ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 10

சத்யானந்தன்


யுத்த காண்டம் – நான்காம் பகுதி

“ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? ” என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது என்னும் ஆய்வில் கம்ப ராமாயணம் வால்மீகி ராமாயணம் ராமசரிதமானஸ் என மூன்று பிரதிகளை வாசிக்கிறோம்.

சமுதாயம் அல்லது மனித குலம் என்று நோக்கும் போது ஒரு அரசன் அல்லது அரசாங்கம் நடந்து கொள்ள வேண்டிய முறை அவன் ஒரு முன் உதாரணமாகப் பின் பற்ற வேண்டிய அறநெறிகள் என தொன்று தொட்டுப் பாரம்பரியமாகவும், எழுத்து பூர்வமாகப் பதிவு செய்யப் பட்டதுமான வழிகாட்டு நெறிகள் உள்ளன.

ஆனால் இவை குறைந்தபட்ச நெறிகளே. இதைத் தாண்டி நேர்மறையான நோக்கில் மனிதநேய அடிப்படையில் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்ப தனிமனிதனோ சமூகமோ அரசனோ தானே முன்வந்து நிறைவேற்ற வேண்டிய கடமைகள் உண்டு. இதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க முடியாது. மனிதநேயமும் தூங்காத மனசாட்சியுமே ஒருவருக்கு வழி காட்ட முடியும். எந்த அளவுக்கு அவர் தன்னலமற்று தனது கடமையை உணர்ந்து செயற்படுகிறாரோ அந்த அளவு ஒரு புதிய முன்னுதாரண ஆளுமையாகவும் ஒரு வித்தியாசமான சூழலில் முன்னுதாரணமான நடவடிக்கையாகவும் அது அமைகிறது.

ஆனால் இத்தகைய நேர்மறையான நிகழ்வுகளை விடவும் எதிர்மறையானவையே பலரது கவனத்தையும் பெறுவது கவலைக்குரிய விஷயம். ஒரு ரயில் ஓட்டுனர் ஒரு விபத்தை சமயோசிதமாகத் தடுத்தால் எந்த அளவு அந்த சிறப்பான செயல் கவனம் பெறுகிறது? அது அவரது கடமை தானே என்பது போல எளிதாகக் கருதப்படுகிறது. மாறாக ஒரு விபத்து நிகழும் போது கண்டனங்களும் தண்டனையும் பெரும் கவனம் பெறுகின்றன.

ஒரு புறாவை ஒரு கழுகு துரத்தி வரும் போது சிபிச் சக்கரவர்த்தி தனது உடலின் ஒரு பகுதியை வெட்டிக் கொடுத்து அந்தப் புறாவைக் காப்பாற்றுகிறார். இதை அவரது கடமை என்று சொல்லலாமா? சமுதாயத்தின் ஒரு அங்கமாக அவர் செய்திருக்க வேண்டும் என்று சொல்லலாமா?

அவர் காப்பாற்றியதை ஒரு அரசனின் செயல் என்று பார்க்கும் போது அதிர்ச்சியே ஏற்படுகிறது. வேட்டையாடுவது அரசர்களின் மிகப் பெரிய பெருமிதத்திற்குரிய விஷயமாக இருந்திருக்கிறது. போரிட்டு அக்கம்பக்க தேசங்களை ஆக்கிரமிப்பது போற்றப்பற்று வந்திருக்கிறது. முல்லைக் கொடிக்குத் தனது தேரையே தந்த பாரி வள்ளலைப் போல, மயிலுக்காகத் தனது மேலங்கியைத் தந்த பேகனைப் போல ஏன் பல மன்னர்களின் நேயமும் பரிவும் உள்ள நிகழ்ச்சிகள் அதிகமில்லை ?
ராமாயணத்தின் மிக நீண்ட பகுதியான யுத்த காண்டத்தில் நாம் காண்பது மிகப்பெரிய உயிர்ச்சேதங்களையும் அழிவையுந்தான். பிற காண்டங்களிலும் ஒரு அரச குடும்பத்தில் எழும் பிரச்சனைகளும் தீர்வுகளும் மற்ற அரசியல் நிகழ்வுகளுமாகவே காண்கிறோம்.

