கவிஞர் கிருஷாங்கினிக்கு புதுப்புனல் விருது!

லதா ராமகிருஷ்ணன்


நவீன தமிழிலக்கியத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய பன்முகம் காலாண்டிதழைத் தொடர்ந்து அதன் பதிப்ப்பாளர் ரவிச்சந்திரனை ஆசிரியராகக் கொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக மாத இதழாக வெளிவந்துகொண்டிருக்கிறது புதுப்புனல்! கடந்த 3.4.2011 அன்று புதுப்புனலின் இரண்டு நூல் வெளியீட்டுவிழா நடைபெற்றது. (எழுத்தாளர் துவாரகை தலைவனின் இரண்டாவது கவிதைநூல் மற்றும் அவருடைய கட்டுரைத்தொகுதி). இந்த நிகழ்வின் ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக தமிழிலக்கியவுலகில் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாகக் குறிப்பிடத்தக்க பங்காற்றிவரும் கவிஞர் கிருஷாங்கினிக்கு புதுப்புனல் விருது வழங்கப்பட்டது! புதுப்புனல் ஆசிரியர் ரவிச்சந்திரன் பரிசுக்கேடயத்தை வழங்க புதுப்புனல் நிர்வாக ஆசிரியர் சாந்தி ரவிச்சந்திரன் கிருஷாங்கினிக்கு சால்வை போர்த்தி மரியாதை செய்தார்.

1948இல் தமிழ்நாட்டிலுள்ள கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தாராபுரத்தில் பிறந்தவர் கிருஷாங்கினி. இயற்பெயர் பிருந்தா. அவருடைய முதல் கதை ‘புஷ்பித்தாள்’ 1982 வாக்கில் கணையாழியில் பிரசுரமானது. கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக தமிழிலக்கியத்திற்கு சீரிய பங்காற்றி வருபவர் கவிஞர் கிருஷாங்கினி. குறிப்பாக, தமிழின் முக்கிய இலக்கியச் சிற்றேடுகளில் பெரும்பாலானவற்றில் அவருடைய கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், மதிப்புரைகள் என பலவும் இன்றளவும் இடம்பெற்றுவருகின்றன. தீபம், ஞானரதம், நவீன விருட்சம், புதிய பார்வை, புது எழுத்து, மணல் புத்தகம், மணல் வீடு, ராகம், கல்கி, தினமணிகதிர், புதுப்புனல், என பல இதழ்களைக் குறிப்பிடலாம். ஓவியம், இசை, நடனம் குறித்த கட்டுரைகளும் நிறைய எழுதியுள்ளார். இவருடைய எழுத்தாக்கங்கள் பல தொகுப்புகளில் இடம்பெற்றிருக்கின்றன. இணையதளங்களிலும் இடம்பெற்றிருக்கின்றன. ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருகின்றன. இலக்கியம், குறிப்பாக கவிதை குறித்த கருத்தரங்குகள் பலவற்றில் இவர் பங்கேற்றிருக்கிறார்.

இவருடைய கணவர் ஒரு சிறந்த ஓவியர். மகள் பரதநாட்டியக் கலைஞர். கிருஷாங்கினியும் இலக்கியம் தாண்டி பிறவேறு கலைகள் பால் அக்கறையும் ஆர்வமும் கொண்டவர். கவிதை, கதை என்பதோடு அல்லாமல் நாட்டிய சாஸ்திரத்திலும் இவருக்கு பாண்டித்தியம் உண்டு என்பதை வெளிப்படுத்தும் விதமாக `பரத‌ம் பு‌ரித‌ல்’ என்ுற நா‌ட்டிய‌க் க‌ட்டுரைக‌ள் தொகு‌ப்பையு‌ம், `தமிழில் பரத நாட்டியப் பாடல்கள்’ என்ற ஒரு அரிய நூலை தொகுத்து வெளியிட்டுள்ளார்.

குருவே சரணம் என்ற தலைப்பில் கர்நாடக இசை குறித்து இவரால் எழுதப்பட்ட நூலும் குறிப்பிடத்தக்கது.

பறத்தல்-அதன் சுதந்திரம் என்ற தலைப்பில் சக கவிஞர் மாலதி மைத்ரியோடு இணைந்து இவர் வெளியிட்ட நூலில் கவிதை எழுதும் பெண்களின் படைப்புகளும், ஓவியங்கள் வரையும் பெண்களின் ஓவியங்களும் இடம்பெற்றிருந்தன.

