இரண்டு கவிதைகள்

ராஜா


விழிமூடாதிருந்தால்

நெகிழ்ந்துபோய் நாயகன் நின்றிருந்தான்.
படியேறி வந்துகொண்டிருந்தது நாயொன்று.
நெருங்கி வந்ததும்-
நாயின் கண்களில்
ஒரு நுண்மாறுதலை கவனித்ததில்
வெளிறிவிட்டது நாயகன் முகம்.
விபரீதம் நிகழப் போகிறது
என்ற அனுமானத்தில்
விழிகளை இறுக்கி மூடிக்கொண்டேன்.
ஆர்வம் மேலிட
வீரம் வரவழைத்து
வெகு பிரயத்தனத்தில்
விழி திறந்தேன்.
அறைக்குள் ஊடுருவிய வெளிச்சத்தில்
கண்கள் கூசின.
விரையும் வாகன இரைச்சல்கள்
செவிப்பறைகளை அறைந்தன.

_____________________________________________________

பெயர் சொல்

அம்மா அப்பா இட்டபெயர் ராஜசேகர்
ஜெயந்தி மிஸ் இடிச்சதில் மிஞ்சியது ராஜா.

அன்றைக்கு பள்ளி நண்பர்களுக்கு ராசுக்குட்டி
இன்றைக்கும் மாமாவுக்கு பாசமாய் ராசு.

தமிழன்னை திருத்தி தமிழாக்கியதில் ராசா
திட்டித் தீர்த்த தோழிக்கு மாவுராசா.

அம்மாவுக்கு அஃறிணையாகி தங்கம்
அப்பாவுக்கு உயர்திணையாகி ராஜாங்க.

வயதொத்த நண்பனும் ராஜா.
வித்தியாசம் வேண்டி நான் இளையராஜா.

வசதிக்கேற்ப கசக்கியதில்
காட்டன் துணியாய் சுருங்கிப் போனேன்.
சுடிதார் காந்தமே! என்னெதிர் அமர்ந்ததில்
இரும்புத் துண்டாய் நெருங்கி வந்தேன்.

பாதிமுகம் திருப்பி என்னைப் பார்த்ததில்
இடது பக்கம் வேகமாய் துடித்ததடி.
பெயர்சொல்லி என்னை அழைத்ததில்
காதுப் பக்கம் வெடி வெடித்ததடி.

உன் உதடு பிரித்த என்பெயர்
கவிதையாய் காதில் விழுந்ததடி
உன் நினைவு சுமந்த என்மனம்
கழுதையாய் நீட்டிப் படுத்ததடி.

குழந்தை பிறந்தபின்னே பேர் வைப்பாங்க
இன்னும் அதானே உலக வழக்கம்
எம்பேர் கேட்டு புதுசா பிறந்தேங்க
ஒண்ணும் புரியல இதென்ன கலக்கம்.

என்னை புதிதாய் படைத்தாயே நீ பிரம்மாவா
பெயர்சொல்லி முதலில் அழைத்தாயே நீயென் அம்மாவா

பேரென்ன? உறவென்ன? ஒத்தி வைப்போம்
ஊரென்ன? உலகென்ன? காதலில் களிப்போம்.

____________________________________________

Series Navigation26 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 26 >>

This entry is part [part not set] of 40 in the series 20110206_Issue

ராஜா

ராஜா