விஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தேழு

இரா.முருகன்


1916 ஜனவரி 16 ராட்சச வருஷம் தை 3 ஞாயிற்றுக்கிழமை

வைத்தாஸே, இங்கே இப்போ விடிகாலை ஆறு மணிதான் ஆறது. சீக்கிரமே முழிப்ப்புத் தட்டிடுத்து. இன்னிக்கு ஒரு வேலையா வெளியிலே போக வேண்டி இருக்கு. சொன்னேனே, இந்த ஜேம்ஸானவன் என்ன மாதிரியான விநியோகம் பண்றான், இதோட அபிவிருத்தி எப்படி இருக்கும், கைக்காசு போனா உடுதுணியாவது மிஞ்சுமா, சர்க்கார் உத்யோகஸ்தன், போலீஸ் இப்படி எவனெவன் பிருஷ்டத்தைத் தாங்கி விருத்தியாகணும் எல்லாம் கொஞ்சம் போலவாவது தெரிஞ்சுக்கணுமே. அவனோடு பல்லி மாதிரி ஒட்டிண்டு ஒருநாள் முழுக்க இருந்து கவனிச்சா எல்லாம் கிரமமா மனசில் பதியும்னு நப்பாசை. எட்டு மணிக்கு அவன் வந்ததும் கிளம்ப வேண்டியதுதான்.

இன்னிக்கும் தொழிலுக்குப் போகலை. ரஜா. ஞாயிற்றுக்கிழமை உழைக்கிறது தப்பு என்று எந்த வேதத்திலேயோ சொல்லியிருக்காம். இங்கே தொண்டமான் முதல்கொண்டு தோட்டி வரைக்கும் சனிக்கிழமை ராத்திரியே முழுக்க சுதியேத்திக் கொண்டு உருண்டு பிரண்டு ஸ்திரி சுகம் அனுபவிச்சபடி ராப்பொழுதைக் கழித்துவிட்டு ஞாயித்துக்கிழமை முழுக்க முழுக்க சிரம பரிஹாரம் பண்ணிக் கொள்வது வழக்கம். அதே ரீதியிலே, இன்னிக்கு தொழில் செய்யாம நானும் விஸ்ராந்தியா இருக்கப் போறேன்.

எனக்கேது தொழில்னு பார்க்கறியா? பிச்சை எடுத்தால் என்ன அதுவும் ஒரு வேலை தானே. யாரையாவது அடித்துப் பிடித்து அடிமடியில் கைபோட்டு மூத்ரம் நனைஞ்சு நாறும் காசைப் பறிச்சாலோ, நாலு பவுன் ஒட்டியாணத்தையோ தங்கச் சங்கிலியையோ ஸ்தூலமான ஸ்திரி உடம்பில் இருந்து வியர்வைக் கசகசப்போடு உருவி எடுத்துண்டு ஓடினாலோ அதெல்லாம் தான் திருட்டு. வாங்கோ துரைகளே, ஒரு பென்னி, ரெண்டு பென்னி தர்மம் பண்ணி புண்ணியம் தேடிக்க வாங்கோடீன்னு துரைசானித் தேவிடிச்சிகளே கூவி அழைக்கறதுலே கபடம் ஏது உண்டு சொல்லு?

இந்தப் பிரதேசத்திலே சனிக்கிழமை ராத்திரி இவன்கள் கொட்டமடிப்பான்கள் பார், அதைக் காண ஆயிரம் கோடிக் கண் வேணும். சாராயம் விற்கிற கடைகளில் எல்லாம் சட்டமாக முக்காலி போட்டு ஆரோகணித்து உட்கார்ந்து குப்பி குப்பியாக மாந்தித் தள்ளிக் கொண்டிருப்பார்கள். பெண்பிள்ளைகளும் அத்தனைக்கு லஜ்ஜையில்லாமல் கூடச் சேர்ந்து குடிக்கிறதும் மெல்லப் புகுந்து கொண்டிருக்கு. அவாளும் மனுஷ ஜன்மம் தானே. சந்தோஷமாக இருக்கப்படாதா?

