விஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தாறு 76

இரா.முருகன்


1916 ஜனவரி 14 ராட்சச வருஷம் தை 1 வெள்ளிக்கிழமை

என் பிரியமுள்ள புத்ரன் வைத்தாஸே,

இந்தத் தேதியிலே தமிழ்ப் பிரதேசத்துலே பொங்கலோ போகியோ கொண்டாடற வழக்கம். சுபதினம். உனக்கும் ஈஸ்வர அனுக்கிரஹத்துலே எல்லா சுபமும் கைகூடி வரட்டும். அமோகமா இருடா கண்ணே.

உனக்கு ஒரு கடுதாசியிலே யோகக்ஷேமம் விசாரிச்சு இவிடத்து வர்த்தமானம் எல்லாம் எழுதி அரைகுறையா நிறுத்தினேன் இல்லியா? ஏன் கேக்கறே, அன்னிக்கு இருட்டிடுத்து. வந்த புதுசு. இருட்டானா விளக்கு ஏத்தி வைக்கறதுக்கு அப்போ இந்த லண்டன் பட்டணத்திலே வீடும் வாசலுமா எனக்கு இருந்தது?

ஏத்தி வச்சு நாமம் சொல்ல, ராமாயணமோ மகாபாரதமோ எல்லோரையும் கூட்டி இருத்தி வச்சு பெலமா படிச்சு பாராயணம் பண்ண. கொடுப்பினை இல்லை அப்போ.

பாரதம் வேண்டாம். அகத்துலே அதைப் பாராயணம் பண்ணினா கலகமும் வீண் சண்டையும் தான் வரும்பார் என் தகப்பனார் ஸ்வர்க்கஸ்ரீ வைத்தியநாத ஐயர். மதராஸ் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கப்பல் ஆபீஸ்லே நேவிகேஷன் க்ளார்க். இப்போ உன் சித்தப்பனும் என் தம்பியுமான நீலகண்டன் அந்த உத்தியோகத்திலே இருக்கான். அதிலே இருக்கானோ, ப்ரமோஷன் கிடைச்சு சப் கலெக்டர் ஆயிட்டானோ தெரியலை. க்ஷேமமா இருக்கட்டும் அவனும் அவனோட குடும்பமும்.

அவன் படிச்ச படிப்புக்கும் மாதா பிதாக்கள் மெச்ச ஏற்பட்ட நடத்தைக்கும் பித்ரு காரியங்களை கிரமமாப் பண்ணி மூணு தலைமுறை பூர்வீகர்களை பட்டினி போடாம வச்சுக்கற நறுவுசான போக்குக்கும் அவன் மேலே மேலே செழிப்பா வருவான். சந்தேகமே இல்லே.

இன்னிக்கு என்னமோ எல்லாருக்கும் ஆசீர்வாதம் செய்யணும்னு, எல்லோரும் அமோகமா இருக்கணும்னு மனசு நிறைஞ்சு இருக்கு. உன் அம்மாவும் என் பெண்டாட்டியுமான லோலா உட்பட சுகமாயிருக்கட்டும். உன் புது அப்பனும் கூட.

மனசுலே சந்தோஷம் பொங்கி வழிய, தொழிலுக்குக் கூடப் போகாமால் உனக்கு கடுதாசு எழுத உட்கார்ந்துட்டேன். நம்ம கதைக்கு வரலாம்.

நான் எப்படி உன் அம்மா லோலாவை அலங்கோலப்படுத்திட்டு குடி புகுந்த நாட்டுலே இருந்து தப்பிப் பிழைச்சு யுத்தத்துலே போய்ச் சேர்ந்தேன்னு ஆறு மாசம் முந்தி அனுப்பின கடுதாசியிலே உனக்கு விஸ்தாரமா எழுதின ஞாபகம்.

எங்களை பிரஞ்சு பாஷை புழங்கற ஒரு பிரதேசத்துக்குக் கூட்டிப் போனான்கள். யுத்தம் பண்ணுங்கோடா என்று ஏவி விட்டுட்டு காக்கிச் சட்டை போட்ட வெள்ளைக்காரத் தாயோளிகள் கையைக் கட்டிண்டு சும்மா நோக்கி நின்னதுகள்.