இப்படி முழு ராமாயணத்திலுமே ஒரு மன்னன் (அல்லது மன்னர் குல உறுப்பினர்) நேயமும் பரிவுமாக நடக்கவே இல்லையா ? மன ஆறுதலாக இத்தகைய ஒரு செயலை சீதை செய்கிறாள். ராவண வதத்திற்குப் பிறகு சீதையைப் பணிந்து அனுமன் சீதைக்குக் காவலிருந்த அரக்கியரைக் கொல்வேன் என்கிறான். அப்போது சீதை அவனைத் தடுக்கிறாள்.

அனுமன் கூறியது கம்பராமாயணத்தில்

என உரைத்து திரிசடையாள் எம் மோய்
மனவிடில் சுடர் மாமுக மாட்சியாள்
தனை ஒழித்து அவ்வரக்கியர் தங்களை
வினையில் சுட வேண்டுவென் யான் என்றான்

பொருள்: ஒளி பொருந்திய களையான் முகம் உடையவளான திரிசடை ஒருத்தியைத் தவிர ஏனைய அரக்கியரைக் கடுமையாக வதைத்துக் கொல்ல விரும்புகிறேன் என அனுமன் வேண்டினான். (பாடல் 3923 யுத்த காண்டம் கம்பராமாயணம்)

சீதையின் பதில்:
யான் இழைத்த வினையினின் இவ் இடர்
தான் அடுத்தது தாயினும் அன்பினோய்
கூனியர் கொடியார் அலரே இவர்
போன அப்பொருள் போற்றலை புந்தியோய்

பொருள்: தாயை விடவும் அன்பானவனே! கூனியை விடவும் இவர்கள் கொடியவர்கள் அல்லரே. எனக்கு ஏற்பட்ட துன்பங்கள் என் முன் வினை பயனே ஆகும். நடந்து முடிந்தவற்றைப் பொருட் படுத்தாதே. (பாடல் 3927 யுத்த காண்டம் கம்பராமாயணம்)

எனக்கு நீ அருள் இவ்வரம் தீ வினை
தனக்கு வாழ்விடம் ஆய சழக்கியர்
மனக்கு நோய் செயல் என்றனள் மாமதி
தனக்கு மாமறுத் தந்த முகத்தினாள்

பொருள்: வானத்து நிலவு களங்கமுற்றது என்று கருதுமளவு அழகிய முகம் கொண்ட சீதை கூறினாள் ‘இந்த அரக்கியர் மனதைத் துன்பம் கொள்ளச் செய்யாதே. தீவினையின் இருப்பிடமான இவர் அறிவற்றோர் ஆவர்’ (பாடல் 3928 யுத்த காண்டம் கம்பராமாயணம்)

வால்மீகி ராமாயணத்தில் சீதையின் சொற்கள்:

க்ளிஷ்யந்தி ஸ்ரீதேவான் த்வாமஷோகவணிகாம் கதாம்
கோரரூபஸமாசாராஹா க்ருராஹா க்ரூரதரேஷணாஹா

இஹ ஷ்ருதா மயா தேவி ராஷஸோ விக்ருதானனாஹா
அஸ்க்ருத் புருஷைர் வாக்யார்வதந்த்யோ ராவணாக்யயா

விக்ருதா விக்ருதாகாராஹா க்ரூராஹா க்ரூரகசேஷணர
இச்சாமி விவிதைர்தாதைர்ஹந்து மேதாஹா சுதாருணாஹா

பொருள்: தங்களைப் போன்ற தூய்மையான பெண்மணி அசோகவனத்தில் அமர்ந்து துக்கம் அனுபவித்து வரும் போது உருவத்திலும் நடவடிக்கைகளிலும் கோரமான இந்த ராட்சஸிகள் தங்களை மிரட்டியும் வசை பாடியும் வந்தனர். ராவணனின் ஆணைப்படி தங்களை என்னென்னவிதமாய் ஏசினார்கள் என்பதை நான் இந்த வனத்தில் நேரிலேயே கண்டிருக்கிறேன்.