நேற்றைக்கு ராத்திரி பனி கவிந்தபடிக்கு இருட்டு இறங்கினது. நான் கரி அடுப்பில் வாட்டின நாலு ரொட்டியும் கொஞ்சம் உருளைக்கிழங்கும் வெங்காயம் வதக்கியதுமாக சாப்பிட்டு விட்டு கம்பளியை இழுத்துப் போர்த்திக் கொண்டு அக்கடா என்று டவர் பக்கம் உட்கார்ந்திருந்தேன்.

இந்த நேரத்திலும் ஒரு மெழுகுதிரியை ஏற்றி வைத்துக்கொண்டு ஏசுநாதர் படத்தையோ யுத்தத்தில் நான் தரித்த குப்பாயத்தையோ காட்டி, காலை பாதி ஒடிந்து போனதாக ஜோடனை செய்து மறைத்து நாலு காசு வாங்கலாம் தான். ஆனால் ராத்திரியிலும் தொழில் நடத்தி இதுவரை பழக்கம் இல்லை.

மேலும், துஷ்ட சக்திகள் நடமாட்டம் இருட்டு கூடக்கூட அதிகமாகி சேர்த்த காசை எந்தத் தடியனாவது பிடுங்கிக்கொண்டு கொட்டையில் உதைத்துக் கூழாக்கி விரட்டி விடலாம். என்னத்துக்கு வம்பு? வேண்டாம் என்று நதிக்கரைக் காற்று வாங்கிக் கொண்டு இருந்தேன்.

பிக்பென் என்கிற ஒரு மணிக்கூண்டு கடியாரம் பத்திக் கேட்டிருக்கியோ? லோகப் பிரசித்தம். லண்டன் பட்டணத்துக்கே கேட்கிற தோதில் காண்டாமணி முழக்கி நேரத்தை ராப்பகலாக தெரிவிக்க்கும் இது. இதுக்காகவே ஒரு பிரம்மாண்டமான கோபுரத்தை சர்வேஸ்வரனான மூணு தலைமுறைக்கு முந்திய வெள்ளைக்காரச் சக்கரவர்த்தி எழுப்பி லோகம் இருக்கிற மட்டுக்கும் கணகணவென்று மணி அடித்துக் கொண்டே இருக்க வைத்துப் போனான்.

பாரத தேசத்து புடுங்கி மகாராஜாக்களும் ஜமீந்தார் தாயோளிகளும் சொந்த மணியடித்துக் கொண்டு ஒரு குடி விடாமல் புகுந்து புறப்பட்டு போகத்துக்காக ஊர் மேய்கிறபோது இங்கே நடந்த சத்காரியம் இது.

பிக்பென் பக்கமாக, டவர் பாதாள ரயில் ஸ்டேஷன் மறுவாசலில் தேம்ஸ் நதி தீரம். அங்கே இப்படிக் காத்தாடப் பெஞ்சில் உட்கார்ந்திருந்தபோது ஜேம்ஸ் வந்து சேர்ந்தான். அவன் அங்கே என்னை சந்திப்பதாக சாயந்திரமே ஏற்பாடு.

இது முட்டை வியாபாரம் பற்றி தெரிஞ்சுக்க இல்லை. நானும் நாடகம் பார்க்கணும் என்று நப்பாசை. ஸ்ட்ராண்ட் பேட்டை கொட்டகையில் நடக்கிற நாடகத்தில் தான் ஒரு சின்ன வேஷம் கட்டி ஆடுகிறதாகவும் அது காரணமாக தன்னோடு கூட வருகிற ஒரு நபருக்கு இலவசமாக அனுமதி என்றும் சொல்லியிருந்தான். அப்படியாகத்தான் நான் ஓசிச் சீட்டில் கூத்து பார்க்கப் போய்ச் சேர்ந்தேன்.

பிக்பென் சுநாதமாக ஏழு அடிக்கிற நேரத்தில் ஒரு பாதிரி வந்து பக்கத்தில் நின்றான். பக்கத்து விளக்குக் கூண்டில் மங்கின வெளிச்சத்தில் நான் அந்த மனுஷரைப் பார்த்து விட்டு மரியாதை நிமித்தம் எழுந்து நின்று கர்த்தருக்கும் சர்வ மங்களேஸ்வரி மாதாவுக்கும் முணுமுணுவென்று ஸ்தோத்ரம் சொன்னேன். உங்கம்மா லோலா சொல்லிக்கொடுத்தது. ஞாயிற்றுக்கிழமை அவள் மாதாகோவிலுக்குப் போகும்போது கூடப்போய் இருந்து, மற்றவர்களோட வாய் பார்த்து சும்மா இராமல் சுபாவமாக நடக்க இந்த வழக்கம் வேண்டியிருந்தது.