வெள்ளைக்காரனுக்கும் வெள்ளைக்காரனுக்கும் தான் இந்த லோக மகா யுத்தம் அப்படீன்னு உனக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. துப்பாக்கி, பீரங்கி, கண்ணி வெடி என்றபடிக்கு சகல ஆயுதங்களும் பிரயோகமான சூழ்நிலை.

திடுதிப்பென்று ஜெர்மன்கார வேசி மகன்கள் இங்கிலீஷ்கார, பிரஞ்சுக்கார அதே ரீதியிலான உத்தம புத்ரர்கள் மேலே ஏதோ விஷ வாயுவைத் திறந்து விட, அதன் பேர் கூட குளோரினோ என்னமோ சொல்றது, ஒரே அதகளம் போ. அப்படி ஒரு சர்வ நாசம்.

ஏராளமான உசிர்ச் சேதம். விஷவாயுவை சுவாசித்து நெஞ்சடைப்பு ஏற்பட்டு மூச்சுத் திணறி ஏகமான ஜவான்களும் ஜனங்களும் மடிந்து போகலாச்சு. வழக்கமா நடக்கற தோதிலே கண்ணி வெடியும் துப்பாக்கியும் வெடிச்சு கை, கால், கண்ணு போனதோ இன்னும் பலபேர். எனக்கும் சுவாசம் முட்டி மயக்கமாச்சு. சுகவீனம். பலவீனம். ஆஸ்பத்திரியிலே படுக்க வைச்சு சிகிச்சை. ஆனாலும் உயிர் உண்டு.

என்னை மாதிரி தப்பிப் பிழைச்சவங்களை ஸ்வதேசங்களுக்குக் கொண்டு போய் விட ஏற்பாடு மும்முரமா நடந்தது.

ரெட்டி, உமக்கு எங்கேங்காணும் போகணும்னு கேட்டார் மேஜர். எங்களோட படைத்தலைவர்.

நான் ஆஸ்பத்திரியிலே படுத்த படுக்கையா இருந்தாலும், பாரத தேசம்னு உடனே சத்தமா சொன்னேன்.

மன்னிச்சுக்கோடா என் குழந்தே. உன் அம்மா காப்பிரிச்சி லோலாவைக் கைப்பிடிச்சு கல்யாணம் பண்ணி உன்னையும் வாரிசாக குலம் விளங்க, என்னத்தை விளங்க, பெற்று வைச்சாலும் மனசாலே நான் இன்னும் பாரத வர்ஷே, பரத கண்டே, மேரோஹோன்னு இருக்கப்பட்ட மதறாஸ் பட்டண தரித்திர வாசி.

தமிழ் பாஷை பேசி, இங்கிலீஷ் படிச்சு பொடிக்கடை உத்தியோகத்துக்குப் போய், காராகிரகத்துக்கும் ஒருவிசை போய் எட்டிப் பார்த்து வந்தது எல்லாம் அந்தப் பட்டணத்திலே தான்.

என் ப்ரியமான ஆத்மசகி லலிதாம்பிகை, உன் பெரியம்மாடா வைத்தாஸே, மறந்துடலியே. அவளை காசி யாத்திரை போய் கன்யாதானம் வாங்கி மாங்கல்ய தாரணம் செஞ்சு கூட்டி வந்து மைலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரம் குச்சில் இருத்தி குடும்பம் நடத்தினேண்டா குழந்தே.

அவளை நிர்க்கதியா விட்டுட்டு வந்து எங்கெங்கேயோ திரிஞ்சு லோல்படறேன். பட்டதெல்லாம் போறும். பாரதத்துக்கே திரும்பிடலாம்னு பிடிவாதமா முடிவு பண்ணினேன்.

கொஞ்சம் போல் காசு கொடுத்து கையெழுத்து வாங்கிண்டானுங்கள். இந்தியாவுக்குப் பிரயாணத்துக்கான காகிதமும் கூடவே கொடுக்கப்பட்டது.

ஆனா பாரு, கப்பல் ஏற்றி அனுப்பற ஆபீசரான பிரம்மஹத்தி என்னை தவறுதலா சவுத் ஹாம்டன் போற கப்பல்லே ஏத்தி அனுப்பிடுத்து அதாண்டாப்பா, இங்கிலீஷ் தேச சமுத்திரக்கரை.