இவர்கள் அனைவருமே கோரமும் குரூரமான தோற்றமும் இயல்பும் முழுக்க முழுக்க நிரம்பப் பெற்றவர்கள். இவர்கள் கண்களிலிலும் மற்றும் தலைமுடியிலும் கூட குரூரத்தன்மை சொட்டுகிறது. பலவிதமான வழிகளில் இவர்கள் அனைவரையும் நான் வதம் செய்ய விரும்புகிறேன். (பாடல் 30,31,32 ஸர்க்கம் 113 யுத்த காண்டம் வால்மீகி ராமாயணம்)

ஆக்யத்பா ராஷசேனேஹ ராஷஸ்யஸ்த்ர்ஜய்ன்தி மாம்
ஹதே தஸ்மின் ந கர்வந்த்திதர்ஜனம் மஹநாத்மஜே

பயம் வ்யாக்ரசமீபம் த் புராணோ தர்மஸ்ம்ஹிதஹ
ருக்ஷேன கீதஹ ஷ்லோகோஅஸ்மின் தம் நிவோத ப்லவங்கம

வாயு புத்திரனே! இவர்கள் அந்த ராட்சஸனின் ஆணைப்படியே பல தீய செயல்களைச் செய்தனர். அவன் கொல்லப்பட்ட பிறகு இவர்கள் என்னை பயமுறுத்துவதையும் மிரட்டுவதையும் விட்டுவிட்டனர்.

வானரவீரனே! புராணங்களில் இருந்து ஒரு சுலோகம் சொல்லுகிறேன். இது ஒரு புலிக்கு ஒரு கரடி சொல்லியதாகும்.
(பாடல் 42 43 ஸர்க்கம் 113 யுத்த காண்டம் வால்மீகி ராமாயணம்)

(இந்தக் கதை குறிப்பாகவே சொல்லப்படுகிறது சீதையால். வால்மீகி ராமாயணப் பிரதியில் அனுபந்தமாகவே முழுக்கதையும் வெளியிடப்பட்டிருக்கிறது.) அந்தக்கதை: ஒரு நாள் வேடன் ஒருவனை ஒரு புலி துரத்தியது. அங்கும் இங்கும் ஓடிய அவன் ஒரு மரத்தின் மீது ஏறிக் கொண்டான். ஆனால் அங்கோ ஒரு கரடி இருந்தது. “என்னைக் காப்பாற்று” என்று அவன் கரடியிடம் சரணடைந்தான். கரடியும் அவனைக் காப்பாற்றுவதாக உறுதி அளித்தது. ஓடிக் களைத்திருந்த வேடன் சற்று நேரத்திலேயே உறங்கி விட்டான். புலி அப்போது மரத்தின் கீழே வந்தது. ‘நண்பா. நாமிருவரும் விலங்கினம். இவன் மனித இனம். அதுவும் வேட்டையே தொழிலாகக் கொண்டவன். எனவே நம் இருவருக்குமே எதிரி. இவனை நீ காப்பாற்றினாலும் நாளை முதல் நம் இனத்துக்கு உள்ள ஆபத்து நீங்கப் போகிறதோ? இல்லை. எனவே நீ இவனை மரத்திலிருந்து கீழே என்னிடம் தள்ளி விடு.’ என்றது. கரடி உறுதியாகச் சொன்னது ‘ என்னிடம் தஞ்சம் அடைந்தவனை உன்னிடம் இரையாகக் கொடுப்பது தர்மம் ஆகாது. இதனால் இவ்வுலகில் அவப்பெயரும் அவ்வுலகில் நரகமுமே கிட்டும்.’ என்றது. புலி கரடியின் உறுதியைக் கண்டு அதிசயித்தது. ஆனாலும் வேறெங்கும் போகாமல் மரத்தின் அடியினிலேயே காத்திருந்தது.

