ஏதுமற்றுக் கரைதல்

ந.மயூரரூபன்


நான் நடக்கின்ற பாதை
எரியமுடியாத இருளினடிக்கட்டைகளால்
கிழிபட்டிருந்தது.
ஒவ்வொரு காயக்கிடங்கிலும்
செந்நிறமுறிஞ்சிய நினைவுகளை
விழுங்கிய எறும்புகள்
பரபரத்தோடி விழுகின்றன.

பாதையின் முடிவற்ற வரிகளை
ஒவ்வொருவரிடமும் காவியபடி
ஊர்ந்துவருகின்றன சிவந்த எறும்புகள்.

உலரமுடியா அழுகையினீரம்
இருட்கட்டைகளிலிருந்து சிந்துகிறது.
ஓலச்சுவர்களின் வெறுமையில்
நாக்கறுந்த பல்லியொன்றினசைவு
எதுவுமற்றுக் கரைந்துபோகிறது.

நினைவுப்பாலையாகிவிட்ட
இந்த நிலத்திலிருந்து
காயக்கிடங்கில் எறும்புகள் மொய்த்த
என்னைப்பார்க்கிறேன்.
இருட்கட்டைகளினீரம் எங்கும்டர
ஏதுமற்றுக் கரைந்துபோகிறேன்.

-ந.மயூரரூபன்

Series Navigation<< பிறப்பிடம்காஷ்மீர் பையன் >>

This entry is part 78 of 43 in the series 20110529_Issue

ந.மயூரரூபன்

ந.மயூரரூபன்