அவரவர் வாழ்வு

ப.மதியழகன்



ஆயாசம் கொண்ட நிலவு
அமாவாசையன்று ஓய்வெடுக்கும்
பரிதியை மறைக்கும் முகில்
விலகாமலிருக்காது
நுதலில் பொட்டில்லை
ஆனால் அமங்கலியில்லை
கானகப் பாதையில்
விலங்குகளின் காலடித்தடங்கள்
அலையின் அழைப்பை
கரை ஏற்பதில்லை
தண்ணீர் எப்போதும்
ஓடவே முயல்கிறது
இலை உதிர்கிறது
மரத்தில் சலனமில்லை
மழை மண் பார்த்து
பெய்வதில்லை
துடுப்பில்லாத படகு
கரையைப் போய்ச் சேராது
சுனையில் ஊரும் நீரை
சுவைத்துக் குடிக்கும் மான்கள்
வானத்து சோபிதத்தை
யாரும் சொந்தம் கொண்டாட
இயலாது
அவரவர் தரப்பில்
அவரவர் நல்லவர்களே.

Series Navigation29 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 29 >>

This entry is part [part not set] of 37 in the series 20110306_Issue

ப.மதியழகன்

ப.மதியழகன்