சற்று நேரத்தில் விழித்தெழுந்த வேடன் கீழே புலியைக் கண்டு மரத்தை விட்டு இறங்கவில்லை. ‘கவலைப்படாதே’ என்று அவனுக்கு ஆறுதல் கூறி கரடி தூங்கிவிட்டது. அது ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது புலி வேடனைப் பார்த்து ‘உனக்கு புத்தி இல்லையா? என்னைப் போலவே அவனும் உன்னைக் கொன்று தின்பவன் தான். உன்னை இப்போதைக்கு மரத்தில் இருத்தி வைத்திருப்பதற்காகவே இத்தனையும் பேசினான். உன்னுடைய இனம் அல்லவே அவன். அதனால் அவனை என்னிடம் நீ தள்ளிவிடு. அவ்வாறு நீ செய்தால் நான் உனக்குப் பதிலாக அவனை உணவாக உண்டு விடுகிறேன். இதனால் நம் இருவரது நோக்கமும் ஒரே சமயத்தில் நிறைவேறும்’ என்றது. புலியின் யோசனையைப் பரிசீலித்த வேடனுக்கு அது சரி என்றே பட்டது. எனவே அவன் தூங்கிக் கொண்டிருந்த கரடியைக் கீழே தள்ளி விட்டான். தனது இயல்பிலேயே எச்சரிக்கை உணர்வுள்ள கரடி விழித்து ஒரு கிளையைப் பற்றி மரத்திலிருந்து விழாமல் தன்னைக் காத்துக் கொண்டது. அது தன்னைக் கட்டாயம் கொல்லும் என அஞ்சிய வேடன் நடுங்கித் தன் தவறுக்கு வருந்தி அதனிடம் நடந்ததைக் கூறி மன்னிப்புக் கேட்டான். அப்போது கரடி ‘நண்பா! நீ எனக்குக் கெடுதலே நினைத்தாலும் கூட நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவேன். உன்னைக் கொல்ல மாட்டேன்’ என்றது.

இப்போது புலி கரடியைப் பார்த்து ‘ அவன் நம் இனம் அல்லன் என்று நான் முன்பே கூறினேனே. அவன் என்ன செய்தான் பார். நன்றி கெட்ட அவனை, உனக்கு துரோகம் செய்த அவனை என்னிடம் தள்ளி விடு’ என்றது. அப்போதும் கரடி ‘ அவனது இயல்பு அப்படி இருக்கலாம்’ அவன் தீய இயல்பு கொண்டவனாகவே இருந்தாலும் நான் அவனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவேன். கொடுத்ததைக் காப்பாற்றுவதைவிடவும் உயிர் எனக்கு மதிப்பானதல்ல’ என்று கூறி மனம் மாறாது வேடனை அம்மரத்தில் நிம்மதியாக இருக்க விட்டது.

தொடர்ந்து சீதை சொல்கிறாள்:
லோக ஹிம்ஸா வீராணாம் க்ரூராணாம் பாப கர்மணாம்
குர்மதாமஸி பாபானி நைவ கார்யமஷோபனம்

பிறருக்குத் துன்பம் செய்வதே இயல்பாய்க் கொண்டவர்களுக்கும் எப்போதும் பாவச் செயல்களையே செய்பவர்களுக்கும் கூடக் கெடுதல் செய்யக் கூடாது. (பாடல் 46 ஸர்க்கம் 113 யுத்த காண்டம் வால்மீகி ராமாயணம்)

ராமசரிதமானஸில் இப்படி ஒரு பரிமாற்றம் சீதைக்கும் அனுமனுக்கும் இடையே நடக்கவே இல்லை.
யுத்த காண்டத்தில் மட்டுமல்ல ராமாயணத்திலேயே ஒரு அபூர்வமான தருணம் அனுமனிடம் சீதை கூறும் இவ்வறிவுரை. சமுதாய விழுமியங்கள், பாரம்பரியங்கள், வழிகாட்டுதல்கள் இவற்றை நேர்மறையாக மீறிய ஒரு நிகழ்வு இது.

ராமாயணத்தில் நாம் காண்பதெல்லாம் ராமனின் வழி நடப்போர், அவனது ஆளுகைக்குக் கட்டுப்பட்டோர் அல்லது அவனது எதிரணியில் அறமற்ற செயல்களில் ஈடுபடுவோர் என இருவகைப் பட்டோரே.

நல்ல வழியிலோ அல்லது தீய வழியிலோ ராமன் அல்லது ராவணனின் அதிகார விளிம்பிற்குள் அகப்பட்டு இயங்குவோராகவே நாம் அனைவரையும் காண்கிறோம். அபூர்வமான தருணங்களில் சில எதிர்மறையான மீறல்களைக் காண்கிறோம்.