ஸ்தோத்ரமுமாச்சு மண்ணாங்கட்டியுமாச்சு, கிளம்பு போகலாம்.

அவன் வாயைத் திறந்தாலே விஸ்கி வாசனை மூக்கில் குத்தியது.

பாதிரி சொல்கிற வார்த்தையா இது? முட்டக் குடித்து விட்டு வந்த பாவாடை சாமியா இது? இந்த ஊரிலே இப்படியும் பிரகிருதிகள் நடமாடுவது உண்டோ?

நான் மலைத்துப் போய் நிற்க பாதிரி சிரித்தான். அட, ஜேம்ஸ் இல்லியோ இது?

கொட்டகைக்குப் போய் வேஷம் தரித்துக் கொள்ள நேரம் எடுக்காமல் வரும் வழியிலேயே போட்டுக் கொண்டு போய்விட்டால் சட்டுப் புட்டென்று வேலையை ஆரம்பித்து விடலாம் என்றான் ஜேம்ஸ். ஆனாலும் அவன் வீட்டில் இருந்து கிளம்பும்போது பார்த்திருந்தேன். சாக்குப்பையும் கையுமாக நாலு மனுஷாள் போல் சாமானிய உடுப்போடு தான் கிளம்பிப் போனான். இந்தக் குப்பாயத்தை பையில் சுருட்டி எடுத்துப்போய் வெளியே எங்கேயாவது வைத்து மாட்டிக்கொண்டு, முகத்தில் மாவை ஈஷிக்கொண்டிருக்கலாம். கூத்தும் குடியும் மனுஷனை எப்படி எல்லாம் கோமாளியாக்கி குரங்காட்டம் போடச் சொல்றது பார்.

நாடகமும் கூத்தும் கச்சேரிப் பாட்டுமான கிறக்கடித்துப் போடுகிற வியவகாரங்களில் ஏதாவது உனக்கு சிரத்தை ஏற்பட்டிருந்தால் மேற்படி சுகத்தை அளவோடு வச்சுக்கோ. குடி விஷயத்திலும் ஜாக்கிரதை தேவை. ஸ்திரி விஷயம் குறித்து உனக்கு புத்தி சொல்ல எனக்கு கிஞ்சித்தும் தகுதி இல்லை.

எப்படி இருக்கு இந்த பாதிரி ஜோடனைன்னு கேட்டான் ஜேம்ஸ். ஓஹோன்னு தலையாட்டினேன். பாதிரி எக்கேடும் கெட்டுப் போகட்டும். நாளைக்கு முட்டை விற்கிற தொழில் ரகசியம் சொல்லித் தரப் போறவன் ஆச்சே.

போகலாம் வா, நேரமாச்சுது என்றபடி அவன் பாதாள ரயிலுக்குப் படியிறங்கினான்.

சரியென்று கூடப் போனேன். அவனோடு கூட பாதாள ரயில் ஏறி அரை மணி நேரம் போல் சவாரி செய்து ஏர்ள்ஸ் கோர்ட் என்ற பிரசித்தமான லண்டன் பேட்டைக்குப் போய்ச் சேர்ந்தோம். மேற்படி ரயிலிலே போக அவன் தான் காசு கொடுத்து எனக்கும் சேர்த்து சீட்டு வாங்கினது. திரும்பும்போது மறக்காமல் நான் பிரதியுபகாரமாக அவனுக்கும் என் காசில் சீட்டு எடுக்க வேண்டும் என்று மனதில் முடிபோட்டு வைத்துக் கொண்டேன்.

மனசு முழுக்க சிண்டும் சிடுக்குமாக எத்தனை முடி. எதுக்குப் போட்டோம் எப்போ போட்டோம், என்னத்தை உள்ளே வச்சு அடைச்சிருக்கோம்னு நினைவு கூட இல்லாம, அத்தனையையும் ஒண்ணொண்ணா அவிழ்த்து முடிக்கிறதுக்குள் ஆயுசே முடிஞ்சுடும்டா குழந்தே.

