குமரி எஸ். நீலகண்டன்
கண்களில் உணர்ச்சி கொப்பளிக்க விறுவிறுவென்று வேகமாக நடந்தான் விச்சு. முகம் கண்ணீரில் குளித்திருந்தது. பூ பறிக்கும்போது கையில் குத்திய முள் காயம் பழுத்து அதில் சீழ் வடிந்தது. மனதை அரித்து கொண்டிருக்கும் வலியில் மற்ற வலிகளெல்லாம் ஒரு பொருட்டாகவே இல்லை. மனது திசை தெரியாது சென்று கொண்டிருந்தது. அவன் கால்கள் ஊர் எல்லையைத் தாண்டி நடந்து கொண்டிருந்தன. அவன் செல்லும் திசை மனித நடமாட்டமே இல்லாத பகுதியாக இருந்தது. மழையோடு சேர்ந்து நீர் நிராகரித்த பகுதியானதால் அங்கு விவசாயமும் நடைபெறவில்லை. தாவரங்களும், தண்ணீரும் இல்லாததால் மேய்ச்சல் விலங்குகளைக் கூட அங்கு காண இயலாது. அங்கு நிறைவேற்றப் படாத ஒரு திட்டத்திற்காக வாங்கப் பட்ட பெரிய தண்ணீர் குழாய்கள் விரயமாக இடங்களை ஆக்ரமித்து கிடந்தன. அந்த குழாய்களில் ஒன்றினுள் விச்சு படுத்துக் கொண்டான். அவன் கன்னம் வழியாகப் பாய்ந்த கண்ணீர் அந்த தண்ணீர் குழாயினில் வடிந்து அது உண்டு சேமித்த வெப்பத்தின் வீரியத்தில் ஆவியாகி விட்டது. மனது புகைந்து கொண்டே இருந்தது.
விச்சு எதற்காக அழுகிறான். எப்போதும் அடிக்காத அம்மா அடித்துவிட்டாள். அதுவும் மிக கண்டிப்புடன். பொறுப்பில்லாதவன் என்றும் சொல்லிவிட்டாள். அந்த வார்த்தைகளின் வீரியம் மனதைக் கத்தியாய் அறுத்துக் கொண்டிருந்தது. பல மணி நேரங்கள் உணர்ச்சி பிழம்பாக அழுது அழுது , ஒருவித மயக்கத்தில் அந்த குழாயினுள் உறங்கிப் போனான் பத்து வயது விச்சு.
விச்சு படிக்கிறான். பக்கத்து அரசு பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பில் படிக்கிறான். இத்தோடு தினம் காலை நான்கு மணிக்கு எழுந்து ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து ஒரு பூந்தோட்டத்தில் பூ பறிக்க வேண்டும். அவனோடு அந்த கிராமத்து குழந்தைகள் ஏழெட்டுபேர் பூ பறிக்கச் செல்வார்கள். இவர்கள் எல்லோரையும் காலை நான்கு மணிக்கே பத்திரமாக அழைத்துச் செல்வது பதினைந்து வயது லக்ஷ்மியின் பொறுப்பாக இருந்தது. விச்சுவின் அப்பா காச நோயில் இறந்து விட்டார். விச்சுவின் தங்கைக்கு நான்கு வயது இருக்கும். விச்சுவின் அம்மா கூலி வேலைக்குப் போவாள். விச்சு பூ பறிக்கச்செல்வது காசிற்காக அல்ல. தண்ணீருக்காகத் தான். அவர்கள் பறிக்கும் பூவின் அளவைப் பொறுத்து முதலாளி ஒன்றோ இரண்டோ குடங்கள் தண்ணீர் கொடுப்பார். அந்தப் பகுதியில் பல இடங்களில் ஆழ்நீர் குழாய்கள் அமைத்தும் நிலத்தடி நீர் இல்லாமல் இருந்தது. அந்தத் தோட்டத்தில் மட்டும் ஆழ்நீர் குழாயில் ஒரளவு தண்ணீர் வரவு இருந்தது.
அந்த தோட்டத்தின் உரிமையாளரும் பூ பறிப்பதற்கான கூலியினை தண்ணீரைக் கொடுத்தே கழித்து விடுவார். குழந்தைகள் காலையில் பூ பறித்துச் சென்றபின் பெற்றோர்களும் உறவினர்களும் குடங்களோடு வந்து கூலியாக தண்ணீரைப் பெற்றுச் செல்வார்கள். சில நேரங்களில் முதலாளி அவர்கள் பறித்த பூவின் அளவைக் குறைத்துச் சொல்லி தண்ணீரின் அளவைக் குறைத்து ஏமாற்றி விடுவதும் உண்டு. அதை எதிர்த்தால் கிடைக்கிற தண்ணீரும் இல்லாமல் போய்விடும் என்ற அச்சத்தில் பேசாமல் இருந்துவிடுவதும் உண்டு.
பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்புவரை கூட இந்த பூ வயல் கிராமத்தில் தண்ணீருக்கு அப்படி ஒன்றும் சிரமம் இல்லை. பக்கத்து நகரங்களில் வயல்களும் தோட்டங்களும் அடுக்குமாடி கட்டிடங்களாக மாற நகரங்கள் வளரவும் விரியவும் தொடங்கின. பெரும்பாலான நிலப்பகுதிகள் காங்கிரீட் சிறைகளுக்குள் முடங்கிக் கிடந்தன. கடந்த வருடங்களில் ஆயிரக் கணக்கில் உருவான ஆழ்நீர் குழாய்கள் நிலத்தின் ஈரத்தை முற்றிலும் உறிஞ்சிவிட, மழையும் பொய்த்துவிட பூ வயல் கிராமம் பொலிவிழந்து வறட்சியின் பிடியில் வாடிக் கிடந்தது. உலகத்தின் எண்பது சதவீதம் நீராய் இருந்தும் நீரின்றி வருந்துகிறது இந்த கிராமம்.
பூ வயல் கிராமம் கூட தற்போது கிராமத்தின் அடையாளங்களை இழந்துதான் வருகிறது. மலையினில் மழைநீரால் பாறைகள் உருட்டப்பட்டு, பல வடிவங்களில் செதுக்கப்பட்டு ஆங்காங்கு கிடக்கும் அழகிய கற்கள் மட்டுமே பூ வயலை கிராமமாக நினைவுப் படுத்தும். மற்றபடி காங்கிரீட் தளங்கள் இங்கும் பூமியின்
இதயத்தை மூடத் துவங்கி விட்டன. காங்கிரீட் வீடுகளும் நிறைய வந்து விட்டன. தெருக்கள் சிமென்ட் தளங்களால் மூடப்பட்டு விட்டன. பல குடும்பங்கள் தண்ணீர் கஷ்டத்தால் ஊரைவிட்டு பல இடங்களுக்கு குடி பெயர்ந்து விட்டன. கொஞ்சம் ஏழை குடும்பங்கள் மட்டும் கடும் வறட்சியிலும் ஊரோடு ஒட்டிக் கொண்டிருக்கின்றன.
பணத்திற்காக வேலை செய்வார்கள். ஆனால் தண்ணீருக்காக வேலை செய்ய வேண்டியக் கொடுமை இந்த ஊரில்தான். அதிலும் பிஞ்சு குழந்தைகளை பூ பறிக்க அனுப்புவது கொடுமையிலும் கொடுமையாக இருந்தது. அதி காலையில் பூ பறிக்க சென்றுவிட்டு பின் பள்ளிக்கும் செல்ல வேண்டும். வீட்டு பாடம் எழுத நேரம் இருக்காது. ஆசிரியரின் பிரம்பால் அடி வாங்க வேண்டி இருக்கும்.
விச்சு அன்று பூ பறிக்கும் போதுதான் கைகளில் வேலியின் முள் தைத்தது. நிறைய பூக்கள் பறித்திருந்தான். ரத்தம் குபீரெனக் கொட்டியது. கொஞ்சம் மண்ணை எடுத்து ரத்தத்தின் பாதையை அடைத்தான். ஆனால் பூக்களெல்லாம் ரத்தத்தில் தோய்ந்திருந்தன. பூக்கள் விரயமானதாக்க் கருதி அன்று அவர்களின் கூலியான தண்ணீர் வழங்கப் படவில்லை. ஆனால் மண்ணின் தாக்கத்தால் அவனது கைப்புண் பெரிதானது.
விச்சுவிற்கு இரக்க குணம் அதிகம். சில நேரங்களில் காகங்கள் தாகத்தில் தண்ணீர் குழாயின் வாயைக் கொத்தி கொத்தி பார்க்கும். விச்சு உடனே தான் உழைத்து பிடித்த நீரை ஒரு சின்ன பாத்திரத்தில் வைத்து அந்த காகத்திற்கு கொண்டு வைப்பான்.
