அகம்!

சபீர்


இன்று
வியாழன்…
நேற்றுதான் சென்றது
வெள்ளிக் கிழமை,
எத்தனை
வேகமாய்
கடக்கிறது
இந்தியனின் இளமை
அமீரகத்தில்?!

எத்தனை
காலமல்ல
குடும்ப வாழ்க்கை
எத்தனை
தடவை
என்றாகிப்போனதே!

ஊரிலிருந்து
வந்த நண்பன்
உன்
நினைவுகள் மொய்க்கும்
பெட்டியொன்று தந்தான்.

அட்டைப்பெட்டியின் மேல்
எழுதியிருந்த
என் பெயர்
சற்றே அழிந்தது
நீ
அட்டைப் பெட்டி
ஒட்டிக் கட்டுகையில்
பட்டுத் தெறித்த உன்
நெற்றி பொட்டின் வியர்வையா
சொட்டுக் கண்ணீர் பட்டா?

அக்காள் கையால் செய்த
நார்த்தங்காய் ஊறுகாய்
உம்மா பெருவிரலால்
நசுக்கிக் காய்ந்த அப்பளம்
நூர்லாட்ஜ் பீட்ரூட் அல்வா
விகடன் ஜூ வி
நீ கலந்தரைத்த மசாலாப்பொடி
என
நான் கேட்ட பொருட்களோடு
பெட்டி முழுதும்
ஒட்டி யிருந்தன
நீயாக அனுப்பிய
பெருஞ்சோக பெருமூச்சும்
நிலைகுத்தியப் பார்வைகளும்…

Series Navigation37 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37 >>

This entry is part [part not set] of 40 in the series 20110522_Issue

சபீர்

சபீர்