ஏர்ள்ஸ் கோர்ட்டில் இறங்கி அங்கே ஊர் முச்சூடும் மொய்க்கிற ஒரு சாராயக் கடையில் படியேறினான் ஜேம்ஸ். ஐநூறு வருஷமாக அங்கேயே இருக்கப்பட்ட பாரம்பரியம் கொண்ட கடையாம். தாத்தா குடிச்ச குவளையிலே தளும்பத் தளும்பக் குடிச்சே வம்சம் வளர்த்திருக்கான்கள். எதுக்கெல்லாம் நாலு, எட்டு தலைமுறைன்னு பெருமைப்படறதுக்கு ஒரு அளவே கிடையாது போல் இருக்கு.

நான் ஒரு குவளை பியர் மட்டும் வாங்கிக் கொண்டேன். அதுக்கும் அவன் தான் காசு எடுத்துக் கொடுத்தான். அவனும் பிராந்தி குடித்து தாகசாந்தி செய்து கொண்டான். இப்படி இன்னும் நாலு இடத்தில் விடையாறினால், இவன் நடிக்கிற நாடகம் இன்னிக்கு ஆரம்பிச்ச மாதிரிதான். ஒரு வேளை ராத்திரி முழுக்க நடக்கிற தமிழ் பிரதேச நாடகம் வள்ளித் திருமணம் போலவோ இதுவும்?

நேரமாச்சு என்று நான் மெல்லச் சொன்னேன்,

என்னத்துக்கோசரம் கவலைப்படறே. ராத்திரி வயிறு எக்களிக்க உண்டு பானம் பண்ணி வந்து சாவகாசமாகத்தான் திரையைத் தூக்கற வழக்கம். போய்ச் சேர்ந்து உன்னை முதல் வரிசையிலே உட்கார வைக்க வேண்டியது என் பொறுப்பு.

உற்சாகமாக என் தோளில் தட்டினான் பாழாய்ப் போன அந்த ஜேம்ஸ்.

அந்த மிடாக்குடியன் ஒரு உத்திரிணி மாத்ரம் ஆசமனீயம் பண்ணினதுபோல் அமெரிக்கையாக நடந்து வர, ஒரெ ஒரு குவளை லேசான லாகிரி வஸ்துவை உள்ளே இறக்கின நானோ பரமானந்த சாகரத்தில் மூழ்கி மிதந்தபடி வந்தேன் என்பது நிஜம். வயசானால், லாகிரி லேசும் கடினமும் எல்லாம் ஒண்ணுதான். மனுஷனனைப புரட்டிப் போட்டுக் குப்புறத் தள்ளிடும் பார்த்துக்கோ.

ராத்திரியும் புகை மாதிரி மேலே கவிகிற பனியும் ஆள் ஓய்ந்த அகலமான தெருக்களும், ரெண்டு வசத்திலும் பிரம்மாண்டமாக எழும்பி வெளிச்சத்தில் மினுக்கிக் கொண்டிருக்கிற கட்டிடங்களும், அவ்வப்போது ஓடி வந்து கடந்து போகிற சாரட் வண்டிகளுமாக ஒரு பூலோகம் கடந்த சூழ்நிலை. இந்த சுவர்க்கத்தை அனுபவிக்கவே பிறவி எடுத்திருக்கேன் என்று மனதில் ஒரு சுகமான நினைப்பு. பாதரட்சை அணிந்த கால் தரையில் பாவாமல் அலைபாய்ந்து, மனசும் லேசாகி, வாடா பறக்கலாம் என்று நைச்சியமாகச் சிரிக்கிற பிரமை.

வாயில் பாட்டு சரமாரியாக வந்தது. சாமஜ வர கமனாவும், சத்திய ஸ்வரூபன் ஏசு பிறந்தாரே பெத்லஹேமில் நித்திய ஜோதியாய் நின்று வளர்ந்தாரேயும் சுவரம் தப்பினாலும் குரல் அடங்காது பீறிட பாடிக்கொண்டே ஜேம்ஸ் பாதிரியின் தோளைத் தாங்கிப் பிடித்தபடி நடந்தேன்.

