வானம் – மனிதம் (திரைப்பட விமர்சனம்)

சின்னப்பயல்



தனது தம்பியைத் தேடி அலையும் ஒரு நடுத்தர வயது முஸ்லீம்,ராணுவத்தில் சேர மறுத்து பாடகனாக விரும்பும் ஒருவன்,தனது ஆடையை எப்போதும் தானே நெய்ய இயலாத ஒரு நெசவாளி,அடுத்த மாசம் சேர்த்து தாரேன் என்று சொன்னாலும் இணைப்பைத் துண்டித்து செல்லும் ஒரு சாதாரண கேபிள் டிவி’க்காரன், தனது துணை திருநங்கை உயிருக்கென எத்தனை முறை வேணாலும் உங்ககூடப்படுக்கிறேன்னு , சுகத்த விக்கிற பொண்ணுக்கும் மனசிருக்கிது பாரய்யான்னு சொல்ற ஒரு பரத்தை, இவர்களையெல்லாம் வைத்துக்கொண்டு யுவனின் பலமான பின்னணி இசையோடு எல்லை தாண்டி வந்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் க்ரிஷ்.

வானம் கூறுவது மனிதமும் மனிதாபிமானமும் தான்.மனிதாபிமானமே அற்றுப்போன சமூகத்திற்கு , அதை உணரும்படியான சம்பவங்கள் தமது வாழ்வில் ஏற்பட்டால் ஒழிய ,அதைப்பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாத மனிதர்களைப்பற்றி , விலாவரியாக , சற்றும் விறுவிறுப்பு குறையாமல் சொல்லியிருக்கிறது திரைப்படம்.

ராணுவத்தில் சேர மறுக்கும் பரத் அதற்காகக்கூறும் காரணம் நமது மனதைத்தொடுகிறது.தம்பியைத்தேடி அலையும் பிரகாஷ்ராஜின் கண்களில் உண்மையும்,அவரின் பரிதவிப்பும் நம்மை அந்தச் சமூகத்தின் மீதான பார்வையை முற்றிலுமாக புரட்டித்தான் போடுகிறது.தனது நண்பியின் உயிரைக்காப்பாற்ற எத்தனை முறை வேணாலும் உங்ககூடப்படுக்கிறேன்னு , வேறு எதையும் கொடுக்க இயலாத பரத்தையாக நடித்திருக்கும் அனுஷ்கா மீது நம்மையறியாமல் பரிதாபம் ஏற்படுவது இயற்கை.

பல சம்பவங்கள் அதை கதாபாத்திரங்களுக்கும் ,பார்க்கும் நமக்கும் மனிதாபிமானத்தை உணர்த்த தவறவில்லை.

காதலிக்காக 5ஸ்டார் ஹோட்டல் பார்ட்டிக்கென, நெசவுத்தொழிலாளியிடம் பணத்தை திருடும் சிம்பு , திருந்தி அதைத்திரும்ப அவர்களிடமே கொடுக்கும் போது இறுகிப்போன முகத்துடன் கண்களாலேயே மன்னிப்பு கேட்கிறார்” உங்க பணம் உங்க கிட்ட” என்று சொல்லும் போது குரல் உடைவதை தவிர்க்க இயலாமல் நம்மையும் சிறிது அசைத்துப்பார்க்கிறார்.அப்படி நடந்து கொள்வதற்கான சம்பவங்களையே இது வரை சந்தித்திராத சாதாரண மனிதனாக பரிமளிக்கிறார்.

பிறரைப்பற்றி கவலை இல்லை , யாராவது அவர்களுக்கு உதவுவார்கள் என விட்டேற்றியான மன நிலையிலிருக்கும் பரத், காதலர் தின எதிர்ப்பாளர்களிடம் மாட்டிக்கொண்டு தவிக்கையில் வழியில் ஓவர்டேக் செய்து கொண்டு கடுப்பேற்றி விட்டு வந்த சிங்’கின் உதவியால் காப்பாற்றப்படும் போதும், பிறகு ஆட்டோ விபத்தில் காயப்படும் பெண்ணை மருத்துவமனையில் சேர்க்க எடுத்துச்செல்லும் போதும் அதுவரை அப்படிப்பட்ட நிகழ்வுகள் தனது வாழ்வில் நடந்திராததை உணர்ந்து கண்ணீர் மல்கும் காட்சிகள்.