அணங்கு என்ற தலைப்பில் கிருஷாங்கினி புத்தெழுச்சி பெற்று வரும் பெண் எழுத்தாளர்களின் படைப்புகள், அவை சார்ந்த அம்சங்கள் குறித்துக் கலந்துரையாடவும், கவனப்படுத்தவும் ஒரு முழு நாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்தவர்.

தமிழில் 1950ற்குப் பிறகு உருவான பெண் எழுத்தாளர்கள் குறித்து இவர் 2002-2004இல் இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை‘ சீனியர் ஃபெலோஷிப்’ பெற்று இரண்டு வருடங்கள் ஆய்வுப்பணி மேற்கொண்டவர் கிருஷாங்கினி.

ஜெர்மானிய நாடகாசிரியர் பெர்டோல்ட் ப்ரெக்ட் எழுதிய ‘Mother Courage’ தீரத்தாய் என்ற தலைப்பில் சென்னையிலுள்ள தேசிய நாடகப் பள்ளியால் தமிழில் மேடையேற்றப்பட்டது. இந்த நாடகத்தின் மூல வடிவம் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. இந்தியிலிருந்து தமிழில் கிருஷாங்கினி மொழிபெயர்த்தார்.

இதுவரை இவருடைய கானல் சதுரம், ’கவிதைகள் கையெழுத்தில்’ என்ற இரு கவிதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. இரண்டொரு வருடங்களுக்கு முன்பு வெளியான கவிதை கையெழுத்தில் தொகுப்பு கையெழுத்துப் பிரதி போன்ற அமைப்பில், இவருடைய கணவர் ஓவியர் நாகராஜனின் கோட்டோவியங்களோடு புதுமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இவருடைய சிறுகதைத் தொகுதி சமகாலப் புள்ளிகள் 1998ஆம் ஆண்டின் தமிழக அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் பரிசைப் பெற்றது. முதல் கவிதைத் தொகுதி கானல் சதுரம் 2002ஆம் ஆண்டிற்கான கவிஞர் தேவமகள் விருதான கவிச்சிறகு விருதைப் பெற்றது.
எழுதுவதற்காக எழுதுவது தவறு என்ற கருத்துடையவர் கிருஷாங்கினி. உண்மையாக மனதில் அலைக்கழிப்பையும், அத்ர்வையும் ஏற்படுத்தும் விஷயங்கள் தன்னைக் கவிதையெழுதத் தூண்டும்போது மட்டுமே எழுதுவதாகச் சொல்கிறார். ஒரு இலக்கியவாதி நிலைத்துநிற்பது அவர் எத்தனை கவிதைத்தொகுப்புகள், கதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார் என்பதைப் பொறுத்ததல்ல. அவருடைய எழுத்து எத்தனை இலக்கியத்தரமானது என்பதைப் பொறுத்ததே என்ற தெளிவும், அப்படியே அறியாமல் போனால்தான் என்ன என்ற தத்துவார்த்தப் பார்வையும் கிருஷாங்கினியிடம் இருப்பது அவருடைய பலம். இதைப் பினவரும் அவருடைய கூற்று எடுத்துக்காட்டுகிறது.

”கவிதைத் தொகுதிகள் வெளிப்படும் எண்ணிக்கையைக் கொண்டு கலக்கப்படத் தேவையில்லை. அவை கவிதைகளா என்று பிரித்துப் பார்த்தால் பல காணாமல் போகும். மேலும் எல்லாரும் எப்போதும் நிற்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. உங்கள் மீது ஒரு அடுக்கு, அப்போது நீங்கள் மறைந்து விடுவீர்கள், அடுத்து அதன் மீது நான். என் மீது மற்றொன்று என்று எல்லாமே கனமான அடுக்குகளாக இருக்கிறது. வாழ்க்கையே பல அடுக்குகள் கொண்டது. உலகில் ஊடும் பாவுமாக எல்லா திசைகளிலுருந்தும் வாழ்க்கை பின்னப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. எனவே கலங்கிய பின் தானே தெளியும். தெளிந்து பின் தானே கலங்கும்.”