மற்ற நேரத்திலேன்னா இப்படி தேசம் தப்பி தேசம் போகறது மகா கஷ்டம். கையிலே கொடுத்தனுப்பின ராஜாங்க முத்திரையும் ராணுவ முத்திரையும் பதிச்ச காகிதத்தைப் பார்த்துத் தான் நடவடிக்கை எடுக்கற வழக்கம். ஆனா என்னமோ நாங்க வந்த கப்பல் நங்கூரம் இட்ட நேரத்துலே சுங்க அதிகாரி வங்க அதிகாரின்னு ஒருத்தனையும் ஹார்பர் ஆபீசிலே காணலை.

மூட்டை முடிச்சோடு வெளியே வந்து சுத்திமுத்தும் பார்த்தேன். தேசமும் திக்கும் சுத்தமா புலப்படலை.

தெருவெல்லாம் தூசி போக துப்புரவாப் பெருக்கிண்டிருந்த ஒரு காப்பிரிச்சியை நம்ம பாஷையிலே விசாரிச்சேன். அவளுக்கு அர்த்தமாகல்லை. அதுக்குள், தெரு முனையிலே குப்பை கூளத்தைக் குடைஞ்சுண்டிருந்த அவ ஆம்படையான் பாய்ஞ்சு வந்து என் சட்டையைப் பிடிச்சுட்டான். நான் ஏதோ அவன் பொண்டாட்டியை விடிகாலையிலே சம்போகத்துக்குக் கூப்பிடறதா அவனுக்கு சந்தேகமாயிருக்கும்.

நான் சட்டையை விடுவிச்சபடி அந்த பெண்பிள்ளை கிட்டே கேட்டதையே அவன் கிட்டேயும் கேட்டேன். அவனுக்கு ஓரளவுக்கு அர்த்தமாயிடுத்து. நீ ஆப்பிரிக்கா வாசியா, ஆசியாக் காரனான்னு கேட்டான் அவன். இங்கிலீஷ்லே சுருக்கமா பூர்வோத்ரம் சொன்னேன்.

அவனுக்குச் சொல்லவொண்ணா ஆனந்தம். நம்ம பிரதேசத்தான் தானாம் அவனும். பெண்சாதியோ தெற்கு ஆப்பிரிக்கா தேசத்திலேருந்து வந்த குடும்பமாம். ஆப்பிரிக்காவிலேயும் ஆயிரம் இனம் இருக்காமே.

என் மேலே பரிதாபப்பட்டு காப்பிக்கடைக்கு அழைச்சுப் போய் ஆகாராதிகளும் மூத்திரச் சூட்டில் ஒரு சிராங்காய் காப்பியும் வாங்கிக் கொடுத்தான். இங்கே எல்லாம் காப்பி டீகாக்ஷனை முதலில் சூடு பண்ணி அப்புறம் பச்சைப் பாலைக் கலக்கற வழக்கம்னு ஏற்கனவே யுத்த பூமியிலே கூட இருந்தவங்க சொல்லிக் கேட்டிருக்கறதாலே அந்தக் காப்பி ஒண்ணும் வித்தியாசமாத் தெரியலை.

சவுத் ஆம்ப்டன் பட்டணத்திலே எனக்கு ஏதாவது வேலை வெட்டி கிடைக்குமா, நித்தியப்படிக்கு கொஞ்சம் போல் துட்டு கிடைச்சாலும் கூட கிரமமா மூச்சு விட்டு அக்கடான்னு கிடப்பேன்னு சொன்னேன். தெருப் பெருக்குவியான்னான் சிரிச்சுண்டே அவனோட வாரியலைக் காட்டி. அது ஒண்ணு தான் இன்னும் பண்ணலே, பொழைக்கணும்னா அதுக்கும் தயாராத்தான் இருக்கேன்னேன்.

ஆனாக்க, அந்தச் சின்ன நகரத்திலே அப்படியான ஜோலியும் கிடைக்காத படியாலே, அதிகம் தாமதியாமல் பக்கத்தில் இருக்கப்பட்ட மகா நகரமான லண்டன் பட்டணத்துக்கு வந்து சேர்ந்தேன். இங்கே கும்பாரமா வேலை குவிஞ்சிருக்குன்னு நினைப்பு. சவுத் ஆம்டன் கறுப்பனும் அதான் சொன்னான்.