தீவிரவாதி தான் என உறுதியாக நம்பி , தற்செயலாக நடக்கும் சம்பவங்களைக்கோர்த்து வைத்துக்கொண்டு பிரகாஷ்ராஜை தீவிரவாதிகளின் செல்’லில் தள்ளும் இன்ஸ்பெக்டர் ,குரானைத்தூக்கிப் பிடித்துக்கொண்டு அங்கு தஞ்சமடைந்திருக்கும் அனைவரையும் காப்பாற்றும் ஹாஸ்பிட்டல் நிகழ்வுக்குப்பின்னர் தனது தவறை உணர்ந்து அவரைக் கையெடுத்து கும்பிடும் காட்சி என நெகிழ வைக்கிறார் இயக்குனர்.

நீதான் கெட்டுப்போயிட்ட, அந்தப்பொண்ணு வாழ்க்கையையும் கெடுக்காத என்று வசவும் சிம்புவின் பாட்டி என எதார்த்தங்கள் நிறைய தெரிகிறது படமெங்கும்.ஏழை நெசவுத்தொழிலாளியாக நடித்திருக்கும் சரண்யாவிற்கு அந்த கதாபாத்திரம் அவருக்கென நெய்தது போல அமைந்திருக்கிறது.(எனினும் அவரை அதே போன்ற பாத்திரங்களுக்கேயென முத்திரை குத்தி வரும் போக்கும் சிறு குறையே.)

வேண்டுமென்றே தவறாகவே கணக்குப்போடும் முதலாளி பிணையாகப் பிடித்து வைத்திருக்கும் தனது பேரனை மீட்டெடுக்க செல்லும் தாத்தா, தனது பேரனை வைத்தே கணக்கு சொல்லச்சொல்லி அவனை மீட்டு வரும்போது , முதலாளி “காதல்” தண்டபாணி “பய நல்லாக்கணக்கு போட்றான்யா, நல்லாப்படிக்கட்டும்” என்று வழியனுப்பி வைப்பது …

என தம்மை உணரவைக்க மனிதாபிமானச்சம்பவங்கள் ஏதும் தமது வாழ்வில் நடந்திராத வரை அதை உணராதவர்களைப்பற்றி அழுத்தந்திருத்தமாக சொல்லியிருக்கிறது திரைப்படம்.அதற்கென வாய்ப்பு கிடைத்தும் திருந்தாத இந்த ஜென்மங்களையும் காட்டத்தவறவில்லை இயக்குனர்.” அனுஷ்காவை பார்ட்டிகளிடம் கூட்டிச்செல்லும் டிரைவர், மருத்துவமனை மீதே தாக்குதல் நடத்த வரும் பிரகாஷ்ராஜின் தம்பி,பணம் ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டிருக்கும் கிராமத்து டாக்டர்,போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்கு வருபவரிடம் கிடைத்ததைச்சுருட்டிக்கொளும் போலீஸ்காரர் ராதாரவி “.

படம் நெடுக அவ்வப்போது வந்து செல்லும் ” தெய்வம் வாழ்வது எங்கே ?” என்று யுவனும் தம் பங்குக்கு நம்மைக் கட்டிப்போடுகிறார்.

பெரிதாகக்குறை என்று தெரியாவிட்டாலும், இது மொழி மாற்றப்படம் என்று சில இடங்களில்/காட்சிகளில் தெளிவாக தெரிவது , தவறை உணர்ந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் பிழைத்திருக்க சிம்புவை(சிம்புவுக்காகவாவது உயிர் பிழைக்க வைத்திருக்கலாம் ) இறப்பது போலக்காட்டியிருப்பது என்பது போன்ற சிறு குறைகள் மட்டுமே சுட்டிக்காட்ட உகந்தவை.

வானம் – மனிதம்.

– chinnappayal@gmail.com

Series Navigation36 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 36 >>

This entry is part [part not set] of 50 in the series 20110515_Issue

சின்னப்பயல்

சின்னப்பயல்