இவரது தாயார் ஒரு மூத்த பெண் கவிஞர். கணவர் ஒரு ஓவியர். சிறு வயது முதலே குடும்பத்தில் எப்போதும் இலக்கியமும் சங்கீதமும் சூழ்ந்திருக்கும் என்று கூறும் இவர், தனது 12-வது வயதில் ஆங்கில மகாகவி வில்லியம்ஸ் வேர்ட்ஸ்வொர்த்தால் கவிதை உலகிற்குள் தான் ஈர்க்கப்பட்டதாகக் கூறுகிறார்.

வெப் துனியா என்ற இணையதள இதழில் வெளியான இவருடைய பேட்டியில் வாழ்க்கை குறித்த, இலக்கியம் குறித்த இவருடைய எண்ணங்கள் நேர்த்தியாகப் பதிவாகியுள்ளன. அதில் கிருஷாங்கினி பின்வருமாறு தன் இலக்கியப் பிரவேசத்தைப் பற்றி எழுதியுள்ளார்:

ஓவர் கோட், குட் எர்த், கோரா, வனவாசம் (விபூதி பூவின் பந்தோபாத்யாயா) அன்னா கரீனா, பிரேம் சந் கதைகள், மௌனி என எல்லோரையும் பதின்ம வயதில் படித்தாயிற்று. ஜனரஞ்சக எழுத்து என்றுமே மனதிற்கு பிடித்தமானதாக இல்லாமல் இருந்தது. ஜனரஞ்சக இசை, ஜன ரஞ்சக நாட்டியம் என்று எதிலும் பிடித்தம் கிடையாது. அண்ணா கே.வி.ராமசாமி கவிஞர். எனவே எனக்கு வேறு எதுவும் தெரியாது

அம்மாவோ 1935ஆம் ஆண்டு முதல் பெண் கல்விக்கு முதன்மை அளித்து கற்றுக் கொடுப்பவர். தேசிய வாதி. எங்கள் கடையில் சுதந்திர தினத்திற்கு புது ஆடையும், போனசும் வழங்கப்படும். அம்மா எப்பவும் நூல் புடவையிலேயே எளிமையாக இருப்பார். 100 பவுனுக்கு மேல் நகைகள் இருந்ததாக அறிந்திருக்கிறோம். ஆனால் விசேஷ நாட்களில் கூட அம்மா நகை அணிந்து பார்த்ததில்லை. படி, உட்காரு, நில் என்று எந்தக் கட்டளையும் அம்மாவிடமிருந்து பிறக்காது. தானே ஆசைப்பட்டு படித்தால் மனதில் நிற்கும், மனப்பாடம் மதியைக் கெடுக்கும் என்பார். எல்லாமே உணர்ந்து படித்ததுதான். 40களில் பெரியப்பா சித்தப்பா வீடுகளில் காரும், குளிர்பதனப் பெட்டியும் இருக்கும். எங்கள் வீட்டில் ராட்டையும் சிட்டமும் இருக்கும்.
வீட்டில் கலைமகள் பத்திரிகையில் வரும் சிறுகதைகள், நாவல்கள் மதிக்கப்படும். மற்ற பத்திரிக்கைகள் மதிக்கப்படாது. என்னுடைய ஒன்பதாவது வயதில் எல்லாமே (சொத்து, பணம்) ஒரு சில நாளில் உறவினர் ஒருவரால் இல்லாமல் அடிக்கப்பட்டது. இருந்த வீடும் ஏலத்திற்கு வரும் நிலை. எனக்கோ ஒன்றும் புரியாமல் இருந்தது. பங்களாவில் வசித்தவர்கள் திடீரென ஓட்டு வீட்டில் வசித்ததால், ஓட்டு வீடு, அரிக்கேன் விளக்கு, விழும் தேள்கள், பெரிய பெரிய நிழல்கள், உதாசீனம் செய்த உறவினர்கள் ஆகியவை எல்லாம் ஏழ்மையின் அடையாளம் என்று மனதில் பதிந்தது. எளிய வாழ்க்கை வாழ்ந்து பழகியதால் துன்பமாக இல்லை. நிரந்தரப் பசி 7 குழந்தைகள் 2 பெரியவர்கள் உடல்களில் எப்போதும் தங்கி வாசம் செய்தது. அப்போது எழுதினேன் எனது வாழ்வின் கேள்வியை சிறுகதையாக.