ரெண்டு நாள் அலைஞ்சு திரிஞ்சு அல்லாடி யாரோ கை காட்ட வார் ஆபீசுக்கு வந்து சேர்ந்தேன். புகைக் குழாயிலே புகையிலை அடைச்சு இழுத்து வலிச்சு புகைபிடிச்சபடி இன்பத்தோடு ஒரு அதிகாரி. அதிகாரின்னா எப்பவும் வெள்ளைக்காரன் தான். அட்டணக்கால் போட்டு உட்கார்ந்திருந்தான். என்னடா பயலேன்னு பார்வையிலேயே விசாரிச்சான். அடிமை வந்திருக்கேன் எஜமானே. கை கூப்பினேன்.

என் அழுக்குப் படிஞ்ச மிலிட்டேரி உடுப்பை ஒரு க்ஷணம் கவனிச்சான். கையிலே மடக்கிப் பிடிச்சிருந்த கசங்கிப் போன டிஸ்சார்ஜ் சர்ட்டிபிகேட்டையும் வாங்கிப் பார்த்தான். நீ இங்கே என்ன எழவெடுக்க வந்திருக்கே. உங்க தேசத்துக்குப் போக வேண்டித்தானே யுத்த பூமியிலேருந்து அனுப்பினது? சத்தமாக் கேட்டான்.

அது என் தப்பா? கப்பல் மாத்தி ஏத்தி விட்டுட்டானுகள்.

நீ இங்கிலீஷ் நாலு எழுத்து படிக்கத் தெரிஞ்சவன் தானே. என்ன ஏதுன்னு கேட்டு சரியானபடி பிரயாணம் பண்ண சொல்லித் தரணுமா?

என்னமோ தப்பு நடந்து போச்சு. எனக்கு இங்கே வேலை ஏதாவது கொடுத்தா நன்றி பாராட்டுவேன் எஜமானே. தோட்டி வேலை, தோட்ட வேலை, ரேக்ளா ஓட்டற ஜோலி, சீமாட்டிகளுக்கு எண்ணெய் தேச்சு முதுகு நீவி விடறது இத்யாதி.

அதுக்கெல்லாம் நாங்க இருக்கோம். நீ பொத்திண்டு போய்ச் சேரு.

அதுக்கு காசு?

தெருப் பொறுக்கு. ஜேப்படி பண்ணு. என்னை எதுக்கு இம்சை பண்றே?

எங்க மேலே க்ளோரின் வாயுவை அபிஷேகம் பண்ணின ஜெர்மன்காரங்க இந்த மாதிரி பிரகிருதிகள் ஆசனத் துவாரத்திலேயும் அதை நுழைச்சு லோக க்ஷேமத்துக்கு வழிவகுத்திருக்கலாம்.

நான் அதுக்கு அப்புறம் அந்த எழவெடுத்த வார் ஆபீஸ் படி ஏறவே இல்லை. பிரதேசம் பிரதேசமா கடை கடையா ஏறி இறங்கி வேலை கேட்டேன். கோவண்ட் கார்டன்னு பட்டணத்துலே கொத்தவால் சாவடி மாதிரி ஒரு மார்க்கெட்டு இருக்கு. உனக்கு கொத்தவாலும் தெரியாது, கோவண்டும் தெரியாதுடா வைத்தாஸே. தெரிஞ்சா மட்டும் என்ன, வெள்ளைக்கார அதிகாரி மெடல் குத்திவிடப் போறானா?

கையிலே இருந்த காசு ரொட்டியும், தேத்தண்ணியும், பன்னி இறைச்சி சாசேஜும் வாங்கித் தின்னு பசியாறினதுலே கொஞ்சம் கொஞ்சமாக் கரைஞ்சு பத்து நாள்லே ஐவேஜி சுத்தமாக் காலி. அப்புறம் வேறே வழியில்லாம தொப்பியை கையிலே பிடிச்சுண்டு விக்டோரியா டெர்மினஸ் ரயில்வே ஜங்க்ஷன் பக்கமா தரையிலே உட்கார்ந்து கையேந்த ஆரம்பிச்சேன். அது போன வருஷம் ஆகஸ்ட் மாசம்.