ஆனால் ஒரு நேர்மறையான மீறல் – அதுவும் ஒரு அரசகுலப் பெண் (இளவரசி மற்றும் ராணி) ஆனவள் எவ்வாறு அரக்கிகள் என்னும் இனத்தோரின் அதிலும் கடைநிலை ஊழியராய்க் காவற் காக்கும் பெண்கள் மீது இரக்கம் கொள்கிறாள் என்பது மிகப் பெரிய வியப்பளிப்பது. கிட்டத்தட்ட அதிர்ச்சியே அளிப்பதாகும். ஒரு ராஜ குடும்ப மரபில் ஏனையோர் மீது இரக்கப்பட எந்த ஒரு முன்னுதாரணமும் கிடையாது. தன்னிடம் அடிமைகளாய் இருப்போரிடம் அரசர் குலத்தார் கருணை காட்டக் கூடும் அதுவும் கட்டாயம் இல்லை. எதிரி நாட்டில் அதுவும் அவனது அடிமைகள் அல்லது தொழிலாளிகள் மீது மாற்று நாட்டு அரசி அதுவும் கடத்தி வரப் பட்டவள் இரக்கம் காட்டியுள்ளது மிகவும் அபூர்வமாக நாம் காண்பதாகும்.

சீதையை ஒப்பிடும் போது அனுமன் இவர்தம் நிலையை அறிந்து பரிந்திட வாய்ப்பிருந்தது. ஆனால் லங்கா தகனம் என அனுமனால் லங்கை எரிக்கப்பட்ட போது அனுமன் எந்தப் பின் விளைவுகள் பற்றியும், எளிய உயிர்களுக்கு நிகழப்போகிற விபரீதங்கள் குறித்தும் கவலை ஏதும் கொள்ளவில்லை. அந்த நெருப்பில் சீதைக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்னும் ஒரே கவலை அவ்வளவே.

அப்படி அனுமன் மனதில் கூடத் தோன்றாத இரக்கம் சீதையிடம் இருந்ததற்கு ஒரு காரணம் இருக்கலாம். விரும்பியோ விரும்பாமலோ கடைநிலைத் தொழிலாளிகளான காவற்காரப் பெண்களுடன் நீண்ட காலம் தங்க வேண்டிய கட்டாயம் சீதைக்கு ஏற்பட்டது. இது போல வேறு எந்த ராஜ குடும்ப அங்கத்தினருக்கும் ஒரு இக்கட்டு ஏற்படவில்லை. எனவே சீதையால் அந்தப் பணிப் பெண்களின் நிலையை உணர இயலுகிறது.

சமுதாயத்தில் பேச்சு வாக்கில் குறிப்பிடப் படும் மனசாட்சி இப்படித்தான் வேறுபடுகிறது. மன்னர் குடும்பத்துக்கு என்று தனி மனசாட்சி உண்டு. அடிதட்டு மக்களுக்கு வேறு மனசாட்சி.

மற்ற காவியங்களை ஒப்பிட ராமாயணம் ஒரு நிகழ்ச்சியை வேறு கோணத்திலும் பரிமாணத்திலும் காட்டியிருப்பது குறிப்பாக இந்தக் காட்சியில் தென்படுகிறது.

சமுதாயத்தின் சட்டதிட்டங்கள் அல்லது அறநெறி குறித்த அணுகுமுறை எதிர்மறையான கோணத்தில் மட்டுமே அணுகப்படுகிறது. நேர்மறையான அணுகுமுறை தனிமனிதரின் பின்னணி மற்றும் சூழல் பற்றிய புரிதலை அடிப்படையாகக் கொண்டு மாறுபடும்.

மனித நேயத்தில் பரிவில் புதிய அத்தியாயங்கள் நேர்மறையான மீறல்களிலேயே துவங்கின. ஏனெனில் அரசனை மையமாகக் கொண்ட ஒரு அமைப்பின் அணுகு முறையில் எளியோரின் இடர்களை சீர் தூக்கிப் பார்க்க இடமே இருக்கவில்லை. அவர் தம் உரிமையை மனதிற் கொள்ளும் போதே மனித நேயம் முழுமை பெறும்.

ஒரு பீடத்தில் இருந்து பிச்சை போடுவது போல கருணை காடும் போது அவரது அவல நிலையோ அல்லது உரிமைகளோ எதுவுமே கண்ணிற் படாது.

அதிகார மையம் மட்டுமல்ல அனுபவமும் வித்தியாசமான சூழலின் அறிமுகமும் கூட தனி மனித அல்லது சமுதாய நோக்கு சிந்தனையை முடிவு செய்கிறது என்னும் புதிய கோணத்துடன் மேலும் வாசிப்போம்.

Series Navigation36 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 36 >>

This entry is part [part not set] of 50 in the series 20110515_Issue

சத்யானந்தன்

சத்யானந்தன்