ஒரு மாதாகோவில். பூர்வீகர்கள் ஏர்ள்ஸ் கோர்ட் சாராயக்கடை ஸ்தாபிப்பதற்கும் முன்னால், ஒரு ஏழெட்டு நூறு வருஷம் முன்னால் ஏற்படுத்தினது போல கல் சுவரில் அங்கங்கே காட்டுச் செடி முளைத்தது. கதவு அடைச்சுப் பூட்டி வைத்திருந்தது.

இங்கே இன்னும் பிரார்த்தனை எல்லாம் நடக்கிறதா ஜேம்ஸே என்று விசாரித்தேன்.

போய்ப் பார்த்துத்தான் சொல்லணும்.

ஜேம்ஸ் என்னை மாதாகோவில் வாசலில் ஓரமாக நிறுத்தினான். உள்ளே போய் ஒரு வினாடி பிரார்த்தித்து விட்டு ஸ்ட்ராண்ட் பேட்டைக்கு போக வேண்டியதுதான்.

ராத்திரியிலே அதுவும் லாகிரி பானம் செய்த பிற்பாடு தொழுகையா?

அட, என்னமோ தோணறது. ஞாயிற்றுக்கிழமை காலையில் அசந்து தூங்கி பிரார்த்தனைக் கூட்டம் போகிற வழக்கமே அற்றுப் போனது. இப்படி மனசு உத்தரவிடுகிறபோதாவது தொழுதுவிட்டு வந்துடறேன்.

ஒவ்வொரு மனுஷனும் ஒவ்வொரு விதம். கோவில் பூட்டி வச்சிருக்க மாட்டார்களோ? ஜேம்ஸைக் கேட்டேன். இரும்புக் கதவு வழியாகவாவது பார்த்து ஹரஹரன்னு கன்னத்தில் போட்டுக்க இதென்ன கபாலீஸ்வரன் கோவிலா?

அதெல்லாம் திறந்து தான் இருக்கும். உனக்கு எதுக்கு வீண் கவலை? நாடகம் ராத்திரி பத்து மணிக்குத் தொடக்கம் என்றான் ஜேம்ஸ் என் மனசைப் படித்த மாதிரி. அவன் ராத்திரிக்கு ஆடப்போவது இங்கிலீஷ் பாஷை வள்ளித் திருமணமே தான் போல் இருக்கு.

ஜேம்ஸ் கோவிலைச் சுற்றிப் பின்னான் நடந்தான். போகும்போது என்னைப் பார்த்துச் சொன்னான் – உமக்குப் பாட வேண்டும் போல் இருந்தால் நீர் பாட்டுக்குப் பாடும். தேவகீதமாக இருக்கிற வரையில் சந்தோஷமான விஷயம்தான்.

அந்நியர் நடமாட்டத்துக்கு இடைஞ்சலாக இருக்குமே என்று சொன்னேன்.

இதெல்லாம் குருமார்கள் இருக்கப்பட்ட பிரதேசம். வாய்விட்டுப் பாடும். யாராவது எதிர்ப்பட்டுக் கடந்து போனால் பாடும். உமக்கு ஸ்தோத்ரம் சொன்னால் பாடும். ஒரே நிமிஷம் தான். போனேன் வந்தேன்னு வந்துடறேன்.

அவன் மெல்ல நாலு திசையும் பார்த்தபடி உள்ளே போனான். ராத்திரி வெளிச்சமும் இருட்டும் மாறி மாறி விளையாட்டுக் காட்டுகிற கோவில் உள்பாதையில் அந்த ஒற்றைக்கை பாதிரி மெல்ல நடக்கிறது பார்க்க நூதனமாக இருந்தது.

நான் விட்ட இடத்தில் இருந்து சாமஜ வரகமனாவைப் பாட ஆரம்பித்தேன். , கூடவே சுவர்க்கோழியும் சுருதி பேதமாக இரைய ஆரம்பித்ததால் நிறுத்தினேன். தூரத்தில் பிக்பென் சத்தமாக முழங்கினது காதில் விழுந்தது. ஒற்றை மணி. எட்டரையோ ஒன்பதரையோ தெரியலை.