நம்புவியோ என்னமோ, இந்த ஆறு மாசத்துலே யாசகம் வாங்கறதுலே கைதேர்ந்த ஒருத்தனாகிட்டேன். வேலை பார்த்தா கிடைக்கிறதை விட எதேஷ்டமா கிடைக்கறது போ. ஒரு நாளைக்கு ஒரு பேட்டைன்னு வச்சுண்டு சுத்தி வந்து காசு தண்டி, தின்னது போக மிச்சத்தை இடுப்புக்கு அடியிலே தோல் சஞ்சியிலே வச்சு இறுக்கிப்பேன். அங்கே கைவைக்க எவனுக்கும் தோணாது. அட்டுப் பிடிச்சு இருக்கறதாலே தொழில்காரி கூட அண்ட மாட்டா. ஆக, பத்திரமா பணத்தோட பாலத்துக்கு அடியிலே படுத்துப்பேன். அதுவும் சுகமாத்தான் இருந்தது போ.

கொஞ்சம் வசதி வந்ததும் லண்டன் டவர் பக்கமா சேரிப் பிரதேசத்துலே ஒரு சின்ன குச்சுவீட்டுலே ஒண்டுக் குடித்தனமா ஜாகை மாத்தினேன். அங்கே யாருக்கும் நான் பிச்சை எடுத்து ஜீவிக்கிறவன்னு தெரியாது. தெரிஞ்சா மட்டும் என்ன குறைஞ்சு போறது? அவங்க எல்லாம் என்ன கவ்னர் உத்தியோகமா பார்க்கிற துரைகள்? கக்கூஸ் அலம்பறதுலே இருந்து ஆட்டுக்குக் காய் அடிக்கறதுவரை அத்தனை குற்றேவலும் செய்து பிழைக்கிற ஜனங்கள். எனக்கு வார் ஆபீஸ்லே உத்யோகம் வாங்கிக் கொடுத்திருந்தா நானும் அதெல்லாம் செய்து ஜீவிச்சிருப்பேன். போறது, அவனவனுக்கு விதிக்கப்பட்டது தானே நடக்கும்?

ஒண்டுக் குடித்தனத்துலே மருந்துக்குக் கூட ஒரு மொரிஷியஸ், பிஜிக்காரனோ, பாரத தேசத்து ஆசாமியோ கிடையாது. பல தேசத்துலே இருந்து வந்த பாமர கலப்பு இன மனுஷர்கள், ஆப்பிரிக்க வம்சாவளி ஜனங்கள் இப்படித்தான்.

இந்தக் கூட்டத்திலே தான் ஜேம்ஸ்னு ஒருத்தன் பழக்கம் ஆனான். வெள்ளைக்காரனுக்கே உரிய புருஷ லட்சணம். மொறிச்சுன்னு வஸ்திரம் தரிச்சு, மிடுக்கா நடந்து, பேசி, கவுரவமான தோரணை எப்பவும். சின்ன வயசுப் பையன். உன்னை விட நாலஞ்சு வயசு பெரியவனா இருப்பான்னு நினைக்கறேன். இவனுக்குப் பொறுத்த மட்டில் ஒரே ஒரு குறைச்சல். புள்ளையாண்டானுக்கு ஒத்தைக் கைதான். அருவாமணையிலே புடலங்காய் அரிஞ்சு தள்ளின மாதிரி வலது முழங்கைக்குக் கீழே இருக்கப்பட்ட பாகம் காணாமப் போயிருக்கும்.

அவனுக்கு நான் கரும்பு தேசத்துலே இருந்து வந்தவன்னு மாத்திரம் தெரியுமே தவிர பழைய புராணம் ஏதும் நான் சொல்லலே. அவனும் கேட்கலை. சொன்னாலும் அவனுக்கு அதெல்லாம் கேட்க பொறுமை ஏதும் இருக்கப் போறதில்லே.

ஜேம்ஸ் குடும்பத்தோட இருந்தான். குடும்பம்னு சொன்னா, அவன் பொண்டாட்டி மரியா. அப்புறம் மாமியார்க்காரி. அவ பெயர் எல்லாம் தெரியாது. டமாரச் செவிடு. சதா கையிலே ஏதோ போத்தல்லே உப்பை வச்சு மோந்து பார்த்துண்டு சகலரையும் தெய்வத்தையும் சபிச்சுண்டு குரிச்சி போட்டு உட்கார்ந்து புலம்பிண்டு இருப்பா. என்னைக் கண்டதும் தவறாம இப்போ எத்தனை மணின்னு கேட்பாள். தெரிஞ்சு என்ன ஆகப் போறது? ஆனாலும் சொல்லுவேன்,

கடியாரம் கூடப் புதுசா வாங்கிட்டேன். கூடவே வாட்ச்சை இடுப்பிலே தொங்க விட்டுக்கற ஒய்யாரமான செயினும். காசு கொஞ்சம் கையிலே சேர்ந்தா செலவழிக்க விதம் விதமா என்னவெல்லாம் தோண்றது பாரு.

