியங்களை உரத்து படிக்கவேண்டும். மௌனமாக படிக்கக்கூடாது. உரத்து படியுங்கள். நீங்கள் பேசுவது உங்களுக்கு கேட்கவேண்டும். இரண்டாவது யாராவது உங்களுடன் இணைந்துகொண்டால், அவர் பேச நீங்கள் கேட்கவேண்டும். அவர் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் கூற முயற்சி செய்யவேண்டும். அந்த கேள்விகளையும் பதில்களையும் நான் இங்கே எழுதப்போகிறேன். இதில் முக்கியம் இந்த வார பாடத்தை அடுத்த வாரம் படித்துக்கொள்ளலாம் என்று இருக்கக்கூடாது. ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து நிமிடமாவது இதற்காக செலவழித்தால் வெகு விரைவில் பேச ஆரம்பித்துவிடலாம். ஒரு வாரத்தில் குறைந்தது அரை மணிநேரமாவது இதற்கு செலவழியுங்கள். உங்கள் குழந்தைகளுடனோ அல்லது கணவருடனோ இந்த வாக்கியங்களை பேசி சேர்ந்து படித்தால் வெகு விரைவில் உங்களுக்கு சமஸ்கிருதம் எளியதாகும்.

இப்போது சிலவாக்கியங்களை பார்ப்போம்

मम नाम राम:
மம நாம ராமஹ
என்னுடைய பெயர் ராம

எல்லா ஆண்களது பெயர்களும் அஹ என்றுதான் முடியும். உதாரணமாக ராம என்பது ராமஹ என்று முடியும். சிவ என்பது சிவஹ என்று முடியும். தசரதஹ, பீமஹ, பிரசன்னஹ என்றுதான் முடியும்.
பெண்களது பெயர்கள் ஆ எழுத்திலோ அல்லது இ எழுத்திலோ முடியும். சீதா, லதா போன்றவையோ அல்லது பார்வதி, லட்சுமி என்றோ முடியும்.

ஆகவே உங்களது பெயர் உதாரணமாக சுப்ரமணியன் என்று இருந்தால் சமஸ்கிருதத்தில் சுப்ரமண்யஹ என்றுதான் சொல்லவேண்டும். இது விதி. ஆனால், இந்தியரல்லாத பெயர்களை கூறவேண்டுமென்றால் அதற்கு தனி விதி உண்டு. அதனை பிறகு பார்ப்போம்.

முதலில் இந்த வாக்கியங்களை எழுத்து கூட்டி படியுங்கள். பிறகு சத்தமாக பேசுங்கள்.

मम नाम राम:

मम नाम सीता

मम नाम शॅखर:

मम नाम उमा

मम नाम पार्वती


இதே போல உங்கள் பெயரை இவ்வாறு சொல்லுங்கள்.


இப்போது மகன் மகள் ஆகியோரை பார்ப்போம்

मम पुत्र: माधव:
மம புத்ரஹ மாதவஹ
என்னுடைய மகன் மாதவன்

मम पुत्रि विजया
மம புத்ரி விஜயா
என்னுடைய மகள் விஜயா

இதே போல உங்களுடைய மகன் மகள் பெயரை போட்டு இந்த வாக்கியங்களை உரத்து சொல்லுங்கள்.


भर्ता பர்த்தா என்றால் கணவர்

இப்போது வாக்கியமாக பார்ப்போம்

मम भर्ता विष्णु:

என்ன படித்தீர்கள்?

மம பர்த்தா விஷ்ணுஹு என்று படித்திருந்தால் மிகச்சரியாக படித்திருக்கிறீர்கள். : என்ற எழுத்து எந்த எழுத்தின் பின்னால் வருகிறதோ அந்த எழுத்தின் உயிரெழுத்தை தொடரும்.

या: – யாஹா
जि: = ஜிஹி
वासु: – வாஸுஹு

இவ்வாறு கடைசி உயிரெழுத்தின் ஒலியை தொடரும்.

சரி திரும்பவும் வாக்கியங்களுக்கு வருவோம்.

भार्या பார்யா – என்றால் மனைவி

मम भार्या पद्मा

மம பார்யா பத்மா


தந்தை தாயார் பற்றி சொல்லுவோம்.

पिता – பிதா என்றால் தந்தை
माता – மாதா என்றால் தாய்

வாக்கியங்களாக சொல்லுங்கள்

मम पिता विजय:
मम माता मल्लिका


भ्राता – ப்ராதா என்றால் சகோதரர்
स्वसा – ஸ்வஸா என்றால் சகோதரி


मम भ्राता ____
मम स्वसा ____

நீங்களாக வாக்கியம் எழுதி உரத்து சொல்லுங்கள்

அடுத்த வாரம் பார்ப்போம்.

Series Navigation

This entry is part [part not set] of 35 in the series 20100801_Issue

ராமச்சந்திர கோபால்

ராமச்சந்திர கோபால்