அன்று விச்சுவின் பக்கத்து வீட்டில் மரணம் நிகழ்ந்திருந்தது. விச்சுவின் அம்மா கூலி வேலைக்காக பக்கத்து ஊருக்குச் சென்றிருந்தாள். விச்சுவும் தங்கையும் மட்டுமே வீட்டில் இருந்தார்கள். அந்த இறந்து போன பக்கத்து வீட்டு தாத்தா விச்சுவை தூக்கி பல தடவை கொஞ்சி இருக்கிறார். பெண்களுக்கிடையே ஏற்பட்ட மன வேறுபாடால் இரு வீட்டுக்காரர்களும் இப்போது பேசுவதில்லை. பக்கத்து வீட்டு தாத்தாவின் இறுதி யாத்திரை தயாராகி கொண்டிருந்தது. அப்போது அங்கே ஒரு சலசலப்பு. அந்த சலசலப்பு இரு பிரிவினருக்கிடையே சண்டையாக உருவெடுத்தது. சண்டைக்கு காரணம் தண்ணீர். ஒரு சாரார் தாத்தாவை குளிப்பாட்டி இறுதிசடங்குகள் செய்ய வேண்டுமெனவும், இன்னொரு சாரார் எரிக்கும் பிணம்தானே குளிப்பாட்டத் தேவையில்லை எனக் கூற சண்டை வலுத்தது. ஒரு சாரார் பக்கத்து ஊரிலிருந்து தண்ணீர் கொண்டுவந்த பின் சடங்குகளைச் செய்யலாம் என்றனர். எதிரணியினர் நேரமாகிவிட்டதெனக் கூறி சடங்கினை முடிக்கக் கூறினர். வாக்கு வாதம் பெரும் சண்டையாக வலுத்தது.
இதையெல்லாம் கேட்ட விச்சு நேராக சண்டையிடும் கும்பலின் இடையே புகுந்தான். ‘மாமா! எங்க வீட்டிலே தண்ணி இருக்கு! எடுத்துக்குங்க!’ என்றான். சண்டை ஒரு முடிவிற்கு வந்தது. விச்சுவின் வீட்டு தண்ணீரில் தாத்தா குளிப்பாட்டப்பட்டு இறுதிச் சடங்குகள் நடந்தன.
வேலை முடிந்து வந்தாள் அம்மா. கஞ்சி வைப்பதற்காக அரிசியும் கொஞ்சம் காய்கறிகளும் அவள் கையில் இருந்தன. வீட்டிற்கு வந்ததும் பக்கத்தில் சண்டைக்காரி வீட்டு மரணமும், அங்கு ஏற்பட்ட குழப்பங்களையும் அறிந்தாள். விச்சு வீட்டுத் தண்ணீரை அவர்களுக்கு கொடுத்ததை அறிந்ததும் பூகம்பமானாள். விச்சுவின் முதுகினில் ஓங்கி அடித்தாள்.
‘ சீ! பொறுப்பில்லாத நாயே!’ என்றாள். விச்சு ஏற்கனவே பசியில் துடித்துக் கொண்டிருந்தான். அம்மா வந்த பின் சாப்பாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தான். ஆனால் அம்மாவின் கோபமும் அடியும்தான் அவனுக்கு கிடைத்தது. பக்கத்து வீட்டுக்காரியின் மீதிருந்த விரோதத்தையெல்லாம் விச்சுவிடம் தீர்த்தாள். விச்சு வருத்தத்தில் விறு விறுவென்று வீட்டை விட்டு நடந்துவிட்டான். அவள் வேலை செய்த இடத்திலிருந்து கொண்டு வந்த ஒரு பழம் மட்டும் மகளின் பசியைத் தீர்த்தது. சமைப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் வந்த களைப்பிலும் வருத்தத்திலும் மகளை அணைத்துக் கொண்டு படுத்து விட்டாள்.
தண்ணீர் குழாயில் அரை மயக்கத்தில் உறங்கி கிடந்த விச்சுவின் சிந்தனையில் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது. எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் தண்ணீர்தான். ஒரு தடவை பக்கத்து நகரத்திற்கு அம்மாவோடு சென்றது அவனின் நினைவில் வந்தது. அங்கு ஒரு பொது நீர் குழாய் திறந்திருந்ததும் நீர் விரயமாக தெருவில் வடிந்தோடியதையும் அம்மா அந்த குழாயை அடைத்ததையும் எண்ணி அழுதான். ஹோட்டலில் கை கழுவும் குழாயில் தண்ணீர் விரயமாக ஓடிக் கொண்டிருந்த்தை எண்ணி இப்போது அழுதான். பூமியெங்கும் காங்கிரீட் தளங்களால் மூடியதால் மழைத்தண்ணீர் கடல் நீரில் வடிந்து விடுவதால் பூமித்தாயின் இதயம் வறண்டு போய் இருக்கின்றது என்று அவனுடைய ஆசிரியர் கூறியது இன்னும் நினைவில் இருக்கிறது. .