கவிதை உருவாக்கம் குறித்தும், இலக்கியக் கோட்பாடுகள் குறித்தும் அவர் இவ்வாறு கூறியுள்ளார்:

கோட்பாடு என்ற ஒன்றை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி அதற்குக் கவிதைகள் என்பது எப்போதும் சாத்தியமில்லை. என்னைப்பொறுத்தவரை வாழ்வைப் போல இயல்பானதாய்தான் கோட்பாடுகளையும் காண முடியும். கோட்பாடுகள் திடமான பொருளாக இல்லாமல் நீர் போன்று எல்லாவற்றையும் வாழ்க்கையையும் உள்ளடக்கியதாகத்தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. நமக்கான அனுபவமும், பக்குவமும் சில நெருக்கடிகளும் கூட நம்மையும் கோட்பாடுகளையும் மாற்றி விடுகின்றன. எது ஸ்தூலம் என்று நம்பிக் கொண்டு பற்றிக் கொள்கிறோமோ அது வெறும் காற்றாக மாறிப் போகிறது. காற்று சில பொழுது பாறையாக மாறிவிடுகிறது. அடிப்படையாக உலகில் வாழும் உரிமை அனைவருக்குமானது. நம்மை இடையூறு செய்பவைகளை அழித்து விடுவது என்ற கொடூர மனப்பான்மையை எதிர்த்தே எனது கவிதைகள் என்று எண்ணுகிறேன். ”

இவருடைய சிறுகதைகள் குறித்து தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான லசா.ரா குறிப்பிட்டுள்ளார். ”கிருஷாங்கினி எழுத்து தமிழுக்குச் சற்று புதுமையானது என்றே சொல்லுவேன். அதில் நான் இதுவரை படித்ததில் ஒரு திட்டவட்டமான கதையம்சம் இல்லாமல் moods அல்லது மனநிலைகள மட்டுமே குறிக்கின்றன. இந்த மனநிலைகளும் ஸ்திரமானவையல்ல. ப்பூ.. என்று ஊதினால் காற்றில் பறக்கும் எருக்கம்விதைகளைப் போன்றவை. இலேசாகத் தொட்டும்தொடாமல், தொட்டதுகூடத் தெரியாமல் பதிவுகலை விட்டுச் செல்பவை. ஆனால், இம்மாதிரியான கதைகளை எழுதுவதில் கஷ்டம் இருக்கிறது. இப்புத்தகத்தின் விஷயக்கூறே உடல் என்று சொல்லலாமா? காலத்தின் கூற்றில் உடல் படும் வேதனை, இழிவு, அதனால் மனத்தின் சரிவு, இச்சரிவினாலேயே மேலும் சரியும் உடல், இப்படிப் போய்க்கிண்டேயிருக்கும் இந்த அவலத்தின் இடையே காலம், elevation இவைகளைப் பற்றி தவிர்க்கமுடியாத ஒரு தினுசான ஆராய்ச்சி, ஆச்சரியம், பெருமிதம் இத்தனையும் ஆசிரியையின் எழுத்தில் வெளிப்படுகின்றன”.

2003 டிசம்பரில் ’கிருஷாங்கினி கதைகள் என்ற தலைப்பின்கீழ் வெளியான சிறுகதைத் தொகுப்பு குறித்து மூத்த எழுத்தாளர் ல.சா.ரா குறிப்பிட்டிருப்பது கிருஷாங்கினியின் கவிதைகளுக்கும் இந்த வரிகள் பொருந்தும்.

அதேசமயம், நாட்டுநடப்புகளைத் தெளிவாக, தைரியமாகத் தனது கவிதைகளில் பேசவும் தயங்கியதில்லை கிருஷாங்கினி. மாதிரிக்கு ஒன்று.

நீர்நிலைகளிலெல்லாம் கட்டிடங்கள் நிரம்பிவரும் அவலத்தை அழுத்தமாக எடுத்துரைக்கும் கவிதை இது:

நீர் விழுங்கும் நில முதலைகள்

ஆங்காங்கே சேகரிக்கப்பட்ட கழிவுகள்
வந்திறங்கின, வண்டி வண்டியாய்.
ஒரு நெடிய காம்பவுண்டு சுவரும்,
வண்டி நுழையும் அளவிற்கு
சிறிய கேட்டும் அந்த வெட்டவெளி
ஏரிக்கரையின் ஒரு ஓரம்.
பள்ளம் மேடாகியது,கழிவுகள் நிரப்பியதால்
அழுத்தி, நசுக்கியது அவற்றை ஒரு
பெரும் வண்டி வந்திறங்கி

சுவர் உடைக்கப்பட்டு.
இன்னமும் சில நாட்களில்
மீதமுள்ள சுவற்றுக்குப் பின்னால்
சூலம் நட்ட மரமோ,
சிறு குடிசையோ,
கோவிலோ, வீடோ,
மெல்ல மெல்ல முளைக்கும்.
எல்லோருக்கும் அது தெரியும்.
என்ன, ஒரு சிறு மாற்றம் தானே?
நீர்ப் பரப்பு நிலமாகிறது.