ஜேம்ஸ் மாதாகோவில் உள்ளே இருந்து ஓட்டமும் நடையுமாக வந்தான். போகலாம் வா என்றபடி அவன் மூட்டையைக் கைமாற்றினான். ஒரு நிமிஷம் பிடிச்சுக்கோ. இடுப்பு வாரை இறுகக் கட்டிக்கறேன் என்றான். பொணம் கனம் கனத்தது அந்த மூட்டை. எல்லாம் ஒப்பனை பண்ணிக்கற சாதனங்களும் வேறே உடுப்புகளுமாம்.

நாடகக் கொட்டகை பக்கம் இருந்த வைக்கோல் சந்தைப்பேட்டை சந்துக்குப் போய்ச் சேர்ந்தபோது ரெண்டு தாணாக்காரர்கள் என்னைத் தடுத்து நிறுத்தி மூட்டையில் என்ன இருக்கு என்று விசாரித்தார்கள். ஜேம்ஸ் கொடுத்த மூட்டையை இன்னும் நானே சுமந்து கொண்டு வந்திருக்கிறேன் என்பது அப்போது தான் போதமானது.

தான் பாதிரி மற்றும் உதிரி வேஷங்களில் நடிப்பதாகவும், ஒற்றைக் கையோடு ஒப்பனைக்கான ஜாமான்களை சுமந்து போக கஷ்டமாக இருப்பதால் அவனுக்கு சிநேகிதனான நான் கூடவே அதை எல்லாம் தூக்கிக் கொண்டு வருவதாகவும் சொன்னபோது நானும் பலமாக ஆமோதித்தேன். தாணாக்காரர்கள் விலகிப் போனார்கள். அர்த்த ராத்திரிக்கு ஒரு நாழிகை முன்னால் ஜேம்ஸுக்கு அடைப்பக்காரன் என்று அடையாளம் கிடைக்க என்ன கொடுத்து வச்சிருந்தேனோ.

கொட்டகையில் நுழைந்தபோது முதல் மணி அடித்திருந்தது.

ஜேம்ஸ் ரொம்பத் தாமதம் நீ. ரெண்டாம் சீன்லே கூட்டத்துலே முன் வரிசையிலே நிக்கணும். எதுக்கு பாதிரியார் குப்பாயம்? தப்பாப் போட்டுக்கிட்டு வந்திட்டியா? யுத்தத்திலே கை போன ரோமானியப் போர்வீரன் வேஷம் ஆச்சே.

யாரோ சடசடவென்று அவனுடைய பாதிரி குப்பாயத்தை அவிழ்த்து அவன் உள்ளே தரித்த கோவணாதிகளோடு நிற்க ராணுவ வீரன் உடுப்பை மாட்டினார்கள். நான் பாதிரி குப்பாயத்தை கவனமாகச் சுருட்டி என் தோளில் தொங்கின பையில் வைத்தேன். அதில் நங்கென்று கை இடிக்க ஏதோ உலோக வஸ்து. ரோமாபுரி வீரன் சாராயம் குடிக்கிற கோப்பையாக இருக்குமோ என்னமோ.

முதல் வரிசை, ரெண்டாம் வரிசை எல்லாம் நிறைந்து கிடந்ததால் நான் கடைசி வரிசையில் தான் உட்கார்ந்தேன்.

ஒரு எழவும் புரியலை. ஆட்டமும் பாட்டும் சுவாரசியமாக இருந்தது வாஸ்தவம்தான். கதை புரிந்தால் இன்னும் ரசமாக இருக்குமே?

அது சரி, காசு கொடுத்தா இதையெல்லாம் பார்த்து சந்தோஷப்பட வந்திருக்கிறேன்? இனாமாகக் கிடைத்ததுக்கு இதுவே ஜாஸ்தி இல்லையோ.

ஆமா, மேடையில் ஜேம்ஸ் எங்கே? ஊஹும் ஆளையே காணோம். கடைசியில் நாடகம் முடிந்து படுதாவை இறக்க நாலு நிமிஷம் முந்தி யுத்தத்தில் அடிபட்ட படைவீரர்கள் பரிதாபமாகப் பாடிக்கொண்டு போகிற காட்சி.