முதுகில் ஏதோ ஒன்று ஊர்வதுபோல் இருந்தது. திரும்பி பார்த்தான். பெரிய பூரான். பயந்து எழுந்தான். பசி வயிற்றை பிய்த்தது. தண்ணீர் தாகம் வேறு. அடுத்த நாள் ஆகி இருந்தது. அம்மாவையும் தங்கையையும் எண்ணி பார்த்தான். அம்மாவும் தங்கையும் சாப்பிட்டிருப்பார்களாயென கவலையாக இருந்தது. வீட்டை நோக்கி நடக்கத் துவங்கினான். அதற்குள் விச்சுவைக் காணவில்லையென்று ஊரே அல்லோகலப்பட்டது.
அம்மாவும் தங்கையும் அழுது புலம்பினார்கள். அம்மாவின் அழுகை விச்சுவிற்கு அருகில் கேட்டது. அழுதுகொண்டே வேகமாக கால்களை எட்டினான். ஒரு கோணிப் பையின் மேல் கால்களை வைத்தான். அவன் அம்மா எட்டும் தூரத்தில் வந்து கொண்டிருந்தாள். அவளின் முன்பே அந்த நூறு அடி குழியினுள் புதைந்து கொண்டிருந்தான். அது ஆழ் குழாய் நீருக்காக போடப்பட்ட குழி. “ஐயோ! என் பிள்ளை! என் பிள்ளை!’ எனக் கத்தினாள்.
அந்த குழியைச் சுற்றி ஊரே திரண்டது. விச்சுவைக் காப்பாற்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆலோசனை கூறினார்கள். ஊரின் கதறல் விச்சுவிற்கு கேட்டது. பசி, மயக்கம், உடலில் ஏற்பட்ட பயங்கரமான சிராய்ப்பு காயங்கள், உடலை சுதந்திரமாக உதறிக்கூட சாக இயலாத அளவிற்கு சுற்றி இருக்கும் மண்ணின் இறுக்கம் என எல்லா வலிகளையும் விட அம்மா தன்னை பொறுப்பில்லாதவன் எனக் கூறிய வார்த்தைகள்தான் அவனுக்கு இன்னும் வலித்தது. அவனது கண்ணீரும் ரத்தமும் அந்த பூமிக்குள் சில துளி அளவிற்கு ஈரப்படுத்திக் கொண்டிருந்தன.
- ’ரிஷி’யின் கவிதைகள்:
- வழக்குரை மன்றம்
- மீன்பிடி கொக்குகள்..
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2
- புது திண்ணை
- ஈர வலி
- ஒரு கொத்துப் புல்
- சில மனிதர்கள்…
- இந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான பிரச்சனைகள்
- குழந்தைகளின் நலம் – சமுதாய நலவாழ்வின் அடித்தளம்! (ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளையின் கல்விப்பணி – ஒரு அறிமுகம்)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -2)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -2)
- ஜப்பான் புகுஷிமாவில் 2011 மார்ச் சுனாமியால் நாசமடைந்த நான்கு அணுமின் உலைகள் -1
- செல்வி இனி திரும்பமாட்டாள்!
- யுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள்
- தொலைந்து போன சந்தோசங்கள் – சைக்கிள்
- “தேசிய ஆலோசனைக் குழுமம்” தயாரித்துள்ள “மத வன்முறை மசோதா” – ஒரு கருத்தாய்வு
- போராட்டத்திலிறங்கும் இடம்பெயர்ந்த மக்கள்
- தாமரை இலையும் சின்னக்குத்தூசியும்
- செக்ஸிஸம், பெண்ணியம் – ஓர் ஆணின் குறிப்புகள்
- கோமாளி ராஜாக்கள்..
- மோனநிலை..:-
- பலூன்
- சொர்க்கவாசி;-
- பம்பரம்
- வழங்கப்பட்டிருக்கின்றதா?
- மிச்சம் !
- தக திமி தா
- இருள் போர்வைகளின் முடிச்சுக்கள்
- வட்டத்தில் புள்ளி
- வேரற்ற மரம்
- அடங்கிய எழுத்துக்கள்
- பண்பாட்டு உரையாடல்
- கலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம்
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -12
- இவர்களது எழுத்துமுறை – 40 பி.எஸ்.ராமையா.
- காரைக்குடி கம்பன் கழகத்தின் புதுமையான முயற்சி
- பிறப்பிடம்
- ஏதுமற்றுக் கரைதல்
- காஷ்மீர் பையன்
- பாதைகளை விழுங்கும் குழி
- பனியூறிய மேகங்கள் கவிந்த வேளிமலையின் உருவம்
- உறையூர் தேவதைகள்.