ஏரி முன்புண்டு நூறு ஏக்கர்.
இப்போதோ எனில் அறுபதுக்குள் அடக்கம்.
அதிலும் சில சதுர அடிகள் உள்வாங்கி
விழுங்கப்படுகிறது கண்ணெதிரே.
எந்த வண்ணக் கொடியுடன் போராட?
கையறு நிலையில் கவிதையாய் வடிக்கிறேன்
அதை நான்.

அதே போல் பின்வரும் கவிதை ஒரே சமயத்தில் குப்பைக்கூளங்கள் நிறையும் சூழல் மாசையும், மனிதர்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் உழலும் இன்னொருவிதமான சூழல் மாசையும், பெண்சிசுக்கொலை என்ற வேறொரு பரிமாணத்திலான சூழல் மாசையும், இவை ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்திருக்கும் விதத்தையும் கவித்துவம் குறையாமல் அழுத்தமாக எடுத்துக்காட்டுகிறது.

திடக்கழிவு மேலாண்மை

மக்கும் குப்பையையும், மக்காத குப்பையையும்
ஒருசேர இட்டு, ஆங்காங்கே சேகரித்த
வண்டிகள் வரிசையாய் மதியம் போல்
அந்தத் திறந்த நிலத்தில் கொட்டிச் சென்றன.

நிறைய மாடுகள்,
நிறைய நாய்கள்,
நிறைய பன்றிகள்,
நிறைய சிறுவர்கள்,
நிறைந்த கோணி,
தோள் மீது,
நிறைய முதியோர்கள்,
சற்றே மனம் பிறழ்ந்த
மாற்றி அணிந்த செருப்புடனும்,
மலை போல் நிறைந்த
குப்பைகளும், சில பறவைகளுமாக
எப்போதும் பகலில் காட்சி அளிக்கிறது.
அந்தத் திறந்த நிலம்

எல்லோருக்கும் அளித்தது உணவை,
அந்தக் குப்பை மலை.

நீர்வண்ணப் பிளாஸ்டிக் பைகளைப் போன்று
உள்ளிருப்பது தெரியா வண்ணம்
சற்றே இருட்டு வண்ணத்தில்
ஒரு பெரிய பிளாஸ்டிக் பை.
நிறைந்து உப்பி இருந்தது
எடுத்து இட்டாற் போல
நிமிர்ந்து அமர்ந்திருந்தது அப்பை.
மேட்டின் மீதாக.

பேராசையுடன் புதையல் என எண்ணி,
பிரித்து ஆராய்ந்தான்
ஒரு சிறுவன்.
தோள்மீது கோணி
பயத்தில் முகமும் கோணியது.
உள்ளே கள்ளிப்பாலோ
கழுத்து நெரிப்பாலோ
ஊனமில்லாத குழந்தை ஒன்று
பெண் அடையாளத்துடன் — திடமான
அக்குழந்தை கழிவாகக் கருத்தப்பட்டு
வெளியே எறியப்பட்டு இருந்தது,
வெற்று சடலமாக.

*

எழுத்துரிமை, பேச்சுரிமை, மனித உரிமைக்கு அச்சுறுத்தல் நேரும்போதெல்லாம் நுண்ணுணர்வும், சமூக அக்கறையும் கொண்டவராய் தனது எதிர்ப்பையும், அக்கறையையும் தவறாமல் பதிவு செய்துவருபவர் கிருஷாங்கினி. அவருக்கு புதுப்புனல் விருது வழங்கப்பட்டிருப்பது நிறைவளிக்கிறது.

“Krishangini”
Phone: 044 2223 1879
E-mail: nagarajan63@gmail.com
0

Series Navigation36 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 36 >>

This entry is part [part not set] of 50 in the series 20110515_Issue

Comments are closed, but trackbacks and pingbacks are open.