சொல்லப் போனால் மகா யுத்தத்தில் அடிபட்ட நான் கூட அந்தக் கூட்டத்தில் போக வேணும். இன்னும் நன்றாகவும் பாடுவேன். சாமஜ வரகமனா, ஹிந்தோளத்தில்.

முட்டை வியாபாரம் விருத்தியாகட்டும். நாடகம் எதுக்கு?

கூட்டத்தில் கடைசியாக ஜேம்ஸும் போவதைக் கண்டு புளகாங்கிதமடைந்து அதி உச்சத்தில் கரகோஷம் செய்தேன். பக்கத்தில் இருந்தவர்கள் என்னை விநோதமாகப் பார்த்தார்கள். அவங்களுக்கு என்ன போச்சு?

நாடகம் முடிந்து ரோமாபுரி வீரன் உடுப்பை உள்ளேயே வைத்து களைந்துவிட்டு திரைக்குப் பின்னால் இருந்து எட்டிப் பார்த்து என்னைக் கூப்பிட்டான் ஜேம்ஸ். அவனுடைய பையில் முன்வசத்தில் ஒரு திறப்பில் வைத்திருந்த கால்சராயையும் குப்பாயத்தையும் மாட்டிக் கொண்டு வா கிளம்பலாம் என்றான்,

நாடகம் பார்க்க வந்து போகிறவர்கள் சாரட் வண்டிகளில் ஏறிப் போய்க் கொண்டிருந்தார்கள்.

அதில் ஒரு வண்டியில் மேனி கறுத்த ஒரு மேடம் வீற்றிருந்தாள். கூடவே உயர் உத்யோகஸ்தனான ராணுவக்காரன் என்று தோன்றும் மீசையும் கண்ணும் உசரமான தொப்பியுமாக ஒரு வெள்ளைக்காரன் ராஜமுழி விழித்துக் கொண்டு போனான். மேஜராக இருப்பானோ அல்லது ஜெனரலோ. நிச்சயம் லங்கர் கமாண்டர் இல்லை. அது என் போல சமையல்காரர்களைக் கட்டி மேய்க்கிற பணி.

பீட்டர், இந்த சால்வையைப் போர்த்திக்கோ, குளிர் ஜாஸ்தி

மேட்ம சொன்னதை அந்த மேஜர் லட்சியமே பண்ணாமல் புன்முறுவல் பூக்க வண்டி நகர்ந்தது.

என் வாடிக்கைக்காரங்க தான். கென்சிங்க்டன் பக்கம் இருக்கப்பட்டவங்க. என் பெண்டாட்டி மரியா இவங்க வீட்டுலே தான் கல்யாணத்துக்கு முந்தி வேலை பார்த்தா.

நான் வெறுமனே கேட்டுக்கொண்டே நடந்தேன்.

பரம்பரைப் பணக்காரன்னு நான் சொல்லி உனக்குப் புரிய வைக்க வேண்டியதில்லை. நாளைக்கு ஞாயித்துக் கிழமை ஆச்சே. இவங்க வீட்டுலே முட்டையும் பாலாடைக் கட்டியும் கொண்டு போய்த் தரணும். இவங்க மட்டுமில்லே, தெருவிலே இருக்கப்பட்ட எல்லா டெரஸ் அவுசுக்கும் தான்.

ஜேம்ஸ் நடந்தபடி சொன்னான். நான் கனமான அவன் மூட்டையை இன்னும் சுமந்துகொண்டு வந்தேன்.

டெரஸ் அவுஸ் என்னாக்க என்ன ஜேம்ஸே?

நீதான் நாளைக்குக் கூட வரும்போது பார்க்கப் போறியே?

ஜேம்ஸ் சிரிச்சான். காலையிலே எட்டு மணிக்கு தயாரா இரு.

கடன்காரனுக்கு நூறாயுசு. ஜேம்ஸ் வந்துண்டிருக்கான். அவனோடு போய்ட்டு வந்து மிச்சத்தை எழுதறேண்டா வைத்தாஸே.

(தொடரும்)

Series Navigation34 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 34 >>

This entry is part [part not set] of 47 in the series 20110430_Issue

இரா.முருகன்

இரா.முருகன்