இங்கத்திய பொண்கள் அதாவது நடுவயசு கடந்த ஸ்திரிகள் சிலபேர் வந்து என்னை ஆகர்ஷிக்கப் பார்த்தா. எனக்கு என்னமோ அலுத்துப் போச்சு போகமும் கழுதை விட்டையும். வயசான மணியமா இருக்கே. ஆடின ஆட்டமெல்லாம் போறாதா? இன்னும் கொஞ்சம் காசு சேர்ந்ததும் கப்பலேறி மதராஸுக்குப் போய் அங்கே கட்டையை வேகவிட வேண்டியதுதான்.

ஜேம்ஸ் என்ன வேலை பார்க்கிறான்னு தெரியலை. ஆனா அவன் பொண்டாட்டி மரியா இருக்காளே அந்தப் பொண்ணு கென்ஸிங்டன் வட்டாரத்திலே நாலஞ்சு பெரிய மனுஷாள் வீடுகள்லே எடுபிடி வேலை, பாத்திரம் துலக்கிப் பெருக்கி மெழுகறதுன்னு வீட்டு வேலைக்காரியாம். முகத்திலே எப்பவும் சிநேகிதமான சிரிப்பும் வாயிலே நல்ல வார்த்தையுமா இருக்கற அவளைப் பார்த்தாலே சந்தோஷமா இருக்கும். இது கிழட்டு வயசிலே வர்றது. காமக் கலப்படமில்லாதது.

நாலு நாள் முன்னாலே ஜேம்ஸ் தயங்கித் தயங்கி என் குச்சுக்கு வந்தான். என்ன விஷயம் ஜேம்ஸேன்னு கேட்டேன். தொழில் அபிவிருத்திக்கு ஒரு ஐம்பது பவுண்ட் கடனாத் தர முடியுமான்னு கேட்டான்.

நான் கொஞ்சம் யோசிச்சேன். இவனுக்காக இல்லாட்டாலும் இவன் பெண்டாட்டியோட நல்ல குணத்துக்காக பணம் கொடுக்கலாம். எதுக்கும் அவ கிட்டே சொல்லிட்டுத்தான் கொடுப்பேன். வசூலிக்க கஷ்டம் வராது பார்.

நீ என்ன தொழில் பண்றே ஜேம்ஸேன்னு கேட்டேன்.

வீடு வீடா கோழிமுட்டையும் தாரா முட்டையும் கருவாடும் விநியோகிக்கறதுன்னான். எங்கேயெல்லாம் விநியோகிப்பேன்னேன். லண்டன்லே வெஸ்ட்மினிஸ்டர்லே எங்கே எல்லாம் பாதாள ரயில் போறதோ அங்கே எல்லாம். முக்கியமா கென்சிங்டன், நைட்ஸ்ப்ரிட்ஜ் மாதிரி பெரிய மனுஷாள் இருக்கப்பட்ட பேட்டைகள்லே.

அவனுக்கு ஐம்பது பவுண்ட் கடன் கொடுத்தேன். வட்டி எட்டு சதவிகிதம். மாசாந்தரம் கூட்டு வட்டியா கணக்குப் போட்டு வசூலிக்க ஏற்பாடு.

எனக்கு ஒரு யோசனை. எத்தனை நாள் தான் பிச்சை எடுத்து காசு சேர்க்கறது? நாமும் இப்படி ஒரு வியாபாரத்திலே இறங்கினா என்ன?

அதுக்கு முன்னாடி ஸ்திதி விவரங்கள் தெரிஞ்சா தேவலைன்னு பட்டுது.

ஜேம்ஸே, நானும் உன் கூட ஒரு நாள் கூடமாட ஒத்தாசையா வரட்டான்னு கேட்டேன்.

அப்படித்தான் நான் கென்சிங்க்டன் போனது. மலையாளம் பேசற வெள்ளைக்காரச்சியைப் பார்த்தது.

(தொடரும்)

Series Navigation33 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 33 >>

This entry is part [part not set] of 33 in the series 20110424_Issue

இரா.முருகன்

இரா.முருகன்